* கதவு, ஜன்னல், கண்ணாடிகள் சேதம்
* பைக்கில் வந்த 2 பேருக்கு போலீஸ் வலை
வாணியம்பாடி: வாணியம்பாடியில் ரயில்வே ஊழியர் வீட்டு மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் கதவு, ஜன்னல், கண்ணாடிகள் உடைந்து சேதமானது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆபிசர்ஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் சந்திரன், ரயில்வே ஊழியர். இவரது மனைவி இனியவள் (52). இவர்களுக்கு குகன் என்ற மகனும், ஆர்த்தி மற்றும் பிரீத்தி என்ற 2 மகள்களும் உள்ளனர். சந்திரன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பணியின்போது இறந்துவிட்டார். எனவே அவரது பணி குகனுக்கு வழங்கப்பட்டு அவர் தற்போது சேலத்தில் பணியாற்றி வருகிறார். இரு மகள்களும் திருமணமாகி தங்கள் கணவருடன் வசிக்கின்றனர். இதனால் இனியவள் மட்டும் தனியாக தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு இனியவள் வீட்டின் மீது கம்பி சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாம்.
இந்த நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வீட்டின் ஜன்னல், கண்ணாடிகள், மின்விளக்குகள், கதவு உடைந்து சேதமானது. மேலும் இருசக்கர வாகனமும் சேதமானது. இந்த சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நெருப்பு மற்றும் புகை மண்டலமாக இருந்தது. அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி 2 செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள்வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் இனியவள் அதிர்ச்சியுடன் காணப்பட்டார். அவருக்கு ஆறுதல் கூறிய மக்கள் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். இதுகுறித்து வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அங்கு சிதறி கிடந்த வெடி துகள்கள், கம்பி ஆகியவற்றை கைப்பற்றி வெடியை வீசி சென்றது யார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியாக இருந்த பெண் வீட்டின் மீது நாட்டு வெடி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், இரவு நேரத்தில் இனியவள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்து பைக்கில் வந்த 2 பேர் ஹெல்மெட் அணிந்து கொண்டு வீட்டின் மீது நாட்டு ரக பட்டாசுகளை வீசியுள்ளனர். இந்த நாட்டு ரக பாட்டாசுகளை வீசியது யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அந்த மர்மநபர்கள் கைது செய்யப்படுவார்கள். மேலும் இதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்’ என்றனர்.