கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் மாயாற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் இப்பாலம் திறப்பு விழா காண உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டி செல்லும் சாலையில் தெப்பக்காடு பகுதியில் மாயாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த நூற்றாண்டு பழமையான ஆங்கிலேயர் காலத்து பாலம் வலுவிழந்ததால் கடந்த சில வருடங்களுக்கு முன் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் துவங்கியது. மூன்று வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த பணிகள் தற்போது முழுமை அடைந்துள்ளது. பாலத்தின் இருபுறமும் சாலையை இணைக்கும் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. அதிகாரப்பூர்வமாக போக்குவரத்து பாலம் திறக்கப்படாத நிலையில் ஒரு சில வாகனங்கள் அந்த வழியாக சென்று வருகின்றன.
பெரும்பாலான வாகனங்கள் மாற்றுப்பாதையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான சாலையில் இன்னமும் இயக்கப்பட்டு வருகின்றன. ஒற்றை வாகனம் மட்டுமே செல்லக்கூடிய பழைய பாலத்தின் அளவிலேயே புதிய பாலமும் கட்டப்பட்டுள்ள நிலையில் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் வாகன சவாரிக்காக வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் இந்த சாலையில் நடந்து செல்வது வழக்கம். பழைய பாலத்தில் வாகனங்கள் வரும்போது பயணிகள் உள்ளே நடந்து செல்ல முடியாது. ஆனால் தற்போது வாகனங்களை இயங்கும் அதே நேரத்தில் பயணிகளும் இருபுறமும் பாதுகாப்பாக நடந்து செல்லம் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டும் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்று வரும் வகையில் பாலத்தை அகலமாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள்,சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விடுமுறை காலங்களில் ஊட்டிக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தெப்பக்காட்டில் இருந்து ஊட்டி செல்வதோடு மசினகுடி பகுதியில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் மற்றும் தெப்பக்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் ஒரே நேரத்தில் இந்த சாலையில் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக இருந்தது. இதனால் இந்த பாலத்தை ஒட்டி செல்லும் கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.இந்தப் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலேயே பாலத்தை அகலமாக அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. இதற்கு வனத்துறை ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் பழைய அளவிலேயே குறுகிய பாலமாக அமைக்கப்பட்டு உள்ளதால் சீசன் மற்றும் விடுமுறை காலங்களில் வழக்கம்போல் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக இருக்கும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.