Sunday, June 15, 2025
Home மகளிர்சிறப்பு கட்டுரைகள் பாலின பேதங்கள் ஒரு பார்வை

பாலின பேதங்கள் ஒரு பார்வை

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

இயற்கைதான் இயல்பு இலக்கணங்கள் அல்ல!

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இலக்கணங்கள் வகுத்து யாரையும் அவர்கள் இயல்பில் வாழவிடாது செய்துவிட்டது மட்டுமல்லாமல், மனித இயல்பையே இந்த ஆண்/பெண் என்பதற்குள் அடக்கிவிடும் இலக்கணங்களையும் வகுத்துவிட்டாகிவிட்டது. மனிதப்பிறவி ஒன்றொன்றும் பிறப்புறுப்புகளின் அடிப்படையில் முத்திரைக்குத்தப்படுகிறது. ஆணாகவோ இல்லை பெண்ணாகவோ; இது கூட இத்தனை பிரச்னையில்லை. ஆனால், இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வகுத்து வைத்திருக்கும் இலக்கணங்களில் ஒவ்வொரு பிறவியும் திணிக்கப்படுவதுதான் இங்கு இத்தனை பிரச்னைகளுக்கே மூலகாரணம்.

ஆணாகவோ பெண்ணாகவோ நம் பிறப்புறுப்புகளின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு அதை ஏற்றுக்கொண்டு முரண்பாடுகள் எதுவும் உணராமல் வாழும் பெரும்பாலானவர்கள் கூட, ஒவ்வொரு தனிமனிதராக நம்மைப் பற்றி, நம் குணங்கள் பற்றி, நம் எண்ணங்கள் பற்றி, நம் விருப்பு வெறுப்புகள் பற்றி சிறிது ஆழமாக சிந்தித்தோமானால் நாம் உணரலாம், இந்தச் சமூகம் வகுத்து வைத்திருக்கும் இலக்கணங்களில் இருந்து நாம் எங்கெங்கெல்லாம் முரண்படுகிறோம் என்று.

இவை சிறிய சிறிய விஷயங்களாக இருக்கலாம், அவற்றை நாமே உணராவண்ணம் இருக்கலாம். இல்லை சிலவற்றை உணர்ந்தாலும் அது ஏதோ நம்மிடம் கோளாறு என்பது போல் நினைத்து அதை மாற்றிக்கொள்ள முயன்று வெற்றியும்கண்டோ இல்லை, நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொண்டோ வாழ்ந்துகொண்டிருக்கலாம். நாம் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறோம் என்ற நினைப்புதான் இவ்வாறான சமாதானங்களுக்கு காரணம். ஏனெனில் செயற்கையாக திணிக்கப்பட்ட இலக்கணங்கள் காலாங்காலமாக நமக்குள் வேர் விட்டு அவைதான் இயற்கை என இயல்பாக இருப்பதையே இயற்கைக்கு முரண்பாடான விஷயமாக நம்பும் அளவிற்கு மனித மூளைகள் சலவை செய்யப்பட்டுவிட்டன.

சில சிறு உதாரணங்கள், நம் அன்றாட வாழ்வில் நடக்கும் விஷயங்களில் நம் ஈடுபாட்டை சிறிது ஆழ்ந்து கவனித்தாலே நமக்கு இது விளங்கிவிடும். சமையல் செய்வது பொதுவாக பெண்களின் வேலை என்று நிர்ணயித்திருக்கிறோம். இது ஒரு பெண்ணின் வேலை என்று நிர்ணயித்துவிட்டால் போதுமா? அதை அவள் செய்துவிடுவாளா என்ற அச்சம், இன்னும் ஒரு படி மேலே சென்று, சமையல் என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு கலை, அதற்கு நிறைய பொறுமையும், யாருக்காக சமைக்கப்படுகிறதோ அவர்கள் மேல் அதீத பாசமும் வேண்டும்.

இவையெல்லாம் இயல்பாக இருக்கும் பிறவியான பெண்ணின் மனதிற்கு சமையல் என்பது மிகவும் பிடித்தமான வேலை. அவள் விரும்பி மனதார தினம் தினம் சலிக்காமல் செய்யும் அளவிற்கு பிடித்தமான வேலை. இல்லையா? இப்படித்தானே பொதுவாக பேசப்பட்டு சமையலறையில் ஆண்டாண்டு காலமாக இயக்கப்படுகிறார்கள் ஒவ்வொரு பெண்ணும்?

ஆண் என்பவன் வீட்டிற்கு வெளியில் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம், அது பணம் ஈட்டுவதற்கான உழைப்பு. அவனுக்கு என்ன வேலை செய்வதற்கும் ஆற்றலுண்டு, சமையல் வேலை கூட, அது வீட்டிற்கு வெளியில் பணம் ஈட்டுவதற்கான தொழிலாக இருக்கும் பட்சத்தில். ஆனால், குடும்பத்திற்குள், பாசத்துடன், அக்கறையுடன், விருப்பத்துடன், சுவையுடன் சமைத்துப்போட பெண்களால் மட்டுமே இயலும். இது பெண்களின் இயல்பா இல்லை இயல்பு என பெண்களையே நினைக்க வைத்துவிட்ட இந்த சமுதாயத்தின் வெற்றியா?

இந்த மூளைச்சலவை நம் சமூகத்தில் பெரும்பாலான பெண்களுக்கு முழுவதுமாக நடந்துவிட்டது. ஏனெனில், பெண்கள் சமைப்பது என்பதை அவர்கள் பாட்டி, அம்மா, நம் வீட்டில், அக்கம் பக்கத்து வீடுகளில் என பார்த்து பார்த்தே வளர்க்கிறோம். அதனால் இவை பெண்களின் வேலைதான் என மூளையில் சென்று ஆணி அடித்து உட்கார்ந்துவிட்டது. அதையும் பிடித்தேதான் செய்கிறார்கள் என்பதும். ஏனெனில் இங்கு ஒரு பெண்ணின் கட்டுப்பாட்டில் இருப்பது சமையலும் மற்ற வீட்டு வேலைகளும்தான்.

இங்கு உளவியல் ரீதியாக ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு உயிருக்கும்தான் முக்கியம், தான் இல்லாவிடில் ஒரு வேலையும் நடைபெறாது என்பதை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தனக்கான அங்கீகாரத்தை மற்றவரிடமிருந்து பெறவேண்டிய நிர்பந்தம் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தன் ஆக்கிரமிப்பிற்குள் இருக்கும் சமையலறையை தனக்குப் பிடித்ததாக ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். அதுதான் அவர்களுக்கு நிறைவைத் தருகிற விஷயமாக இருக்கிறது.

ஆனால் அத்தனை பெண்களாலும் இப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறதா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும். அவர்களுக்குப் பிடித்த வேலை, கலை என்று அவர்கள் மனதிற்குள் ஆயிரம் இருக்கலாம். எது பிடிக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையாவிட்டாலும் சமையல் செய்வதை ஒரு கடமையாக மட்டுமே ஏற்று, வேறு வழியில்லாமல் அதை தினம் தினம், ஒவ்வொரு வேளையும் செய்து கொண்டிருப்பார்கள்.

சமையல் செய்வது தனக்குப் பிடிக்காத வேலை என்று ஒரு பெண் சொல்லிவிட்டால் அவள் இன்றும், இக்காலத்திலும், படித்து, பட்டம் பெற்று, பல துறைகளில் தன் திறமையை வளர்த்துக்கொண்டு, வெளியில் சென்று தொழில் புரிந்து, குடும்பச் செலவுகளுக்கு சம்பாத்தியம் செய்து கொண்டிருக்கும் பெண்ணாகவே இருந்தாலுமே அவள் வேற்றுக்கிரக வாசியாக பார்க்கப்படுவதுதான் நிதர்சனம். ஒரு பெண்ணுக்கு எப்படி சமையல் செய்வது பிடிக்காமல் இருக்கும் என்று ஆண்களின் புருவங்கள் மட்டுமல்ல, பெண்களின் புருவங்கள் உயர்வதையும் காணலாம். ஒரு வேலை, ஒரு மனிதப்பிறவிக்கு பிடிக்கவில்லை என்ற மிகவும் சாதாரண உண்மையை ஏற்க முடியாத அளவிற்கு, இந்த பொய்யான இலக்கணங்கள் வேறூன்றி நிற்கின்றன.

சிறுவர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்காக விளையாட்டுப் பொருட்கள் வாங்கி வந்திருந்தோம் நானும் என் தோழர்களும் சமீபமாக ஒருநாள். அவற்றை பரிசு காகிதம் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும்போது, இளஞ்சிவப்பு நிறத்தில் சில பொம்மைகள் இருக்க, ஒரு தோழர், ‘இது பெண் குழந்தைகளுக்கானது என்பதை எப்படி பிரித்து வைப்பீர்கள்… ஒரே நிற காகிதத்தால் சுற்றினால்’ என்று கேட்டார். எங்களில் சிலர் அதை ஏன் அப்படி பிரிக்க வேண்டும் எனக் கேட்டதற்கு, இளஞ் சிவப்பு நிறம் பெண் குழந்தைகளுக்குதான் பிடிக்கும், ஆண் குழந்தைகளுக்குப் பிடிக்காது என்றார்.

ஒரு குழந்தைக்கு எந்த நிறம் பிடிக்கும், பிடிக்காது என அதன் பிறப்புறுப்பை வைத்து கணிப்பது எத்தனை பெரிய அறிவீனம்? ஆனால், அதை அப்படி கணித்து, அதுதான் இயற்கை என குழந்தையாக இருக்கையிலேயே, பெண் என்றால் உனக்கு இந்த நிறங்கள்தான் பிடிக்கும், ஆண் என்றால் உனக்கு இந்த நிறங்கள்தான் பிடிக்கும் என நாம் அவர்களின் இயல்பான விருப்பம் என்ற ஒன்றையே எழவிடாமல் செய்துவிடுவதின் பலன்தான் இது. ஒரு வேளை ஒரு ஆண் குழந்தைக்கு இளஞ் சிவப்பு நிறம் பிடித்ததாக சொல்லிவிட்டால், அவனின் நண்பர்களே கூட அவனை கேலிக்கு உள்ளாக்கலாம். அன்றிலிருந்து அந்த கேலிக்கு பயந்து அவன் தனக்குப் பிடித்த நிறம் நீலம் என்று தனக்குத்தானே அறிவுறுத்திக்கொள்வான்.

ஆக, நிறத்திலிருந்து பொறுப்புகள் வரை, இங்கு வரையறுக்கப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு உயிரும் இப்படித்தான் இந்த வரையறுக்கப்பட்ட இலக்கணங்களில் தங்களை அடைத்துக்கொள்ள வாழ்நாள் முழுவதும் தன் இயல்பு தொலைத்து மூச்சுமுட்ட இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆக, இவர்கள் ஒப்புக்கொண்ட இரு பாலினத்தவருக்குமே இத்தனை கெடுபிடிகள் இருக்கும் இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில்தான் ஆண் உறுப்புகளுடன் பிறந்து பெண்ணாக உணர்பவர்களும், பெண் உறுப்புகளுடன் பிறந்து ஆணாக உணர்பவர்களும் பிறந்து திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்/பெண் பாகுபாடுகள்தான் ஒவ்வொரு தனி மனிதருக்கும், அவர் எந்த பாலினத்தவராக உணர்ந்தாலுமே, அவரை இயல்பாக வாழவிடாமல் செய்வதற்கான அடித்தளமே.

பிறப்புறுப்புகளால் ஆணாக அடையாளப்படுத்தப்பட்டு, ஆனால் உணர்வுகளால் தன்னை பெண்ணாக அடையாளப்படுத்த ஒவ்வொரு திருநங்கையும் எடுக்கும் முயற்சியையே இதற்கு உதாரணமாக காட்டலாம். இங்கு ஆணின் உடைகளும் பெண்ணின் உடைகளும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருந்தாலும், சமீபகாலமாக நிறைய பெண்கள் என் உடை, என் விருப்பம் என குரல் கொடுக்கத் தொடங்கி, இன்று ஆணுக்கென நிர்ணயிக்கப்பட்ட உடைகளை பெண்களும் சாதாரணமாக அணியத் தொடங்கிவிட்டார்கள். பெண்கள் தங்கள் முடியையும் ஆண்களைப் போல் குட்டையாக மாற்றிக்கொள்ளவும் தொடங்கிவிட்டார்கள். இந்த உடையும், முடியும் எத்தனை செளகரியமாக இருக்கிறது என்பதையும், புடவை கட்டிக்கொண்டு, நீள முடி வைத்துக்கொண்டு அவற்றை பராமரிப்பதில் தங்கள் நேரங்களும், சக்தியும் வீணாவதையும் புரிந்துகொண்டுவிட்டார்கள்.

ஓரளவு வேறு வழியின்றி இந்தச் சமுதாயமும் அவற்றை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டது எனக்கூட கொள்ளலாம். ஆனால், உண்மையிலேயே தங்களுக்கு புடவை, அலங்காரங்களில், நீள் முடிகளில் விருப்பமில்லாத திருநங்கைகள் கூட தங்கள் மேல் இவற்றை வலுக்கட்டாயமாக திணித்துக்கொள்ள வேண்டிய அவசியங்களில் இருக்கிறார்கள். இப்படி இருந்தால்தான், தான் பெண்ணாக உணர்வதை மற்றவருக்கு கடத்த முடியும் என்ற கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள்.

சமீபமாக ஒரு திருநங்கை க்ராப்பு முடியுடன் பேன்ட்டும், ஷர்ட்டும் போட்டு தன்னுடைய புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிந்திருந்தார். அதற்கு எத்தனை எத்தனை கேள்விகள் பின்னூட்டமாக வந்தன!! நீங்கள் திருநங்கை என சொல்லிக்கொள்கிறீர்கள், அப்படியிருக்க நீங்கள் ஏன் ஆணுடையில், ஆண்களைப்போல் முடியுடன் இருக்கிறீர்கள்? அப்படியென்றால் நீங்கள் பெண்ணாக உணர்வது எப்படி உண்மையாக இருக்க இயலும்? இந்தக் கேள்விகளில் எதுவும் நியாயம் இருக்கிறதா? உடை என்பது அவரவர் செளகரியமில்லையா? நீ பெண்ணுக்காக நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் உடையை அணிந்து கொண்டால்தான் நாங்கள் உன்னை அப்படி ஏற்றுக்கொள்வோம் என்பது எத்தனை மோசமான செயல்? இங்கு ஆண்/பெண் பாகுபாடுகள் எல்லாவிதங்களிலும் களையப்பட்டு, அத்தனையிலும் சமநிலை வந்தால் மட்டுமே அது எல்லா பாலினத்தவருக்குமான சமத்துவத்தை நோக்கி நகர வழிவகுக்கும்.

(தொடர்ந்து சிந்திப்போம்!)

தொகுப்பு:லதா

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi