நாம் அனைவரும் ஏறக்குறைய டீ லவ்வர்ஸ்தான். சென்னையைப் பொறுத்தவரை சுவையான டீ குடிப்பதற்காக இரவு நேரங்களில் பல கிலோமீட்டர் பயணம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அதுவும், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் முழு இரவுமே உணவுக்காகவும், தேநீருக்காகவும் அலைகிறவர்கள் அதிகம். அந்தளவிற்கு உணவு மோகமும் தேநீர் மோகமும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே தேநீருக்காக குறிப்பிட்ட தூரம் பயணம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். கோவை மக்களில் சிலர் டீ குடிப்பதற்காக ஊட்டிக்கே செல்கிறார்கள். அங்கு நிலவும் குளிரான சூழலில் ஒரு மிளகாய் பஜ்ஜியைக் கடித்தபடி பிளாக் டீ குடிப்பது வேற லெவல் அனுபவத்தைத் தரும். அதேபோல ஊட்டியில் வசிக்கும் சிலர் ஸ்பெஷல் டீ குடிப்பதற்காக அங்குள்ள ஹில்ஸ் ரெஸ்டாரென்ட் செல்கிறார்கள். இப்படி தேநீர்ப் பருகுவதை ஒரு கொண்டாட்ட நிகழ்வாக கருதுபவர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள்.
பிரிட்டிஷில் இருக்கிற பழமை வாய்ந்த பிஜி டிப்ஸ் எனும் தேயிலை நிறுவனம் அங்கு தயாராகும் தேயிலையின் சுவைக்காகவே பிரபலம் அடைந்திருக்கிறது.
உலகம் முழுவதும் பல லட்சம் மக்களால் சுவைக்கப்பட்ட சுவையான தேயிலை எனவும் அந்த தேயிலை பெயர் பெற்றிருக்கிறது. இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், அந்த நிறுவனத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தில் உலகின் விலை உயர்ந்த தேயிலை ஒன்றைத் தயாரித்தார்கள். அதாவது, சுவையான தேயிலைக் கொண்ட ஒரு டீ பேக் தயாரித்தார்கள். அந்த டீ பேக்கை சாதாரணமாக செய்யாமல் வைரத்தால் தயாரித்தார்கள். ஆமாம், அதுதான் அந்த டீ பேக்கின் சிறப்பே. சுமார் 280 வகையான வைரக்கற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த டீ பேக் ஒன்றை தயாரிக்க மூன்று மாதங்கள் வரை ஆகும். உலகில் விலையுயர்ந்த தேநீர் பட்டியலில் இந்த பிஜி டிப்ஸ் நிறுவனம் தயாரித்த டைமண்ட் டீ பேக்கும் இடம் பிடித்திருக்கிறது. அதாவது, ஒரு டைமண்ட் டீ பேக்கின் விலை 7500 பவுண்ட். நம்ம ஊர் மதிப்புப்படி அந்த டீ பேக்கை சுவைக்க வேண்டுமென்றால் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான பணம் கொடுத்து வாங்க வேண்டியது வரும். இந்த வகை டீ பேக்கை விற்று அதில் இருந்து கிடைக்கும் லாபத்தை ஏழை எளிய மக்களுக்கு செலவழிக்கிறார்களாம். அந்த வகையில் இந்த டீ பேக் மிகவும் மதிப்பு வாய்ந்த டீ பேக்காக மாறி இருக்கிறது.