நன்றி குங்குமம் தோழி
நம்மில் பலர் வித்தியாசமான உணவுகளை சுவைத்துப் பார்க்க விரும்புவார்கள். அப்படி நினைப்பவர்கள் நாடு விட்டு நாடு சென்றும் கூட பல வெரைட்டியான உணவுகளை சாப்பிடுவதற்கு தயாராக இருப்பார்கள். அதேபோல, அந்தந்த ஊரின் பாரம்பரிய உணவுகளை அதே இடத்திற்கு சென்று சாப்பிடும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இருக்கிற உணவுகள் சுவையிலும் ஆரோக்கியத்திலும் தனித்தன்மை வாய்ந்தது மட்டுமில்லாமல், அந்த உணவு உருவான கதையிலுமே சுவாரஸ்யம் நிறைந்திருக்கும். அப்படி சுவாரஸ்யமும் பாரம்பரியமும் நிறைந்த உணவுகளில் ஐரோப்பிய உணவுகளும் அடங்கும்.
அப்படிப்பட்ட பாரம்பரிய ஐரோப்பிய உணவுகளை சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறது ‘பேசில் வித் எ ட்விஸ்ட்’ என்கிற உணவகம். சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலையில் இருக்கிற இந்த உணவகத்திற்கு உணவுப்பிரியர்களும் சுற்றுலாப் பயணிகளும் சாப்பிடுவதற்கு முந்துகிறார்கள். சென்னையில் வெளிநாட்டுப் பாரம்பரிய உணவுகளை தரும் உணவகங்களில் இந்த உணவகமும் முக்கியமாக இருக்கிறது.
‘‘ஐரோப்பியர்களின் உணவு முறையையும் அவர்களது விருப்ப உணவுகளையும் சென்னைக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த உணவகத்தை துவங்கினேன்’’ என்கிறார் உணவகத்தின் உரிமையாளர் பாகீரதி.அவர் பேசும்போது, ‘‘எனக்கு சொந்த ஊர் காரைக்கால் பக்கம். ஒரு கிராமம். சென்னைக்கு வந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது.
கல்லூரி படிப்புகள் முடித்த பிறகு தனியார் கம்பெனியில் உயர் பதவியில் பணி. ஒரு கட்டத்திற்கு மேல் பார்த்து வந்த வேலையும் பிடிக்கவில்லை. சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும். அதுவும் நமக்குப் பிடித்த அனைவரும் பயனடைகிற வேலையாகவும் இருக்க வேண்டும் என்று யோசித்தேன். அப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் நண்பர்களோடு உத்ரகாண்டிற்கு சென்றேன். உடன் வந்திருந்த வெளிநாட்டு நண்பர்களோடு ஒரு உணவகத்தில் சாப்பிட சென்றோம். அப்போது ஐரோப்பிய நண்பர் ஒருவர் என்னிடம், ‘சென்னையில் ஐரோப்பிய உணவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு உணவகம் ஆரம்பிக்கலாமா’ என்றார். அதுதான் இந்த உணவகம் தொடங்குவதற்கு அடித்தளம்.
அவர் சொன்னதை யோசித்து பார்த்தேன். எனக்கும் சரியாக பட்டது. வீட்டில் சொன்ன போது, ‘உன்னால் ஒரு உணவகத்தை எடுத்து நடத்த முடியுமா?’ என்று கேட்டார்கள். முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த உணவகத்தை ஆரம்பித்தேன். இப்போது பத்து வருடங்களுக்கு மேலாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறேன். இது ஐரோப்பிய உணவகம் என்பதால் அதே பாரம்பரிய முறையில் உணவினை கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் என் ஐரோப்பிய நண்பரின் உதவியுடன் அங்கிருந்து இரண்டு செஃப்களை இந்த உணவகத்தில் நியமித்தேன்’’ என்றவர், இங்கு பரிமாறப்படும் உணவுகள் குறித்து பகிர்ந்தார்.
‘‘நமது உணவகத்தில் ஐரோப்பிய உணவுகளோடு மெக்ஸிகன் மற்றும் இத்தாலியன் உணவுகளும் கொடுத்து வருகிறோம். என்னதான் மாடர்ன் உணவுகள் வந்தாலும் ஐரோப்பியர்கள் பாரம்பரிய உணவுகளைதான் அதிகம் விரும்புகிறார்கள். அவர்களது உணவில் பெரும்பாலும் காய்கறிகள் அதிகம் சேர்க்கப்பட்டு இருக்கும். அதுபோக, அவர்களின் முக்கிய உணவில் கண்டிப்பாக அசைவம் இடம் பெற்றிருக்கும். மேலும் அவர்களின் உணவில் மசாலாக்கள் அதிகம் இருக்காது. உதாரணத்திற்கு நாம் அசைவம் சமைக்கும் போது அதில் மசாலாக்கள் மற்றும் இஞ்சி, பூண்டு இல்லாமல் சமைக்க மாட்டோம். அது உணவிற்கு புது சுவையினை கொடுக்கும்.
ஆனால், ஐரோப்பியர்கள் அசைவத்தை சமைக்கும்போது அதில் அந்த அசைவத்தின் சுவை மட்டும் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். அப்போதுதான் சாப்பிடக்கூடிய உணவின் முழுமையான சுவையை உணர முடியும் என்பார்கள். நம்முடைய உணவில் காரம் அதிகமாக இருக்கும். அரேபிய நாடுகளில் பல உணவுகளில் இனிப்புச் சுவை வேண்டும் என்பதால் அதற்கான சாஸ்களை உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.
ஐரோப்பிய உணவுகளில் எல்லா சுவையுமே மிகவும் அளவாகத்தான் இருக்கும். உப்பு, இனிப்பு, காரம் என அனைத்துமே குறைவாக இருக்கும்படிதான் உணவுகளை தயாரிப்பார்கள். நாம் சாப்பிடக்கூடிய அந்த உணவின் உண்மையான சுவையைத் தவிர வேறு எந்த சுவையும் அவர்கள் விரும்பமாட்டார்கள். அசைவம் மட்டுமில்லை, காய்கறிகள் கொண்டும் பல வெரைட்டியான உணவுகளை சமைத்துச் சாப்பிடுகிறார்கள்.
எங்க உணவகத்திலும் ஐரோப்பிய உணவுகளின் சுவை மாறாமல், அதே சமயம் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த வகையில்தான் உணவுகளை சமைத்து தருகிறோம். மெக்ஸிகன் ஸ்டைல் சூப், சாலட், பீட்சா, பாஸ்தா, டெசர்ட்ஸ் என அனைத்து உணவுகளையும் வழங்கி வருகிறோம். அதேபோல, லேம்ப் சச் (lamb sach), ஸ்டேக் (steaks), கார்லிக் ப்ரான்ஸ், சிக்கன் பார்மஜினா, வெஜ் ப்ளோரன்டீன், இத்தாலியன் வெஜ் அல்பார்னோ என ஐரோப்பியர்கள் விரும்பும் பல வகையான உணவுகளையும் கொடுத்து வருகிறோம்.
இதில் பல வகையான உணவுகளில் நறுமணப் பொருட்கள் சேர்த்து சமைப்பார்கள். அவர்கள் சாப்பிடுகிற அரிசி சோற்றில் கூட சில மூலிகைப் பொருட்களை சேர்த்து சமைப்பது அவர்களின் வழக்கம். நாம் எப்படி சோற்றுக்கு குழம்பு, கூட்டு என்று சாப்பிடுவோமோ அதேபோல அவர்கள் அசைவத்திற்கு சைட் டிஷ் ஆக சோற்றை வைத்து சாப்பிடுவார்கள் இங்கு கிடைக்கும் பீட்சா, பாஸ்தாவில் கூட பல வெரைட்டிகள் இருக்கின்றன. எங்க உணவகத்தின் ஸ்பெஷாலிட்டியே ஆர்டர் கொடுத்த பிறகுதான் சமைக்கவே ஆரம்பிப்போம். அப்படி செய்யும்போது அதன் அசல் சுவையில் ஆரோக்கியமான உணவினை கொடுக்க முடிகிறது. மேலும், அவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் முக்கியப் பொருட்களான பேசில், தைம், தில், ரோஸ்மேரி, ஒரிகானோ, கேல், செலரி, லீக்ஸ் என அனைத்துமே உணவில் சேர்த்து பாரம்பரிய முறையில் தயாரிக்கிறோம். திரமிஸு, சீஸ் கேக், பக்லாவா ஐஸ்க்ரீம் என ஐரோப்பிய இனிப்புகளும் இங்குண்டு.
பெரும்பாலான ஐரோப்பிய உணவுகளை சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் இங்கே கிடைக்கிறது. அவ்வாறு கிடைக்காத பொருட்களை மட்டும் வெளிநாடுகளில் இருந்து வரவைக்கிறோம். ஒரு உணவை உண்மையாக செய்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் நாங்கள் செய்கிறோம். உணவில் கவனமும் சுவையில் அக்கறையும் இருப்பதால்தான் இந்த உணவகத்தை பத்து வருடங்களாக சக்சஸாக நடத்தி வர முடிகிறது’’ எனக் கூறும் பாகீரதி, தன்னைப்போலவே உணவு சார்ந்து தொழில் செய்ய ஆர்வம் இருக்கும் பெண்களை அவரே அவரது உணவகத்தில் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு உணவகம் அமைப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறார்.
தொகுப்பு: ச.விவேக்
படங்கள்:ஆ.வின்சென்ட் பால்