பாட்னா: பீகார் எம்எல்ஏவின் வீட்டில் குழாயை மட்டும் அடுத்தடுத்து திருடும் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) எம்எல்ஏ சட்டானந்த் சம்புத் என்ற லாலன் யாதவின் வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்தனர். அவர்கள் வீட்டின் கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த குழாயைத் திருடி தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘எம்எல்ஏவின் வீட்டின் பின்பக்க சுவரை ஓட்டை போட்டு திருடர்கள் உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் வீட்டின் கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த வாஷ்பேசினை உடைத்து அதில் பொருத்தப்பட்ட குழாய்களை மட்டும் பிடுங்கி எடுத்துச் சென்றனர். விலை உயர்ந்த பொருட்கள் எதனையும் திருடிச் செல்லவில்லை. இச்சம்பவம் குறித்து எம்எல்ஏவின் உதவியாளர் விகாஸ் யாதவ் அளித்த புகாரின் அடிப்படையில், எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்எல்ஏவின் உதவியாளர் விகாஸ் யாதவ் கூறுகையில், ‘கடந்த 2 நாட்களில் இரண்டு முறை திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
முன்பு திருட்டு சம்பவம் நடந்தபோதும் குழாயைதான் திருடிச் சென்றனர். சரியென்று, புதியதாக குழாயை பொருத்தினோம். ஆனால், மீண்டும் வீட்டின் சுவற்றை துளை போட்டு உள்ளே நுழைந்து குழாயை திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் இருக்கும் விலையுயர்ந்த பொருட்கள் எதனையும் அவர்கள் திருடிச் செல்லவில்லை. ஒவ்வொரு முறையும் எதற்காக குழாயை மட்டும் திருடுகிறார்கள் என்பது தெரியவில்லை’ என்று ஆதங்கத்துடன் கூறினார்.