டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யும் குழுவில் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்ய ஒன்றிய அரசு மசோதா தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. தலைமை நீதிபதிக்கு பதிலாக அக்குழுவில் பிரதமர் பரிந்துரைக்கும் ஒன்றிய அமைச்சர் இருப்பார் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி அடங்கிய இக்குழுவில் தலைமை நீதிபதியை நீக்கி, பதிலாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒன்றிய அமைச்சர் இருப்பார் என புதிய மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, டெல்லி நிர்வாகத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க, உடனடியாக அவசர சட்டம் பிறப்பித்து தீர்ப்பை ஒன்றிய அரசு நீர்த்துப் போகச் செய்தது.