ஆவடி: ஆவடி அருகே தனது கைக்குழந்தையை மடியில் வைத்து ஒரு தாய் நின்றபடி சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பசுமாடு தாயின் மடியில் இருந்து குழந்தையை சரமாரி முட்டி தள்ளியது. இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆவடி அருகே பட்டாபிராம், சோராஞ்சேரி கிராமத்தில் பூந்தமல்லி பாம்ஸ் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சோராஞ்சேரி கிராமத்தை சுற்றிலும் மாடுகளை வைத்திருக்கும் பலர், அவற்றை வீட்டில் வைத்து பராமரிக்காமல் சாலை மற்றும் தெருக்களில் நடமாட விட்டுவிடுகின்றனர். இந்நிலையில், பூந்தமல்லி பாம்ஸ் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நேற்று மதியம் ஒரு பசுமாடு புகுந்தது.
அங்கு சாலையோரமாக தனது கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு ஒரு தாய் வேடிக்கை காட்டியபடி சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். அங்கு துள்ளி குதித்தபடி வந்த பசுமாடு, குழந்தையை மடியில் வைத்து சோறு ஊட்டிக் கொண்டிருந்த தாயை விரட்டி விரட்டி முட்டி தள்ளியது. இதனால் அந்தத் தாய் பயந்தபடி கைக்குழந்தையுடன் அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்குள் தஞ்சமானார். இதுதொடர்பாக அங்குள்ள சிசிடிவி காமிராவில் அனைத்து காட்சிகளும் பதிவாகியிருந்தன. தற்போது அந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பட்டாபிராம் காவல் நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சோராஞ்சேரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரியும் அனைத்து மாடுகளையும் பிடித்து கோசாலையில் அடைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, கடும் அபராதம் விதிக்க பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.