நன்றி குங்குமம் தோழி
புடவைக் கட்டுவது என்பது ஒரு கலை. அந்தக் கலையையே தன் தொழிலாக மாற்றி லண்டனில் தனக்கென்று ஒரு அடை யாளத்தினை ஏற்படுத்தி வருகிறார் அமலா ஜனனி. இவர் லண்டனில் அழகுக் கலை மட்டுமில்லாமல் சாரி டிரேபிங்கும் செய்து வருகிறார். இதுதான் தன் தொழிலாக எதிர்காலத்தில் மாறப்போகிறது என்று அறியாமல் அதை பொழுது போக்காக செய்து வந்துள்ளார் அமலா.‘‘நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் இலங்கையில்தான். அங்கு யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவில் பிறந்தேன்.
அங்குதான் 9ம் வகுப்பு வரை படிச்சேன். எனக்கு அம்மா, அப்பா இல்லை. எனக்கு 2 வயசு இருக்கும் போது அம்மா தவறிட்டாங்க. அதன்பிறகு 2007ல் இலங்கையில் ஏற்பட்ட பிரச்னையின் போது அப்பா குண்டடிப்பட்டு இறந்தார். அதன் பிறகு நான் யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோமில்தான் பத்தாம் வகுப்பு படிச்சேன். அந்த சமயத்தில் என் அண்ணன் லண்டனுக்கு வந்துட்டார். அவரைத் தொடர்ந்து நானும் மாணவர் விசாவில் லண்டனுக்கு வந்தேன். லண்டன் வந்த பிறகு அங்கு வேலை பார்த்தேன். அப்போது கூட நான் அழகுக் கலையில் எனக்கான ஒரு தொழிலை அமைத்துக் கொள்வேன் என்று நினைக்கவில்லை. எனக்கு ஒரு பழக்கம் உண்டு.
நமக்குள் எவ்வளவு திறமை இருந்தாலும், நம்மைப் பற்றிய முதல் அபிப்ராயம் நம் தோற்றத்தில்தான் வெளிப்படும். அதனால் எந்த உடை உடுத்தினாலும் மிகவும் நேர்த்தியாக இருக்க வேண்டும்னு விரும்புவேன். குறிப்பாக புடவை கட்டினால் அதில் உள்ள மடிப்புகள் எல்லாம் அழகாக எடுத்து கட்டுவேன். நான் வேலை பார்க்கும் இடத்தில் பலரும் நான் புடவைக் கட்டும் நேர்த்தியை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். மறுநாள் புடவைக் கட்டப் போவதாக இருந்தால் முதல் நாளே புடவைக்கான மடிப்புகள் எல்லாம் எடுத்து ஐயர்ன் செய்து வச்சிடுவேன்.
அப்பதான் மறுநாள் கட்டும் போது, பார்க்க அழகாக இருக்கும். நான் எனக்கு மட்டுமில்லை யாராவது என்னிடம் புடவை கட்டித் தரச் சொன்னால், அவர்களுக்கும் அழகாக கட்டிவிடுவேன். அது எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. எனக்கு இப்படி அழகாக புடவைக்கட்ட சொல்லிக் கொடுத்தது என் அக்காதான். அவங்க பள்ளியில் வேலை பார்த்ததால், புடவையை ரொம்பவே அழகாக கட்டுவாங்க. அவங்க கட்டுவதைப் பார்த்து நானும் அவர்களிடம் உடுத்த கற்றுக் கொண்டேன். மேலும் புடவை கட்டுவதில் மட்டுமில்லை மற்றவர்களுக்கு அழகாக கட்டி விடவும் எனக்கு பிடிச்சிருந்தது.
இங்கு மாடர்ன் உடை அணிந்தாலும் அவ்வப்போது புடவையும் கட்டிக் கொள்வேன். அதைப் பார்த்து நான் வேலை செய்யும் இடத்தில் அவங்களுக்கும் கட்டி விடச் சொல்லி கேட்பாங்க. நானும் கட்டி விட்டு இருக்கேன். 2020 வரை இதுதான் என்னுடைய ெதாழிலாக மாறப்போகிறது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் எவ்வளவு காலம்தான் மற்றவரிடம் வேலை பார்ப்பது, சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் என்ன செய்வதுன்னு எனக்கு தெரியல. அதே சமயம் நான் ஆரம்பிக்கும் தொழிலுக்கு பெரிய அளவில் போட்டி இருக்கக் கூடாது, தனித்து இருக்க வேண்டும் என்று நினைத்தேன்’’ என்றவர், மேக்கப் துறையை தொழிலாக தேர்வு செய்தது பற்றி கூறினார்.
‘‘நான் லண்டனில் லிவர்பூல் என்னுமிடத்தில்தான் வசித்து வந்தேன். இங்கு திருமணம் அல்லது வீட்டில் ஏதாவது நிகழ்வு ஏற்பட்டால் லண்டனில் இருந்துதான் மேக்கப் கலைஞர்களை வரவழைப்பார்கள். காரணம், இங்கு நன்கு பயிற்சி பெற்ற மேக்கப் கலைஞர்கள் கிடையாது. அவர்கள் நான்கு மணி நேரம் பயணம் செய்து வரணும். அதற்கான கட்டணம் மற்றும் மேக்கப் செய்ய என ஒரு தனிப்பட்ட விலை நிர்ணயிப்பாங்க. அப்படி இருக்கும் போது, நாம் ஏன் அந்தத் தொழிலை செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது.
எனக்கு புடவைக் கட்ட தெரியும். அதனுடன் மேக்கப்பினை சேர்த்து செய்தால், கூடுதல் வருமானம்தானே என்று எண்ணினேன். மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல் குறித்த பயிற்சி எடுத்தேன். பயிற்சி முடித்ததும் உடனே ஆர்டர் கிடைக்கும்னு நினைச்சேன். ஒரு வருடத்தில் இரண்டு ஆர்டர்தான் வந்தது. காரணம், என்னை அங்கு யாருக்கும் தெரியாது. நான் இந்த வேலை செய்வேன் என்று மக்களுக்கு முதலில் தெரியப்படுத்தணும். நான் சோஷியல் மீடியாவிலும் இல்லை. மாடல் போட்டோ ஷூட்டும் செய்ததில்லை. இதற்கிடையில் எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்ததால், என்னால் இதில் முழு கவனம் செலுத்த முடியாமல் போனது. ஒரு வருடம் பிரேக் எடுத்தேன். அதன் பிறகு முழு மூச்சாக இதில் இறங்க ஆரம்பித்தேன். என் கணவர் எனக்கு முழு சப்போர்ட் அளித்தார்.
சமூக வலைத்தளத்தில் புடவைக் கட்டுவது மற்றும் மேக்கப் போடுவது குறித்த வீடியோக்களை பதிவு செய்தேன். பலருக்கும் என்னைப் பற்றி தெரிய வந்தது. ஆர்டர்கள் வரத் துவங்கியது. முதலில் சாரி டிரேபிங்கான ஆர்டர்தான் நிறைய வந்தது. காரணம், நான் ஒவ்வொரு முறை சாரி டிரேபிங் வீடியோ போடும் போது அதில் சின்னச் சின்ன டிப்ஸ்களையும் பதிவு செய்வேன். அது பலருக்கு பிடித்து இருந்ததால், என்னை நாடி வரத் துவங்கினார்கள். சிலர் புடவையை அழகாக மடித்து தரச்சொல்லி கேட்டார்கள். அவர்களின் உடல் அமைப்பிற்கு ஏற்ப அழகாக பிளீட் எடுத்து மடித்து கொடுப்பேன். அதை அவர்கள் அப்படியே உடுத்தினால் போதும். புடவைக்கும் முக்கியம் பிளீட் எடுப்பது தான். அதை சரியாக எடுத்தால்தான் புடவையைக் கட்டும் போது பார்க்க அழகாக இருக்கும்’’ என்றவர், இதற்கான பயிற்சியும் அளித்து வருகிறார்.
‘‘நான் ஆன்லைனில் வீடியோ பதிவு செய்வதைப் பார்த்து பலர் தங்களுக்கும் சொல்லிக் கொடுக்கும்படி கேட்டனர். அவர்களுக்காக முதலில் ஆன்லைன் முறையில் புடவை டிரேபிங் குறித்து பயிற்சி அளித்தேன். அதன் பிறகு நேரடி வகுப்பும் எடுக்க ஆரம்பித்தேன். தற்போது மாஸ்டர் கிளாஸ் எடுக்கிறேன். அதாவது, ஒரு இடத்தில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளிப்பது. தற்போது லண்டனில் செய்து வருகிறேன். அடுத்து இந்தியா மட்டுமில்லாமல் மற்ற நாடுகளிலும் இதனை எடுக்கும் எண்ணம் உள்ளது.
ஆரம்பத்தில் லண்டனில் நான் பயிற்சி அளித்த போது, யார் முன்வருவார்கள் என்று பயந்தேன். காரணம், அங்கு பெரும்பாலும் பலரும் மாடர்ன் உடைகளைதான் விரும்புவார்கள். ஆனால் தற்போது பலர் விழாக்களுக்கு புடவையை உடுத்த விரும்புகிறார்கள். மேலும் திருமணம் போன்ற நிகழ்வுக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட புடவைகளை அழகாக மடித்து தரச்சொல்லி கேட்கிறார்கள். குறிப்பாக லண்டனில் வசிக்கும் தமிழர்களிடம் இருந்துதான் எனக்கு பல ஆர்டர்கள் வருகிறது’’ என்று கூறும் அமலா ஜனனிக்கு அழகுக்கலை குறித்து அகாடமி ஒன்றை நிறுவ வேண்டும் என்பதுதான் எதிர்கால கனவாம்.
தொகுப்பு: நிஷா