நன்றி குங்குமம் டாக்டர்
மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி
சுதந்திரம் பொறுப்புக்குத் தடையா?
ஆறும் அது ஆழமில்லை, அது சேரும் கடலும் ஆழமில்லை, ஆழம் எது ஐயா, அது பொம்பளை மனசு தான்யா – 1986 இல் முத்து லிங்கம் என்பவர் எழுதிய இந்த பாடல் வரிகளை அத்தனை எளிதாக நம்மால் மறக்க முடியாது.
இன்றைக்கும் இந்தப் பாடலை போட்டு தான், பெண்களின் மனதை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.1988இல் மலையாள இயக்குனர் கே.ஜி. ஜார்ஜ் அவர்கள் இயக்கிய மற்றோராள் என்றொரு படம் வந்தது. இந்த படம் பேசுவது, பெண்ணின் அக உலகை மிக நுணுக்கமாக பேசியிருப்பார்கள். இந்த படத்தில் வழக்கமான, ரொம்ப சௌகர்யமான குடும்ப வாழ்க்கையில் இருக்கும் நடிகையாக சீமா இருப்பார்.
அவருக்கு நல்ல பதவியில் இருக்கும் கணவன், இரு குழந்தைகள் என்று நிதானமான வாழ்க்கையை அவருடைய வீட்டிற்குள் வாழ்ந்து கொண்டிருப்பார். அங்கு நடிகை ஊர்வசி மிகவும் சுதந்திரமான எண்ணங்களுடன், ஆண் நண்பர்களுடன் பேசுவது, தொழில் சார்ந்து திறமையாக இருப்பது என்றிருப்பார். இந்த இரு பெண்களைச் சார்ந்து தான் இந்த ஒட்டு மொத்த படமும் நகர்ந்து இருக்கும்.
ஊர்வசியின் சுதந்திரமான செயல்களைப் பார்த்து, சீமா தன்னுடைய கணவன், இரண்டு குழந்தைகள் அனைத்தையும் விட்டு, வேறு ஒரு ஆணுடன் வந்து விடுவார். இந்தப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு எழும் சந்தேகமே, நல்லா இருக்குற குடும்பத்தை விட்டு, ஏன் வேறொரு ஆணுடன் ஓடினார் என்பதாகத் தான் இருக்கும்.
பொதுவாக நம் சமூகத்தில் வளர்ந்த பெண்களை இரண்டு விதமாக பிரிப்பார்கள். ஒன்று திருமணமானவர்கள், மற்றொன்று திருமணமாகாதவர்கள். இன்றைக்கு நாம் அப்படி பிரிக்க முடியாது என்பதைத் தான் இந்தப் படம் நம்மிடம் சொல்கிறது. இன்றைக்கு பெண்களை வேறு விதமாக இரண்டாக பிரித்துப் பார்க்க வேண்டும். ஒன்று சுதந்திரமான பெண்கள் மற்றொன்று சுதந்திரமில்லாத பெண்கள். இந்த இரண்டு பெண்களுக்கும் இடையே நடக்கும் அக உலகின் சிக்கல்கள் பலவித விபரீதத்தை சமூகத்தில் உருவாக்குகிறது.
தற்போதைய சூழலில் திருமணமான பெண்கள் இருக்கும் அதே நேரத்தில் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. அதனால் திருமண வாழ்க்கையில் இருக்கும் நன்கு படித்த, திறமை வாய்ந்த பெண், தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை, அவர்களுக்கு அருகில், மிகச் சுதந்திரமாக மற்றொரு பெண் மிக இயல்பாக வாழும் போது, குடும்ப வாழ்க்கையின் கட்டுப்பாட்டை தகர்த்து எறிந்து விடுகிறார்கள். உண்மையில் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களுக்கு, சுதந்திரத்தை கைப்பற்ற முனையும் போது, அவர்களை மீறி சாதுர்யம் உள்ளே நுழைந்து விடும் என்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள் என்பதே வருத்தத்திற்குரியது. அந்த சாதுர்யம் அவர்களை எல்லை மீற வைத்து விடுகிறது.
இன்றைக்கு நியூஸ் பேப்பர் திறந்தாலோ அல்லது சோசியல் மீடியாவிலோ தொடர்ந்து நமக்கான செய்தியாக திருமணமான பெண்கள், திருமணம் கடந்த உறவில் இருக்கிறார்கள் என்பதை எதற்கு தகவலாக தொடர்ந்து நம்மிடம் திணிக்கிறார்கள் என்று யோசித்து இருக்கிறோமோ? நம் சமூக மக்களிடம் இந்தச் செய்தியைப் பற்றி கேட்டால், அவர்கள் கூறும் பொது கருத்து பெண்களின் படிப்பையும், அவர்களின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றித் தான் கூறுவார்கள்.
நம் சமூகம் பெண்களுக்குத் தேவையான படிப்பு, வேலை, சொத்து இவை எல்லாவற்றையும் கொடுத்து விட்டு, குடும்ப அமைப்பு சொல்லும் சட்ட திட்டத்துக்குள் இருக்க வேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறது. உண்மையாகவே யோசித்துப் பார்த்தால், நல்ல அறிவும், சிந்தனையும் உள்ள பெண் ஒரு கட்டத்தில் குடும்ப அமைப்பிற்காக எல்லாவற்றையும் செய்து முடித்த பின், அவளுக்கு கிடைக்கும் நேரமானது அதிகமாகும் போது, அவள் அவளைப் பற்றி யோசிக்க ஆரம்பிப்பாள். அந்த யோசனை வழியாக, அவள் மனதில் நினைத்ததை பேசலாம் என்றால், குடும்ப அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் எந்தவொரு விஷயத்தையும் ஒரு தெளிவான பெண் பேசக் கூடாது, ஏன் மனதளவில் கூட கற்பனை செய்யக் கூடாது என்பார்கள்.
கடைசியாக அவள் கற்பனையை நிறைவேற்றும் ஒரு நபர் தெரிந்தவுடன், அவர்களுடன் சேர்ந்து, கற்பனையை நிஜமாக்கி அனுபவிக்க போய் விட முயற்சி செய்வாள். பெரியவர்கள் அனைவருக்கும் இங்கு ஒரு சந்தேகம் வரும். சரி, எங்க பேச்சை மீறி அவள் கனவை நினைவாக்க போறாள் என்றே வைத்துக் கொள்கிறோம். அதற்கு ஏன் சம்பந்தமில்லாத ஒரு ஆணை தேர்ந்து எடுத்துப் போகிறாள் என்று கேட்பார்கள். அதற்கு பதில் பெரியவர்களிடம் தான் இருக்கிறது.
வளர்ந்த ஒரு பெண் எங்கையாவது செல்ல வேண்டுமென்றால், ஒன்று அப்பா வரட்டும் சேர்ந்து போ என்று கூறுவார்கள். அல்லது கல்யாணம் ஆகட்டும், அதன் பின் கணவரோடு சேர்ந்து எங்கே வேண்டுமானாலும் போ என்று கூறியே பழக்கப்படுத்தி வைத்து விட்டார்கள்.அதனால் அப்பாவும், கணவரும் கைவிட்ட நிலையில், தன்னுடைய கற்பனையை தனியாக நிறைவேற்றத் தெரியாமல், மற்றொரு ஆணின் துணையை நாட வேண்டிய கட்டாயத்துக்குள் அவளை மீறி, மனதளவில் பதிய வைத்து விட்டார்கள் நம் முன்னோர்கள்.
பெரும்பாலும் வளர்ந்த ஆண், பெண் உறவில் காமம் கலக்காத அன்பு என்பது இல்லை. அதுவும் 35 வயதுக்கு மேல் ஒரு பெண் குடும்ப வாழ்க்கையை மீறி வரும் போது, அவளுடைய உடல் மாற்றங்கள், அவளுக்குள் இருக்கும் குடும்ப நம்பிக்கைகள், அவளது வேதனைகள், அவளது இயலாமைகள் அனைத்தையும் புரிந்து கொள்ளக் கூடிய பக்குவமான ஆண்கள் மிகவும் குறைவானவர்களே இருக்கிறார்கள். ஆனால் மேலே சொன்ன இந்த கேள்விகளுக்கு அவள் அரைகுறை பதிலைக் கொடுத்து விட்டு, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்கிற ஒன்றை குதிரை கடிவாளம் போல் பிடித்துக் கொண்டு, மற்ற அனைத்தையும் அவள் கண்களின் இருந்து பிடிங்கி விடுகிறாள்.
வாழ்க்கையை என்றுமே தத்துவ ரீதியாக பார்க்கும் போது சரி, தப்பு அனைத்திற்கும் அப்பாற்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் ஒரு தவறைக் கூட சரியாக செய்யத் தெரியாத பெண்கள் தான் இங்கு அதிகம் இருக்கிறார்கள். அதனால் தான் செய்தித்தாள் வழியாகவோ, சோசியல் மீடியா வழியாகவோ அவர்கள் செய்த தவறுகளுடன் சமூகத்தின் முன் குற்றவாளிகளாக நிற்கிறார்கள். அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப குடும்ப வாழ்க்கையை மீறி ஒரு உறவுக்குள் வரும் போது, அங்கு உடற்தேவை முடிந்த பின், வரும் விளைவுகளை எப்படிக் கையாளுவது என்பது தெரியாமல், அதன் விபரீதம் புரியாமல் பல இழப்புகளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. இது அந்தப் பெண்ணை மட்டும் பாதிக்காமல், சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கிறது என்பது தான்
கவலையளிக்கும் விஷயமாகும்.
இனி வரும் காலங்களில் சுதந்திரமான பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில், சுதந்திரமாக சிந்திக்க பயப்படும் பெண்கள், ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களும் ஆசைப்படுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி ஆசைப்பட்டு பேச நினைக்கும் போது, முதலில் குடும்பம் பேச அனுமதிக்க வேண்டும். எத்தனை விதமான மீம்கள் போட்டு பெண்களின் உரையாடலை கேலி செய்கிறீர்கள். பெண்ணால் பேசாமல் இருக்க முடியாது. மனைவி பேச ஆரம்பித்தாலே கணவன் ஓட வேண்டியது தான் என்று எத்தனை கிண்டல், கேலிகள் சமூகத்தில் இயல்பாக கூற முடிகிறது. அப்ப அனைவருக்கும் தெரிந்த விஷயம் பெண்ணைப் பேச விடுங்கள் என்பது தான். அவள் எதைப் பற்றி பேச வந்தாலும் சரி, பேச விடுங்கள். பெண்களின் பேச்சைப் பார்த்து, பயப்பட ஆரம்பிக்கும் குடும்பம், தேவையில்லாத விபரீதங்களை சந்திக்கின்ற சூழலை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
ஒவ்வொரு பெண்ணும் அவரவர்களுக்கு தெரிந்த வகையில் குடும்ப அமைப்பை நேர்த்தியாக வைக்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதையும் மீறி, இன்னும் பழைய முற்போக்கு சார்ந்த கருத்துகளை குடும்ப அமைப்பு கூற ஆரம்பிக்கும் போது, டிஜிட்டல் உலகில் அனைத்தையும் மீறுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகமாகி இருக்கிறது. எத்தனையோ விஷயங்களை குடும்ப அமைப்பில் மாற்றிக் கொண்டு வந்த சமூகம் தான் நாம், நம்முடைய வரலாற்றின் மிச்சங்களாக தான் நாம் இருக்கிறோம்.
அதனால் திருமணம் கடந்த உறவுகளை பெண்கள் யாரும் எளிதாக, மனதார நேசித்து உருவாக்க மாட்டார்கள். அதற்கு பின் பல கேள்விகளும், குழப்பங்களும், பயங்களும் நிறைய இருக்கும். என்றைக்கும் மறைக்கப்பட்ட பெண்களின் கோபம், பயமாக வெளியே வரும். அந்த பயம் தான் பல விதிமீறல்களை செய்ய வைக்கிறது. இதனைப் புரிந்து கொண்டாலே ஒவ்வொரு வீடும், பெண்களை இயல்பாக பேச அனுமதித்து விடும்.
இங்கு ஒவ்வொரு பெண்ணும் மனதுக்குள் ஒரு கடல் மாதிரி இருப்பாள். நீங்கள் பார்ப்பது, பேசுவது அனைத்துமே ஒரு அலையுடன் தான். அந்த அலை நம் கால்களை இதமாக்கும், நம் கைகளை வருடும், அதே நேரத்தில் நம்மிடம் வெளியே தெரிந்து வருகின்ற அனைத்து அலைகளும், அதன் ஆழத்தை மறைத்து விடுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
ஒரு பெண்ணை அளவுக்கு அதிகமாக கட்டுப்படுத்தும் போது, அந்த ஆழம் அவளைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் மூழ்க வைத்து விடும் என்பதே இன்றைய செய்தித்தாள்கள் நமக்கு கொடுக்கும் எச்சரிக்கை என்பதை நாம் மறந்து விடக் கூடாது.