நியூயார்க்: தென் சீனக் கடல் ரோந்தின் போது அமெரிக்க விமானத்தின் மீது சீன விமானம் மோத முயன்ற சம்பவத்தில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. தென் சீனக் கடல் எல்லை விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. தென் சீனக் கடலில் எந்தவொரு உரிமையையும் அமெரிக்கா கோரவில்லை என்றாலும் கூட, அதன் நட்பு நாடுகளுக்கு உதவுவதற்காக ரோந்து பணியை மேற்கொள்கிறது. இவ்விவகாரத்தில் தென் சீனக் கடலை தனக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கோரி வருகிறது. இந்நிலையில் தென் சீனக் கடலில் வழக்கமான ரோந்து நடவடிக்கைகளை அமெரிக்க விமானப்படையின் பி-52 விமானம் மேற்கொண்டது.
அப்போது சீனாவின் ஜே-11 போர் விமானம் ஒன்று, அமெரிக்க விமானப்படை விமானத்தை இடைமறிக்க முயன்றதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ‘சீன விமானத்தின் வேகம் மிக அதிகமாக இருந்தது. இரண்டு விமானங்களுக்கும் இடையே 10 அடி தூரம் மட்டுமே இருந்தது. இரு விமானங்களும் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயத்தில் இருந்தது. சீன விமானத்தை ஓட்டிய விமானி, பாதுகாப்பற்ற மற்றும் தொழில் நுட்பமற்ற முறையில் விமானத்தை இயக்கினார். இரண்டு விமானங்களுக்கும் இடையே உள்ள தூரம் மிகக் குறைவாக இருந்ததால் மோதல் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் இரவு நேரத்தில் நடந்தது. சீனாவின் இந்த நடவடிக்கை சர்வதேச விமான பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து சீனா தரப்பில் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை.
சீன மாஜி பிரதமர் மரணம்
சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் (68) ஷாங்காயில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறும் வரை, ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது சக்திவாய்ந்த தலைவராக லீ கெகியாங் இருந்தார். கடந்த 2012 முதல் 2022ம் ஆண்டுக்கு இடையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும், சீன அரசின் பொருளாதார துறை அதிகாரியாகவும் இருந்து, பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். கட்சித் தலைமைக்கான போட்டியாளராக லீ கெகியாங் கருதப்பட்டதால், அதிபர் ஜி ஜின்பிங்கால் ஓரங்கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.