சென்னை: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. வெளியிட்ட அறிக்கை: ஒரு முறை பயன்படுத்தக் கூடிய சீன பிளாஸ்டிக் லைட்டர்களின் வருகையால் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த சூழலில், இதுபற்றி கடந்த 21.4.2022 அன்று அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி இருந்தேன். பிளாஸ்டிக் லைட்டர்களின் இறக்குமதியை ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும் என்று கடந்த 9.12.2022 அன்று மாநிலங்களவையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குரல் எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து ஒரு முறை பயன்படுத்தக்கூடிய சீன பிளாஸ்டிக் லைட்டர்களின் உதிரி பாகங்களுக்கு ஒன்றிய அரசு நேற்று முன்தினம் (13.10.2024) தடை விதித்துள்ளது. இந்த தடைஉடனடியாக அமலுக்கு வருவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநகரம் நேற்று அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும் என்பதிலும், இந்த தொழிலையே நம்பியுள்ள தீப்பெட்டி தொழிலாளிகளில் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்பதிலும் ஐயமில்லை. இதற்காக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.