Monday, February 26, 2024
Home » ஒரு தெய்வம் தந்த பூவே

ஒரு தெய்வம் தந்த பூவே

by Nithya

நன்றி குங்குமம் தோழி

உடன்பிறப்பு போட்டி

உடன்பிறப்பு போட்டி என்பது குடும்ப வாழ்க்கையின் இயல்பான பகுதியாகும். பெற்றோர்கள், பாட்டி, தாத்தா மற்றும் பிற பெரியவர்கள் அந்த குடும்பத்திற்கு வந்துள்ள புதிய குழந்தையை கொஞ்சும்போது, தன் உடன்பிறப்பு பெறும் அன்பையும் கவனத்தையும் பார்த்து எல்லா மூத்த குழந்தைகளும் பொறாமைப்படுகிறார்கள். ஒரு புதிய குழந்தையை வீட்டிற்கு கொண்டு வரும்போது, மூத்த குழந்தைகள் தங்கள் பெற்றோரால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள். இதனால் கோபமடைந்து, தங்கள் கோபத்தை முதலில் பெற்றோர்கள் மீதும் பின்னர் தங்கள் நிலையை அபகரிக்கும் தங்கள் உடன்பிறப்பு மீதும் செலுத்துகிறார்கள்.

பொறாமை, மனக்கசப்பு மற்றும் போட்டி ஆகியவை மூன்று வருடங்களுக்கும் குறைவான இடைவெளியில் உள்ள உடன்பிறப்புகளிடையே இந்த போட்டி, சண்டைகள் மிகவும் தீவிரமான ஒன்றாக இருக்கின்றன. உடன்பிறப்புகளிடையே ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற் ற போட்டிகள் இருக்கின்றன. பயணங்களில் ஜன்னல் இருக்கைக்கு போட்டி, பொம்மைகளுக்கு, பரிசுப்பொருட்களுக்கு என தொடங்கி, ஒருவருக்கொருவர் உடலாலும், வார்த்தைகளாலும் தாக்கிக்கொள்வதில் முடிகிறது.

ஒரு குறிப்பிட்ட அளவு உடன்பிறப்பு போட்டி தவிர்க்க முடியாததும், அவர்களின் வளர்ச்சிக்கு நன்மை பயப்பதாகவும் இருந்தாலும், அதிகப்படியான போட்டி அவர்களின் மனம், உணர்ச்சிகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு பெற்றோர்கள் அதன் தீவிரத்தை குறைக்கவும், தங்கள் குழந்தைகளிடையே அதன் எதிர்மறை விளைவுகளை குறைக்கவும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆரோக்கியமான உடன்பிறப்பு போட்டியானது நட்பு ரீதியான போட்டியாக இருப்பதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். இது அவர்களுக்கு ஒத்துழைப்பு, சிக்கலைத் தீர்க்கும் திறன் மற்றும் ஒரு பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் திறன் போன்ற திறன்களை வளர்க்க கற்றுக் கொடுக்கிறது.

இதன்மூலம், ஏமாற்றத்தை எவ்வாறு கையாள்வது, தோல்வியை எப்படி சமாளிப்பது போன்றவற்றை குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். மேலும், கடின உழைப்பு மற்றும் முயற்சியின் மதிப்பைப் பாராட்டவும், பகிர்தல், விட்டுக் கொடுத்தல் போன்ற நற்சிந்தனைகளையும் கற்றுக் கொள்கிறார்கள். ஆரோக்கியமான உடன்பிறப்பு போட்டியின் மூலம் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை கட்டமைக்கலாம்.

மாறாக ஆரோக்கியமற்ற உடன்பிறப்பு போட்டியானது நிலையான சண்டை, வாய்மொழி அல்லது உடல்ரீதியான துஷ்பிரயோகம் போன்றவற்றில் முடிகிறது. மேலும் வெறுப்பு, பொறாமை உணர்வுகளுக்கும் வழி வகுக்கும். இதோடு, சுயமரியாதையின்மை, பதட்டம், மனச்சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தலாம். இது அவர்களின் மன ஆரோக்கியத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். பெற்றோர்கள் இவர்களை கவனிக்காமல் விட்டுவிட்டால், ஆரோக்கியமற்ற உடன்பிறப்பு போட்டி, அவர்களுக்கிடையிலான விரிசலை அதிகப்படுத்தும். பின்னர் அதை சரிசெய்வது மிகக்கடினம்.

உடன்பிறப்புகளிடையே ஆரோக்கியமான போட்டியை வளர்ப்பதற்கும், எதிர்மறையான போட்டியை நிர்வகிப்பதற்கும் பெற்றோர்கள் சில உத்திகளை செயல் படுத்த வேண்டும். அதற்கு இரண்டாவது குழந்தை கருவுற்ற சில மாதங்களிலேயே தன்னுடைய மூத்த குழந்தையிடத்தில் தங்கள் வீட்டிற்கு வரும் புதிய நபரின் வருகையை சந்தோஷமாக வரவேற்கும் வகையிலும் எதிர்பார்ப்பை தூண்டும் வகையிலும் பேச வேண்டும். தனது தாயார் மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, ​​நிலைமையை விளக்கி, மூத்த குழந்தையிடத்தில், அவர்களை யார் கவனித்துக் கொள்வார்கள் என்பதை முன்கூட்டியே கூறுவதன் மூலம் குடும்பத்தில் ஒரு புதிய சேர்க்கைக்கு தயார் படுத்த வேண்டும்.

குழந்தை தினசரி கடைபிடிக்கும் வழக்கங்களை முடிந்தவரை குறைவாக்க வேண்டும்; குழந்தை வீட்டில் தங்குவது மற்றும் தந்தை அல்லது மற்றொரு நெருங்கிய குடும்ப உறுப்பினரின் பராமரிப்பில் இருப்பது அவர்கள் விரும்பத்தக்கதாக இருக்கும். குழந்தைக்குத் தெரியாத புதிய குழந்தை பராமரிப்பாளர் அல்லது வேறு பராமரிப்பாளர் இருக்க வேண்டும் என்றால், அவர்களை ஒரு முறையாவது முன்கூட்டியே குழந்தையிடத்தில் அறிமுகப்படுத்துவது உதவியாக இருக்கும். மருத்துவமனை அனுமதிக்கும்பட்சத்தில், முதல் குழந்தையை தாயையும், புதிதாகப் பிறந்த குழந்தையையும் மருத்துவமனையில் பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும்.

புதிதாகப் பிறந்த குழந்தை வீட்டிற்கு வந்தவுடன், பெற்றோர்கள், பிற உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்களால் புதிதாக வந்தவரின் கவனத்தைப் பார்க்கும்போது மூத்த குழந்தைக்கு காயமும் வெறுப்பும் ஏற்படுவது இயல்பானது. அந்த அனுபவத்தினால் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பு சாப்பிடுவதிலும் தூங்குவதிலும் இடையூறுகளை ஏற்படுத்தும். அதை பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லதல்ல.

இதனால், சில குழந்தைகளிடத்தில் வளர்ச்சி பின்னடைவை ஏற்படுத்துகிறது. உணவை சாப்பிட மறுத்தல், படுக்கை மற்றும் வீட்டின் பிற இடங்களில் மலம்,சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அல்லது தெளிவான பேச்சு திறனை தற்காலிகமாக இழக்கிறார்கள். இதுபோன்ற செயல்களால், தங்கள் பெற்றோரின் கவனத்தை ஈர்த்து மீண்டும் தாங்களாகவே தன்னை குழந்தைகளாக ஆக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இளைய உடன்பிறந்தவரின் வருகையால் வாழ்க்கை சீர்குலைந்த குழந்தைகளின் தவிர்க்க முடியாத பொறாமையைக் குறைக்க பல வழிகள் உள்ளன. புதிய குழந்தையைப் பார்க்க நண்பர்கள் அல்லது உறவினர்கள் வருகை தரும் போது, ​​பெற்றோர்கள் மூத்த குழந்தையை அரவணைப்பதன் மூலமோ அல்லது சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலமோ மூத்த குழந்தையை பாதுகாப்பாக உணர வைக்க முடியும்.

புதிதாக பிறந்த குழந்தையைப் பராமரிப்பதில் சிறுசிறு செயல்களில் மூத்த குழந்தையை ஈடுபடுத்துவதன் மூலம் மூத்த குழந்தையின் சுயமரியாதையை அதிகரிக்க முடியும், அதாவது புது குழந்தைக்கு டயப்பர் அல்லது ஆடை அணியும் போது உதவுதல், தொட்டிலை ஆட்டுவது, அக்குழந்தைக்கு விளையாட்டு காட்டுவது, அல்லது வண்டியைத் தள்ள உதவுவதன் மூலம் இரண்டு குழந்தைகளிடமும் ஒரு ஆரோக்கியமான பிணைப்பை ஏற்படுத்த முடியும்.

புதிய குழந்தை மிகவும் சிறியதாக இருப்பதால் இன்னும் செய்ய முடியாத காரியங்கள், மூத்த குழந்தை செய்யும் வயதிற்கு ஏற்ற சாதனைகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றி சொல்வதன் மூலம், மூத்த குழந்தையை பெருமிதம் கொள்ளச் செய்ய வேண்டும். மூத்த குழந்தைகள் நேசிக்கப்படுவதையும் பாராட்டப்படுவதையும் உணர மற்றொரு வழி, அவர்கள் ஒவ்வொருவருடனும் தொடர்ந்து தனியாகச் செலவிட சில ‘தரமான நேரத்தை’ ஒதுக்குவது முக்கியம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒருவருக்கொருவர் வெளிப்படையாக ஒப்பிடுவதைத் தவிர்ப்பதும் முக்கியம். மேலும் மூத்த குழந்தைக்கு தங்களின் அரவணைப்பையும், ஆதரவையும் தொடர்ந்து கொடுப்பதற்கான எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும்.பொதுவாக, உடன்பிறப்பு போட்டியின் மிகவும் அழுத்தமான அம்சம் சண்டை. (உடல்-வாய்மொழிக்கு மாறாக-சண்டைகள் பொதுவாக ஐந்து வயதிற்கு முன்பே உச்சம் பெறும்). பெற்றோர்கள் ஒருதலைப்பட்சமாக இல்லாமல் இருப்பது முக்கியம். மாறாக குழந்தைகள் கருத்து வேறுபாடுகளை தாங்களாகவே சரிசெய்து கொள்ளும் சூழலை உருவாக்குவது அவசியம். தேவைப்பட்டால், அவர்களின் சண்டையை சாந்தப்படுத்த ஒரு தற்காலிக ‘நேரம்’ ஒதுக்க வேண்டும்.

உடன்பிறந்தவர்கள் தங்களின் பொம்மைகள், பரிசுப்பொருட்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அதிகமாக வலியுறுத்துவதும் தீங்கு விளைவிக்கும்: தனித்துவ உணர்வைத் தக்க வைத்துக் கொள்ள, உடைமைகள், பிரதேசம் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் குழந்தைகளுக்கு அவர்களின் உடன்பிறப்புகளிடமிருந்து சில எல்லைகள் தேவை. மேலும், மிகச் சிறிய குழந்தைகள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்து கொள்வது மிகவும் கடினம். அதை எதிர்பார்ப்பதும் தவறு.

அவர்களிடையே ஒரு நேர்மறையான பிணைப்பை உருவாக்குவதற்கான வழிமுறையாக உடன்பிறப்புகளுக்கிடையேயான ஒத்துழைப்பையும் பகிர்வையும் பாராட்டுவதற்கு பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவது என்பது அவர்கள் குடும்பத்திற்கு வெளியே மற்றவர்களுடன் தொடர்புகொள்வதில் கவனக்குறைவாகவோ, விரோதமாகவோ அல்லது ஆக்ரோஷமாகவோ இருப்பார்கள் என்று அர்த்தமல்ல. குடும்பத்தின் பாதுகாப்பு, பிற அமைப்புகளில் அவர்களால் செய்ய முடியாத உணர்வுகளையும் தூண்டுதல்களையும் வெளிப்படுத்த குழந்தைகளை சுதந்திரமாக உணர வைக்கிறது.

ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது மற்றும் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை சிறு சிறு பரிசுகள் மூலம் ஊக்குவிக்கலாம். ஒவ்வொரு குழந்தையும் உணர்ச்சிகள், திறமைகள் போன்றவற்றில் தனித்துவமானவர்கள். அவர்களின் சுதந்திரத்தை வளர்ப்பது உடன்பிறப்பு போட்டியை நிர்வகிப்பதில் முக்கியமான ஒன்று. நம்முடைய ஒவ்வொரு குழந்தையும் தங்கள் சொந்த ஆர்வங்களையும் திறமைகளையும வளர்த்துக்கொள்ள அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களின் சொந்த உணர்வுகளை ஆராய அனுமதிப்பதன் மூலம் அவர்கள் தனித்துவமான நபர்களாக மாறுவார்கள். ஒருவருக்கொருவர் பொறாமைப்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

இருவரும் சேர்ந்து ஒரு வேலையைச் செய்வது, ஒரு திட்டத்தை வகுப்பது போன்ற இருவரும் சேர்ந்து செய்யக்கூடிய குழு செயல்பாடுகளில் ஒன்றாக ஈடுபடுத்துவதன் மூலம் மற்றவருடன் எவ்வாறு ஒத்துழைப்பாக இருப்பது, சமரசமாக செய்வது போன்றவற்றை அறிய இது உதவும். குழு விளையாட்டுக்கள் அல்லது ஒன்றாக வீட்டு வேலைகளை செய்வது போன்ற செயல்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் இருவருக்கிடையிலான பிணைப்பை அதிகப்படுத்தும்.

ஒருவரை மற்றவரோடு ஒப்பிடுதல் கூடவே கூடாது. அவரவருக்கென்று தனிப்பட்ட திறமை, உணர்ச்சிகள் இருக்கலாம். அதன்படி ஒவ்வொரு குழந்தைக்கும் மதிப்பும், மரியாதையும் நீங்கள் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும்.

தகவல் தொடர்பு, உடன்பிறப்பு

போட்டியை நிர்வகிப்பதில் முக்கியமான அம்சம் பெறுகிறது. ஒருவருக்கொருவர் எப்படி கேட்டுத் தெரிந்து கொள்வது, ஒருவரையொருவர் திறம்பட தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றை வளர்ப்பதன் மூலம் தகவல் தொடர்பை வலுப்படுத்தலாம். வாரம் ஒருமுறையாவது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து குழு உரையாடலில் ஈடுபடுவதன் மூலம் உடன்பிறப்புகளுக்கிடையேயான வெளிப்படையான உரையாடலை ஊக்குவிக்கும்.

மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை எவ்வாறு ஆரோக்கியமான முறையில் கையாள்வது என்பதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க பெற்றோர்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இதன்மூலம் மோதல்களை அமைதியான, மரியாதையான முறையில் தீர்ப்பதற்கான வழிமுறைகளை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம். குடும்பமாக சேர்ந்து நேரம் செலவழிப்பது நல்ல பலனை அளிக்கும். ஒன்றாக சேர்ந்து தொலைக்காட்சி பார்க்க உட்கார்ந்து விடாதீர்கள்.

பூங்கா, கோயில், சுற்றுலா போன்றவை ஆரோக்கியமான நேரம் செலவிடும் வழிமுறைகள்.இவையெல்லாம் கைகொடுக்கவில்லை எனில், உங்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை காக்க வேண்டி, ஒரு சிறந்த மனநல ஆலோசனையைப் பெறுவதில் தயக்கம் வேண்டாம். ஒரு தொழில்முறை உதவி உங்கள் குடும்பத்திற்கு வளமான ஆதரவையும், வழிகாட்டுதலையும் வழங்க முடியும்.

தொகுப்பு: உஷாநாராயணன்

You may also like

Leave a Comment

thirteen + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi