Sunday, December 8, 2024
Home » திருப்பம் தரும் திருப்புகழ்!

திருப்பம் தரும் திருப்புகழ்!

by Lavanya

ஆதரித்து அருள்வான் ஆறுமுகன்

இறைவனின் பரிபூரண கருணையால்தான் நாம் ஆறறிவு பெற்ற உயர்திணை மனிதர்களாக இப்பூவுலகில் பிறந்துள்ளோம். ஆடாகவோ மாடாகவோ அஃறிணைகளாகவோ நாம் பிறந்திருந்தால், இவ்வுலகின் இன்பங்களை அனுபவிக்க முடியுமா? எத்தனை கோடி இன்பம் வைத்தாய்! எங்கள் இறைவா! இறைவா! இறைவா!

என்றார், அமரகவி பாரதியார். அதனால்தான் ஆனந்தக் கூத்திட்டு ஆண்டவனை வணங்கி மகிழ்கிறார். இப்பிறப்பில் மானிட உடம்பைத்தந்த இறைவனுக்கு மனதார நன்றி செலுத்துவதுதான் இருகைகளையும் தலைக்கு மேலே வைத்து கூப்பியபடி தரையில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது. சாஷ்டாங்க நமஸ்காரம் என்றால் இருகால், இருதோள், இருகை, நெற்றி, மார்பு என்ற எட்டு அங்கங்களும் நிலத்தில்தோய விழுந்து வணங்குவது.

‘‘உன் அடி இணை உறப்பணிந்திலன்’’ என்று ‘உற’ என இரண்டு எழுத்திலே இவ்வளவு பெரியவிஷயத்தைப் பொதிந்து வைக்கிறார், அருணகிரியார். பாவனையாக
கும்பிடு போடாமல், பரிபூரண சரணாகதியாக தரையில் விழுந்து உள்ளார்ந்த பக்தியுடன் ஆண்டவனைப் பணியும் பக்தர்களைக் கருணையுடன் காத்து அருள்புரிகிறார், கந்த பெருமான் என்பதை ‘ஏவினை நேர் விழி’ எனத் தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழிலே தெரிவிக்கின்றார் அருணகிரிநாதர்.

“ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை நெறிணோ
ஈனனை வீணனை ஏடெழுதா முழு
ஏழையை மோழையை அகலாநீலர்
மாவினை மூடிய நோய்மணியாளனை
வாய்மை இலாதனை இகழாதே
மாணிநூபுர சீதள தாள் தனில்
வாழ்வுற ஈவதும் ஒரு நாளே!
நாவலர் பாடிய நூலிசையால் வரு
நாரதனார் புகல் குறமாதை
நாடியே கானிடை கூடிய சேவக
நாயக மாமயில் உடையோனே!
தேவி மனோன்மணி ஆயிபராபரை
தேன் மொழியாள் தருகிறியோனே!
சேணுயர் சோலையின் நீழலிலே திகழ்
சீரலை வாய்வரு பெருமானே!

சூரபத்மனை வெற்றி கொண்ட பிறகு, சுப்ரமணியர் அருள்பாலிக்கும் அரிய தலமாக திருச்செந்தூர் விளங்குகின்றது. எதிர்த்த சூரபத்மனையே வாழவைத்த கருணைக் கடவுளாக
கந்தன் விளங்குகின்றார். தீயவனையே தூயவன் ஆக்கிய முருகன், பக்தர்
களைப் பாதுகாக்காமல் இருப்பாரா?

“மாதரை மேவிய ஏதனை, மூடனை, நெறி பேணா
ஈசனை, வீணனை, ஏழைமை, மோழையை இகழாது ஏற்றுக்கொள்க!’’
ஆதரித்து அடியேனுக்கும் அருள்புரிக என மேற்கண்ட திருப்புகழில் உருகி, நைந்து பாடுகிறார் அருணகிரியார்.

‘‘மாமணி நூபுரசீதரள தாள் தனில் வாழ்வுற ஈவதும் ஒரு நாளே’’
என்னும் வரிகளில், நின் பாதமே அடியேனின் பற்றுக்கோடு, என சரணாகதி ஆகி கடையேனுக்கும் கடைக்கேற்றம் தந்து ஆள்க! என வேண்டுகிறார்.
“தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவார் என்கை
ஆயுவும் வேண்டுகொல்லோ? அடுசமர் அந்நாட் செய்த
மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள் பெற்று உயர்ந்தான்’’

என ஆறுமுகப் பெருமானின் வரம்பிலா அருளாற்றலை கந்தபுராணச் செய்யுளில் வியந்து விவரிக்கின்றார் கச்சியப்பர். எதிர்த்த சூரபத்மனையே சேவலும் மயிலுமாக ஆக்கி ஏற்றுக்கொண்ட அளப்பருங்கருணையாளர் ஆறுமுகப் பெருமான்! ஆற்றில் தண்ணீர் பருகச் செல்லும் ஒருவனுக்கு, அந்த நதி நீரே அவன் கைகளில் உள்ள அழுக்கை நீக்கி சுத்தம் செய்து கொள்ள உதவுகிறது. மேலும், அந்நீரே அவன் தாகத்தையும் தணிக்கிறது. அவ்வண்ணமே முருகனின் திருவருளே அரக்கனின் தீமையையும் போக்குகிறது. அவனை தூய்மையிலும் கொண்டு சேர்க்கிறது. அதனால்தான் கந்தனை வாழ்த்தும் கவிதைகள் முருகப் பெருமானின் மூவிருமுகங்களையும், ஆறிருதடந்தோள்களையும் போற்றுவதோடு நின்று விடாமல் சேவலையும் மயிலையும் சேர்த்துப் போற்றுகிறது.

“மூவிரு முகங்கள் போற்றி!
முகம்பொழி கருணை போற்றி
சேவலும் மயிலும் போற்றி!
திருக்கை வேல் போற்றி!’’
– என்கிறது துதிப் பாடல்.

இத்திருப்புகழின் பிற்பகுதி நாரதர், வள்ளிநாயகி, அம்பிகை என மூவரின் புகழ் பேசுகின்றது. முருகப் பெருமானைப் போற்றிய முனிவர் நாரதர் என்பதை திருப்பரங்குன்ற சந்நதியிலே நாம் புரிந்துகொள்ளலாம். ஏனென்றால் பரங்குன்றின் மூலவர் கல்யாண கோலத்தில் தெய்வயானையுடன் நாரதரும் அருகே விளங்க காட்சி தருகிறார்.
நாரதர் முருகனிடம் மொழிகின்றார்:

‘‘வள்ளி நாயகி தினைப்புனம் காத்து வருகின்ற குறச் சிறுமியாக உள்ளாள். அவள்தான் திருமாலின் ஆனந்தக் கண்ணீரில் உருவான சுந்தரவல்லி நீசென்று அவளுக்கு உன் திருவுருவம் காட்டி திருமணம் புரிந்து கொள்’’ என்கிறார். இச்செய்தியையே;
‘நாரதனார் புகல்குறமாதை நாடியே
கானிடை கூடிய சேவக!’
– என பாடுகிறார் அருணகிரியார்.

முருகப் பெருமானை ஈன்றெடுத்த
அம்பிகையை பல இடங்களில் தம் திருப்புகழில் ஏற்றிப் போற்றுகிறார் அருணகிரிநாதர். தனியாக அம்பிகையின் புகழ் பாடிய புலவர்களும் அருணகிரியார் போல் அன்னையின் நாமாவளியை அருவிபோல பொழிந்தது இல்லை. தேவி பாகவதம், அபிராமி அந்தாதி போன்ற சாக்த நூல்களிலும் அருணகிரியார் பாடிய பராசக்தியின் பெயர்ப் பட்டியலைப் பார்க்க முடியாது.

“குமரி, காளி, வராகி, மகேஸ்வரி
கவுரி, மோடி சுராரி நிராபரி
கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி’’
– என பாடுகிறார்.
இப்பாட்டில்;
``தேவி, மனோன் மணி, ஆயி, பராபரை
தேன் மொழியாள் தரு சிறியோனே’’
– என்று போற்றி.

திருச்செந்தூரின் எழில் மிகு பொழில் சூழும் இயற்கைச் சுழலையும் வாழ்த்தி, இத்திருப்புகழை நிறைவு செய்கிறார் அருணகிரி.

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi