நன்றி குங்குமம் டாக்டர்
குழந்தை வளர்ப்பின் உளவியல்
மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி
சிலர் பிள்ளைகளை பெற்று எடுக்கிறார்கள், சிலர் பிரச்னைகளை பெற்று எடுக்கிறார்கள் – வைரமுத்துவின் இந்த வரிகள்தான், சில நேரங்களில் தற்போதைய குழந்தைகளைப் பார்க்கும் போது தோன்றுகிறது. காலம் காலமாக மரியாதைக்குரிய நபர்கள் என்றாலே மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தான் நாம் பணிவுடனும், மரியாதையுடனும் நடந்து வருகின்றோம். குழந்தைப் பருவத்திலிருந்து, நாம் சிந்திக்கும் எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் உள்ள வேறுபாட்டினை முறையாகவோ அல்லது அதட்டியோ அல்லது அன்பாகவோ நமக்கு முதலில் சொல்லித் தருபவர்கள், மேலே சொன்ன வரிசையில் இருப்பவர்களாகதான் இருக்கிறார்கள்.
அதனால் என்றென்றைக்கும் நாம் பெற்றோரை சார்ந்து இருக்கவே பழகி இருக்கிறோம். அவர்கள் நம்மிடம் பேசாமல் இருந்தாலோ, தண்டனைகள் எதுவும் தந்தாலோ அதையும் மீறி, நாம் அவர்களிடம் இணைந்து போய் விடுவோம்.இன்றைக்கு, குழந்தைகள்தான் பெற்றோர்களை அதிகாரம் செய்கிறார்கள். நவீன யுகத்திலுள்ள பெற்றோர்களுக்கு முந்தைய தலைமுறை குழந்தை வளர்ப்பு மாடல் பிடிக்காமலும் அல்லது டிஜிட்டல் யுக மாற்றத்தாலும், இன்றைக்கு குழந்தைகள் வளர்ப்பு என்பது பெற்றோர்களின் கை மீறித்தான் போய் கொண்டிருக்கிறது.
வர்க்க ரீதியாக நன்றாக இருக்கும் குடும்பத்தில் குழந்தைகளுக்கு, பெற்றோர்களை பணம் கொடுக்கும் நபர்களாகவும் அல்லது அவர்கள் விரும்பிய விஷயங்களை செய்து கொடுக்கும் நபர்களாகவும் அல்லது அவர்கள் ஆசைப்படும் பொருட்களை வாங்கித்தரும் நபர்களாகவும்தான் சில குழந்தைகள் பார்க்கப் பழகி வருகிறார்கள். குடும்பங்கள் பொருளாதாரம் சார்ந்து வளரும் போது, சில பெற்றோர்கள், குழந்தைகளின் பேரைச் சொல்லி, மற்ற உறவுகளிடம் செய்முறை வாங்கவும் பழக்கி வருகிறார்கள். இம்மாதிரியான செயல்களை பெற்றவர்களே செய்யும் போது, குழந்தைகளுக்கு, அடுத்தவர்களிடமும் தான் ஆசைப்பட்டதை யோசிக்காமல் கேட்பதற்கு இன்னும் வசதியாகி விட்டது.
உதாரணத்திற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். அம்மா, அப்பா இருவரும் சொந்த தொழில் நடத்தி வருபவர்கள். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அதில் ஒரு பெண் குழந்தைமேல் மட்டும் பாசம் அதிகம். அதனால் அந்த குழந்தையின் பிறந்த நாள், தீபாவளி, பொங்கல் மற்றும் என்ன மாதிரியான விசேஷ தினங்கள் வருகிறதோ, அந்த நாளில் அந்தக் குடும்பத்திலுள்ள சொந்த பந்தங்களுக்கு போன் செய்து, இரண்டாயிரம் ரூபாய்க்கு குறையாமல் டிரெஸ், கிஃப்ட்ஸ் என்று வாங்கித் தர அந்த குழந்தையின் அம்மா கூறினார். முதலில் சிறு குழந்தையாக இருந்த வரை உறவினர்களுக்கும் பெரிதாக தெரியவில்லை.
ஆனால் இதுவே ஒரு தொடர் கதையாகி, அவளது 21 வயதிலும் கூட, அனைவருக்கும் போன் செய்து கேட்க ஆரம்பிக்கவே, அந்த அம்மாவுடனும், அந்த வளர்ந்த பெண் குழந்தையிடமும் பலரும் பேசுவதை நிறுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்தப் பெண்ணும் அவளுக்கு யாரெல்லாம் பணம் நன்றாக செலவு செய்கிறார்களோ அந்த நபர்களிடம் மட்டும் பேசுவதும், மற்றவர்களிடம் பேசாமல் போவதும் என்ற மனப்பான்மைக்கு வந்து விட்டாள்.
இந்தச் சம்பவத்தில் இருந்து அந்த அம்மாவின் வளர்ப்பைக் குற்றம் சொல்ல வேண்டுமா அல்லது படித்து பெரியவளான பின்னரும், பணம் சார்ந்து பேசும் பழக்கத்தை விடாமல் இருக்கும், அந்த பெண்ணைக் குற்றம் சொல்ல வேண்டுமா என்பதே இங்கு பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.இதே போல் மற்றொரு சம்பவம், பெற்றோர் இருவரும் நல்ல பதவியில் இருப்பவர்கள். அவர்களுக்கு ஒரே ஒரு பையன் இருக்கிறான்.
அவனுடைய பத்து வயது வரை, அவரது அப்பா தினமும் அவனுடன் இரவு நேரத்தில் விளையாடுவதற்கு நேரம் ஒதுக்கி இருக்கிறார். அவனும் அப்பாவுடன் மாலில் போய் படம் பார்ப்பது, ட்ரிப் போவது, அவருடன் நிறைய நேரம் செலவழித்து இருக்கிறான். ஒரு நாள் அவனுடைய அப்பா மாரடைப்பால் இறந்து போகிறார். அதன் பின், அந்த பையனுக்கு அப்பாவின் மரணமும், அவருடைய இருப்பும் இல்லாதது அவனுக்கு பெரிய விஷயமாக இருக்கவில்லை.
அவனுடைய அம்மாவிற்கு இது ரொம்ப புதிதாக இருக்கிறது. அப்பாவின் இறப்பு தன்னை விட, தன் பையனை பாதித்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தார். ஆனால் அப்படியான ஒரு நிகழ்வும் பையனுக்கு ஏற்படாமல் இருப்பது அம்மாவிற்கு மிகுந்த பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தற்போதைய சூழலில் ஒரு நபருடைய பிரிவும், இறப்பும் மனிதர்களை ரொம்ப பாதிக்காமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் எதுவென்றால் பொருளாதார வளர்ச்சியும், டிஜிட்டல் சார்ந்த பொருட்களும் தான் மனிதர்களை விட்டு விலக்கி வைக்கிறது. ஒரு நபரின் பிரிவில் இருந்து, உடனே மீண்டு வருவதற்கு பணம் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்து கொடுத்தால் போதும், எந்தவொரு கவலையும் அவர்களை எட்டாதவாறு தள்ளி நிற்கப் பழகி வருகிறார்கள்.
காட்ஜெட்ஸ் இருந்தால் போதும், அவர்களுக்கு நேரம் போவதே தெரியாத அளவிற்கு அனைத்து விதமான செயலிகளும் அவர்களை நகர விடாமல் கட்டிப் போட்டு விடுகிறது. இதனால், ஆரோக்கியமான சூழலில் எந்த நேரமானாலும், தனக்கான நபர்கள் இல்லையென்றால், அது ஒரு பெரிய விஷயமில்லை என்ற மனநிலைக்கு டிஜிட்டல் யுகம் இன்றைய மாணவர்களை மாற்றி வைத்திருக்கிறது.
குறைந்தது பத்து வருடங்களுக்கு முன்பு, பள்ளிகளில் நண்பர்களுக்கு இடையே சண்டை என்றால், மறுபடியும் சமாதானம் ஆவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து, மறுபடியும் நண்பர்களாகி விடுவோம். அதனால் நட்பு என்பது குறைந்தது பத்து வருடம், இருபது வருடம் என்று நீண்ட கால நட்பு என்று பெருமையாக கூறிக் கொண்டு இருந்தோம். விடுவோம்.
ஆனால் இன்றைக்கு பள்ளிகளில், நண்பர்களுக்கு இடையே பிரிவே ஏற்பட்டாலும், மொபைலில் மூழ்கியும், பணம் இருந்தால் பல இடங்களுக்குச் சென்று, பல புதிய நண்பர்களை உடனே ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அதிகமாகி விட்டது. இதனால் சண்டையினால், அவர்களுடைய ஈகோவும் பாதிக்கப்படுவதில்லை, அவமானப்படவும் வேண்டியதில்லை என்கிறார்கள்.
இவ்வாறாக நம்முடைய தொழில் சார்ந்த வளர்ச்சியினால் ஏற்பட்ட, பொருளாதார வளர்ச்சியும், டிஜிட்டலும் மனிதர்களை விட்டு விலக்கி வைக்கவும், மனிதர்களோடு இணைந்து இருக்கவும் பழக்கி வருகிறது.உண்மையில், நாம் இன்றைக்கு கல்வியை பொருளாதார வளர்ச்சியுடனும், சிறந்த பதவியுடனும் இருப்பதற்காக மட்டுமே குழந்தைகளை பழக்கி வருகிறோம். அதனால் வெற்றியானவர்கள், தோல்வியானவர்கள், வசதியானவர்கள், வசதியில்லாதவர்கள் இந்த அடிப்படையில் நம் சமூகத்தில் இருக்கும் மனிதர்களை பார்க்கும் கண்ணோட்டத்துடன் குழந்தைகள் வளர்ந்து வருவது மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
ஒரு பக்கம் மனித நேயம் சார்ந்தும், மனிதர்களுக்கான அன்பைப் பற்றியும் பக்கம் பக்கமாக பேசிக் கொண்டிருந்தாலும், அவை வீட்டிலுள்ள பெற்றோர்களின் வளர்ப்பும், அவர்களின் பொருளாதார சுதந்திரமும் குழந்தைகளுக்கு மனிதர்களின் தேவை முக்கியம் என்பதை பெரிது படுத்தாமல் இருக்கிறார்கள். பணம் இருந்தால், வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம், நோய் சார்ந்த பிரச்னை என்றால், வசதியான மருத்துவமனைகளில் சேர்த்து, பணம் கட்டி விட்டால், அங்கு வேலை செய்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற மனநிலைக்கு வர ஆரம்பித்து விட்டார்கள்.
இவை எல்லாமே குடும்பத்தின் மீதான ஈடுபாடு குறைவாக இருக்க ஆரம்பிக்கும். குடும்பத்திலுள்ளவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டிய கடமை இருந்தால் கூட, அதைக் கூட செய்யாமல், தனிமனித சுயம் சார்ந்து மட்டுமே யோசிக்க பழகுவார்கள். அதன்பின், அவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது.இங்கு என்னதான் பணம் இருந்தாலும், மனிதர்களின் அன்பும், ஆறுதலான வார்த்தைகளும், நம்மைத் தேற்றி எடுக்கக் கூடிய அரவணைப்பும் இல்லை என்றால், மனிதன் வெறும் தசையுள்ள ஜடமாக இருப்பான்.
அம்மாதிரியான ஜடத்தை இந்தப் பிரபஞ்சமோ, இயற்கையோ ஏற்றுக் கொள்ளாது. இந்த பூமியில் செடி, கொடியில் இருந்து ஆரம்பித்து விலங்குகள், மனிதர்கள் வரை அனைவருக்குள்ளும் ஒரு வித பிணைப்புடன் கொடுக்கல், வாங்கல் நடந்து கொண்டு தான் இருக்கும். சுயநலம் சார்ந்து இங்கு யாருமே செயல்பட முடியாது. ஒரு தனி நபருடைய ஆரோக்கியமான உடல் உழைப்பும், மற்றவர்கள் மனம் திறந்து பேசுவதை கேட்க கூடிய கடமையும், அவசர காலத்திலோ அல்லது விசேஷ நேரத்திலோ பணம் பரவலாக்கப்படவும், சமூகத்திற்கு தேவையான நேரத்தில் நம்முடைய அறிவும் கண்டிப்பாக சமூகத்திற்கு தேவையானது.
அதனால் தான் இன்றும் மனிதர்களை சமூக விலங்கு என்று உலகம் முழுவதும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.அதனால் பெற்றோர்கள் உங்களுடைய குழந்தைகளுக்கு அவர்கள் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமில்லை, அவர்கள் சமூகத்திற்குமானவர்கள் என்பதை மறக்காமல் தொடர்ந்து கூறி வாருங்கள். அந்த வார்த்தையே சக மனிதர்களோடு மனிதத் தன்மையோடு பழகுவதற்கு என்றைக்கும் தயாராகவே இருப்பார்கள்.