நன்றி குங்குமம் தோழி
சொந்தமா தொழில் செய்ய வேண்டும் என்று பலருக்கு கனவு இருந்தாலும் அது எல்லோருக்கும் கைகூடி வராது. ஒரு சிலர்தான் அதில் சக்சஸ் செய்கிறார்கள். மற்றவர்கள் எதற்கு ரிஸ்க் என்று நினைத்து அலுவலக வேலைக்கு செல்கிறார்கள். தொழில் செய்ய திறமை இருந்தால் போதும், அனுபவம் அவசியம் இல்லை என்ற பிம்பத்தை உடைத்து தொழில் தொடங்கி வெற்றியும் பெற்றுள்ளார் பள்ளி மாணவியான கேசிகா மனோகர்.‘‘நான் கொரோனா காலகட்டத்தில்தான் இந்தத் தொழிலை துவங்கினேன்.
அந்த சமயத்தில் உலகமே முடங்கி இருந்தது. ஆன்லைன் வகுப்பு போக மற்ற நேரத்தில் நான் சும்மா இருப்பதாக உணர்ந்தேன். அந்த நேரத்தில்தான் ஏதாவது உபயோகமான விஷயம் கத்துக்கலாம்னு சமையல் செய்ய தொடங்கினேன். அம்மாவும் சரின்னு சொன்னதால், ‘கே’ஸ் கிச்சன்” என்ற பெயரில் என்னுடைய பிராண்ட் கிச்சனை ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் வெளியே போக முடியாது. அதனால் எனக்கு சாப்பிட கேக் தயாரிக்கலாம்னுதான் இதை துவங்கினேன். வீட்டிலும் எல்லோருக்கும் பிடித்திருந்தது. அப்ப நான் செய்யும் போது என்னிடம் ஓவன் கிடையாது. குக்கரில்தான் கேக் தயாரித்தேன். ஆனால் அதில் சுமாராகத்தான் கேக் வந்தது.
என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து எங்க வீட்டில் என் பிறந்தநாளுக்கு ஓவன் ஒன்றை பரிசாக கொடுத்தாங்க’’ என்றவர் தன் அக்காவின் ஊக்கத்தினால்தான் கே’ஸ் கிச்சனை துவங்கியுள்ளார்.‘‘நான் வீட்டில் கேக் தயாரிக்க ஆரம்பிச்சதும், எனக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் ஆர்டர் கொடுத்தாங்க. அவர்களைத் தொடர்ந்து அவர்களுக்கு தெரிந்தவர்களும் என்னுடைய வாடிக்கையாளர்களாக மாறினார்கள். முதல் ஆறு மாதங்கள் ப்ளம் கேக் போன்ற சின்ன கேக்குகள், ஊறுகாய், ஜாம் போன்றவைகள் விற்பனை செய்து வந்தேன். இதை மேலும் மேம்படுத்தினால் வாடிக்கையாளர்கள் வட்டம் அதிகரிக்கும் என்று நினைத்து, பேக்கிங்கில் உயர்நிலை படிப்பை முடித்தேன்.
முதலில் நான் கேக் செய்வது மற்றும் மற்ற உணவுகள் எல்லாம் யுடியூப்பில் பார்த்துதான் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு பேக்கிங் துறை சார்ந்து படிப்பு முடித்ததால், நான் சொந்தமாக பேக்கிங் ஸ்டுடியோ ஒன்றை துவங்கினேன். இதில் ஆர்டரின் பேரில் விற்பனை மட்டுமில்லாமல், கேக் தயாரிப்பு குறித்து பயிற்சியும் அளித்து வருகிறேன்’’ என்று கூறும் கேசிகா, விலங்கு ஆர்வலராகவும் உள்ளார்.
‘‘சின்ன வயசில் இருந்தே எனக்கு நாய்கள்னா ரொம்ப பிடிக்கும். ஒரு முறை நானும் அப்பாவும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடனமாடி அந்த வீடியோவினை என்னுடைய சமூகவலைத்தளத்தில் போட்டிருந்தேன். அது ரொம்பவே வைரல் ஆனதால், அதே நிகழ்ச்சிக்கு மறுபடியும் என்னை அழைத்திருந்தார்கள். அதற்காக நானும் என் தோழியும் சென்றிருந்தோம். அப்போது அங்கு செல்லப்பிராணிகளுக்கான அடாப்ஷன் டிரைவ் நடைபெறுவதாக என் தோழி சொன்னாள்.
அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்க போனேன். ‘ஹெல்ப் அனிமல்ஸ்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று நாய்க்குட்டிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆனால் அங்கு யாரும் நாய்க்குட்டிகளை வாங்கவே இல்லை. அதனால் நான் அங்கு வந்தவர்களிடம் பேசி எட்டு நாய்குட்டிகளை அடாப்ஷனுக்காக கொடுத்தேன். என்னுடைய அந்த முயற்சியினை பற்றிக் கேள்விப்பட்டு, ‘ஹெவன் ஃபார் அனிமல்ஸ்’ என்ற தொண்டு நிறுவனம் அவர்களின் பிராண்ட் அம்பாசிடராக தேர்வு செய்தனர்.
ஒரு வருடமாக அவர்களுடன் இணைந்து நான் செயல்பட்டு வருகிறேன். அதன் மூலம் 4000 நாய்களுக்கு உணவு அளிப்பது, ஸ்டெரிலைசெஷன் போன்ற வேலைகளை செய்து வருகிறேன். சமீபத்தில் 1111 நாய்க்குட்டிகளுக்கு வாக்சினேஷன் செய்து கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற்று இருக்கேன்.
சமைப்பது, சோஷியல் சர்வீஸ் செய்வது மட்டுமில்லை எனக்கு மேடைகளில் பேசுவதும் பிடிக்கும். ஒரு நிறுவனத்தின் வர்த்தக நிகழ்ச்சி மற்றும் பள்ளியில் நடைபெறும் விழாவிற்கு எம்.சி(EMCee) செய்து வருகிறேன். ஒரு நிகழ்ச்சி குறித்தும், அதில் பங்கு பெறுபவர்கள் பற்றி அறிமுகம் செய்வதுதான் எம்.சி(EMCee). இது மட்டுமில்லை நான் டெட் எக்ஸ் (Ted Ex) பேச்சாளரும் கூட. ஜோஷ் டாக்ஸ்சிலும் பேச இருக்கிறேன். உணவு குறித்த வர்க்ஷாப் மூலம் நெருப்பில்லாமல் உணவு தயார் செய்யும் முறையாக ஐஸ்க்ரீம் செய்ய கற்றுக் கொடுத்தேன்.
ஆன்லைன் முறையிலும் 8 வயது முதல் 12 வயது குழந்தைகளுக்கு நெருப்பில்லாமல் சமைக்கும் உணவுகளை கற்றுத் தருகிறேன். தற்போது முழு நேரமாகவும் இந்தப் பயிற்சியினை அளித்து வருகிறேன். இதனைத் தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் கேக் பேக்கிங் நிகழ்ச்சி செய்து வருகிறேன். பொதுவாக கார்ப்பரேட் நிறுவனத்தில் ஜும்பா போன்ற நடனங்கள்தான் இடம் பெறும். தற்போது பேக்கிங் பயிற்சியும் செய்யச் சொல்லி அழைப்பு விடுக்கிறார்கள்’’ என்றவர், தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களுக்கும் கேக் செய்து அளித்துள்ளார்.
‘‘ஒரு மின்னணு இதழில் என்னை பேட்டி கண்டிருந்தார்கள். மேலும் அவர்களின் இதழ் வெளியீட்டு விழாவினை கவர்னர் மாளிகையில் வைத்திருந்தார்கள். அவர்கள் 50 சிறுவயது சாதனையாளர்களை கவுரவித்து விருது வழங்கினார்கள். அதில் எனக்கும் விருது அளித்தார்கள். அப்போதுதான் எனக்கு ஆளுனரை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. என்னுடனும் அரை மணி நேரம் பேசினார். விழா முடிந்து ஒரு மாதம் கழித்து அவரின் பிறந்தநாள் விழா வந்தது. அதற்காக அவரிடம் அனுமதி பெற்று கேக் ஒன்று செய்து அவரிடம் நேரடியாக கொடுத்தேன். என்னுடைய பேக்கரி ஸ்டுடியோவினை நான் மட்டும்தான் நடத்தி வருகிறேன்.
அதனால் சென்னை சுற்றுவட்டாரம் மட்டும்தான் கேக் சப்ளை செய்கிறேன்’’ என்றவர், தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து விவரித்தார்.‘‘ஒரு மூன்று வருட இடைவேளையில் ஆன்லைன் கஃபே ஆப் கே’ஸ் கிச்சன் கொண்டு வர திட்டம் உள்ளது. அடுத்து பத்து வருடங்களில் நான் சேவை செய்து வரும் தொண்டு நிறுவனத்தினை உலகம் முழுதும் பரவச் செய்ய வேண்டும்.
உளவியல், ஓட்டல் மேனேஜ்மென்ட், நியூட்ரிஷியன் டயடிக்ஸ் மூன்றுமே எனக்கு பிடித்த படிப்பு. நாம் கல்லூரி படிக்கும் காலத்தில் எந்த துறையை தேர்வு செய்தால் எதிர்காலத்தில் நன்மை அளிக்குமோ அதற்கு ஏற்ப தேர்வு செய்து படிப்பேன். என்னைப் பார்த்து பல மாணவிகள் தொழில் துவங்குவது பற்றி ஆலோசனை கேட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் சுவர் ஓவியம் குறித்த தொழிலினை தொடங்கியுள்ளார். மேலும் மிருகங்களின் நன்மைக்காக எப்போதும் என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்’’ என்று கூறும் கேஷிகா ரைசிங் ஸ்டார், யங் அச்சீவர் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
தொகுப்பு: சித்ரா சுரேஷ்