சாத்தூர்: சாத்தூர் ரயில் நிலையம் அடிக்கடி இருளில் மூழ்குவதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சாத்தூர் ரயில் நிலையம் வழியாக டெல்லி, பெங்களூரு, கச்சிக்கூடா, மும்பை, சென்னை, திருவனந்தபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய பகுதிகளுக்கு தினசரி ரயில்கள் செல்கின்றன. பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் அதிகளவு ரயில்கள் வந்து செல்கின்றன. இதனை சாத்தூர், சிவகாசி, வெப்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் நடைமேடையில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் போகிறது.
இதனால் ரயில் நிலையம் இருளில் மூழ்கி வருகிறது. இதுபோன்ற நேரங்களில் பயணிகள் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே ரயில்வே நிர்வாகம் மின்சாரம் தடை ஏற்படும் போது நடைமேடைகளில் மின் விளக்குகள் எரிவதற்கு சோலார் மின் விளக்குகள் அல்லது ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.