நன்றி குங்குமம் தோழி
குழந்தைகளின் மன அழுத்தம்
பெரும்பாலும் மன அழுத்தம் பற்றி பேசும்போது, அது பெரியவர்களுக்கும், வயதானவர்களுக்கும் மட்டுமே வரக்கூடியதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகளுக்கு என்ன புரியும்? இந்த வயதில் மன அழுத்தம் வரும் அளவிற்கு அவர்களுக்கு என்ன கவலை? என்று குழந்தைகளின் மன நிலையை அலட்சியப்படுத்தி விடுகிறோம். மருத்துவ ரீதியாக குழந்தைகளுக்கும் மன அழுத்தம் வரும். ஆனால், பெரியவர்களிடமிருந்து, குழந்தைகளின் மன அழுத்தமானது சற்று வித்தியாசப்படுகிறது. குழந்தைகளால் தங்களுடைய உணர்ச்சிகளை பெரியவர்களை போல வெளிப்படுத்தத் தெரியாமல் இருப்பது முக்கிய காரணம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறு வெளிப்படையாகத் தெரியும். ஆனால், மனநலக் கோளாறு இருப்பது பெரும்பாலும் தெரியாமல் போகும் வாய்ப்புண்டு. அவர்களோடு நெருக்கமாக பழகும் ஆசிரியர்களோ, பெற்றோர்களோ அல்லது உடன் இருப்பவர்களோ அவர்களை கூர்ந்து கண்காணித்தால் மட்டுமே அவர்களது மன நிலையை உணர முடியும்.பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் மனநல பாதிப்பை எதிர்கொண்டு வளர்ந்து வருகின்றனர்.
ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல பாதிப்பு என்பது மிகவும் தீவிரமான பிரச்னையாகவும், பெரும்பாலும் அது அலட்சியப்படுத்தப்படுவதாகவும் இருப்பதே வருத்தத்திற்குறிய விஷயமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட காரணங்கள் என்ன? கண்டறிவது எப்படி? அதிலிருந்து அவர்களை மீட்கும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்…
குழந்தைகளின் மன அழுத்தத்தை கண்டறிவது எப்படி?
தங்களுக்கு ஏற்பட்ட மனரீதியான பாதிப்பை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்.
* சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு யாருடனும், ஏன் பெற்றோருடன் கூட பேசாமல் உம்மென்று இருப்பார்கள்.
* சுற்றி இருப்பவர்களுடன் கலகலப்பாக பழகக்கூடிய ஒரு குழந்தை திடீரென யாருடனும் பழகாமல் தனியாக இருப்பார்களேயானால் அவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதை உணரலாம்.
* சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், எரிச்சலாகவும் வெளிக்காட்டுவார்கள்.
* சில குழந்தைகள் தூக்கமின்மையால் கஷ்டப்படுவார்கள், சிலர் அதிகமாக தூங்கிக்கொண்டே இருப்பார்கள். தூக்க சுழற்சி மாறுபடும்.
* பசி குறைந்து, சாப்பிடுவதற்கு விருப்பப்படாமல் இருப்பார்கள்; அல்லது அதிகம் சாப்பிட்டு உடல் எடை கூடி உடல்பருமனாக இருப்பார்கள்.
* முன்பு உற்சாகமாக செய்து கொண்டிருந்த வேலையைக்கூட, மனச் சோர்வடைந்து எதையுமே செய்யாமல் உற்சாகமிழந்து காணப்படுவார்கள்.
* வகுப்பறையில் கவனச்சிதறலுடன் இருப்பார்கள். நன்கு படித்துக் கொண்டிருந்த குழந்தை படிப்பில் ஆர்வமின்றி மதிப்பெண்கள் குறையத் தொடங்கும்.
* தனக்கு பிடிக்காத சூழ்நிலை அல்லது இடம் என்றால், தலைவலி, வயிற்றுவலி என அடிக்கடி கூறுவார்கள். சில குழந்தைகளுக்கு உண்மையாகவே தலைவலி, வயிற்றுவலி வரக்கூடும்.
* சில குழந்தைகள் தற்கொலை எண்ணங்கள் மேலோங்கி அதைப்பற்றிய தேடல்களில் இறங்குவார்கள். மற்றும் அந்த எண்ணங்களை வெளிப்படுத்தத் தொடங்குவார்கள். தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
இப்படி நிறைய அறிகுறிகளை வைத்து குழந்தைகளின் மன அழுத்தத்தைக் கண்டறியலாம். இதை கவனிக்காமலே விட்டுவிட்டால் குழந்தைகளுக்கு சீர் குலைக்கும் மனநிலை கோளாறு தாக்கும் அபாயம் அதிகம்.
குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படக் காரணங்கள் எவை?
உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளில் ஏழு பேரில் ஒருவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. குழந்தைகளுக்கு மனநல பாதிப்பை ஏற்படுத்தும் காரணங்கள் நிறைய இருக்கின்றன.
* குடும்பத்தில் அப்பா, அம்மா இடையே ஏற்படும் சண்டை சச்சரவு.
* நிதி நெருக்கடி அல்லது ஏதோவொரு பிரச்னையில் சிக்கித்தவிக்கும் பெற்றோர்.
* குழந்தைகளுடன் நேரம் செலவிடாத பெற்றோர்.
* கல்வி கற்பதில் உண்டாகும் குறைபாடு.
* மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு.
* அடிக்கடி ஏற்படும் உடல்நலப் பாதிப்பு.
* படிக்கும் பள்ளி மாற்றம் அல்லது இடமாற்றம்.
* குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை.
* மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்.
* பள்ளியில் அல்லது பள்ளிக்கு வெளியே மூத்த மாணவர்கள் அல்லது சக மாணவர்கள் தொடர்ந்து இவர்களை கேலி செய்வது. தற்போது சமூகவலைத்தளங்களிலும் உருவ கேலி போன்றவை தொடர்கிறது.
இது போன்ற பல காரணங்களினால் குழந்தைகள் மனநல பாதிப்புக்கு உள்ளாகி அவதிப்படுவார்கள். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனநல நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.
மன அழுத்தத்தை போக்கும் வழிமுறைகள்
முதலில் குழந்தைகள் சொல்வதை புறக்கணிப்பதை நாம் நிறுத்த வேண்டும். குழந்தைகளும், சிறார்களும் அவர்கள் வயதுக்கு உரியவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். எல்லாவற்றையும் சரியாக செய்ய அவர்கள் வளர்ந்த மனிதர்கள் அல்ல. அவர்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு தேவைப்படுகிறது என்பதால் நாம் அவர்களுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும். நேர்மறையாக பேசுவது, அதுபோல நடந்துகொள்வதன் மூலம் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்க முடியும். வீட்டில் இருப்பதை விட ஒரு குழந்தை பள்ளியில் அதிக நேரம் இருப்பதால் குழந்தையின் வளர்ச்சியில் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே குழந்தைகளின் நல்ல மன ஆரோக்கியத்திற்கு பெற்றோர்களுடன் இணைந்து பள்ளிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
குழந்தை இயல்பான மனநிலையில் இல்லை என்பதை தொடக்கத்திலேயே கண்டறிந்து விட்டால் பெரிய சிக்கல்களை தவிர்க்கலாம். ஆதரவான, நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ‘நான் உன்னை சில நாளாகக் கவனித்து வருகிறேன். நீ இயல்பாக இல்லை’ என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும். முக்கியமாக பெற்றோரின் அருகாமையும், அரவணைப்புமே அவர்களுடைய உடனடித் தேவை.
பெற்றோர் நேர்மறையான பழக்கங்களை வழக்கப்படுத்த வேண்டும். அவர்கள் பாட்டு, நடனம், விளையாட்டு அல்லது கிராஃப்ட் ஒர்க் போன்று எதில் ஆர்வமாக
இருக்கிறார்களோ அவற்றை மேலும் ஊக்குவிக்க வேண்டும். அவர்களோடு அமர்ந்து தைரியமாக அவர்களின் பிரச்னைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் வகையில் இணக்கத்தை வளர்ப்பதோடு, பிரச்னைகளை கேட்டறிந்து, உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற தைரியத்தை ஊட்ட வேண்டும்.
குழந்தைகளிடத்தில் தற்கொலை எண்ணங்களோ, முரட்டுத்தனமான செயல்பாடுகள் அதிகரிப்பதாக நினைத்தால், மனநல மருத்துவரின் உதவியோடு மருத்துவ உதவியோ அல்லது மனநல ஆலோசனையோ கொடுக்க வேண்டும். இதை எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாக ஆரம்பிக்கிறோமோ விரைவில் குழந்தையின் தற்கொலை எண்ணத்திலிருந்து வெளிக் கொண்டு வரமுடியும்.
தொகுப்பு: உஷா நாராயணன்