சாப்பாடு நம் நினைவுகளை தூண்டும் உணர்வு. சில உணவுகள் நம் பாட்டியின் கைமணத்தை அப்படியே நினைவுபடுத்தும். அந்த சமயம் நம்மை அறியாமல் நம் கண்களில் வழியும் அந்த துளி கண்ணீர்தான் நம் மனதில் பதிந்திருக்கும் நினைவுகள். அந்த நினைவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் பூக்லே. பூக் என்றால் பசி. ஒருவரின் பசியினை தூண்டுவது மட்டுமில்லாமல் அவர்களின் வயிறு மற்றும் மனதினை நிறைவுப்படுத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த அரவிந்த். இவர் தயாரித்து இருக்கும் பூக்லே செயலி மூலம் வீட்டு கைமணத்துடன் உணவுகள் நம் இல்லம் தேடி வரும்.
‘‘நான் சென்னைவாசி. படிச்சது என்ஜினீயரிங். அமெரிக்காவில் அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அவர்களுக்காக பல புதிய திட்டங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். சென்னைக்கு வரும் போது எல்லாம் அம்மா எனக்கு பிடிச்ச உணவினை சமைச்சு தருவாங்க. கோவிட் வருடம், நானும் அப்பாவும் எதிர்பார்க்காத அந்த துயரத்தினை சந்திக்க நேர்ந்தது. கோவிட் பாதிப்பில் நான் என் அம்மாவை இழந்தேன். அவங்களின் இழப்பு எனக்கும் அப்பாவிற்கும் பெரிய தாக்கத்தினை கொடுத்தது.
அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. ஒவ்வொரு உணவும் அவ்வளவு அன்போட சமைச்சு தருவாங்க. அவங்களின் உணவினை சாப்பிடும் போது சுவையை தாண்டி அவங்களின் அன்பு அதில் தெரியும். சாப்பாடு நான் ஓட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடலாம். ஆனால் அவங்க கொடுத்த அந்த அன்பை யாராலும் தர முடியல. அப்பதான் நானும் அப்பாவும் ஒரு விஷயத்தை உணர்ந்தோம். அம்மாவின் சமையலை நாங்க நல்லா இருக்குன்னு பாராட்டியது கிடையாது.
அதை அவங்களே புரிந்து கொள்வாங்க. சாம்பார் நல்லா இருந்தா அப்பா எக்ஸ்ட்ராவா இரண்டு கரண்டி சாப்பிடுவார். அதேபோல்தான் பொரியல், கூட்டும். நான் இன்னும் வேணும்னு கேட்டா எனக்கு பிடிச்சிருக்குன்னு புரிந்து கொண்டு பார்த்து பார்த்து செய்து தருவாங்க. அவங்க அமெரிக்கா வந்தாலும் வெளியே போகலாம்னு கூப்பிட்டா, ‘அதெல்லாம் வேண்டாம், உனக்கு என்ன வேண்டும், சமைச்சு தரேன்’னு சொல்வாங்க. ஒவ்வொரு அம்மாக்கும் தனிப்பட்ட ரெசிபி மற்றும் கைமணம் இருக்கும். அதே சுவை கொண்ட உணவினை நாம வேறு ஒரு இடத்தில் சாப்பிடும் போது, மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.
அம்மாவின் மறைவுக்குப் பிறகு நானும் அப்பாவும் ரொம்பவே கஷ்டப்பட்டோம். நான் படிக்கும் போது எங்க வீட்டில் எப்போதும் எக்ஸ்ட்ரா ஐந்து பேர் சாப்பிடற அளவுக்கு சாப்பாடு இருக்கும். என் நண்பர்கள் அவர்களின் நண்பர்கள்னு சாப்பிடுவாங்க. அவங்க சாப்பிடுவதைப் பார்த்து அம்மா அவ்வளவு சந்தோஷப்படுவாங்க. அவங்க இல்ைலன்னு நினைக்கும் போது, எனக்கும் அப்பாவிற்கும் ரொம்ப வெறுமையா இருந்தது. வீட்டில் விசேஷம்னா, அதற்கான பட்சணங்களை அவ்வளவு சந்தோஷமா செய்வாங்க. காரடையான் நோன்பு அன்று அம்மா அடை செய்வாங்க. அவங்களுக்கு பிறகு அதை செய்து தர யாரும் இல்லை.
சாதாரண சாம்பார்தான். அது ஓட்டலிலும் அம்மா கைமணத்திலும்தான் எவ்வளவு வித்தியாசம். நான் பள்ளியில் படிக்கும் போது, பக்கத்து வீட்டு ஆன்டி புதுசா ஏதாவது செய்தா கொண்டு வந்து கொடுப்பாங்க. இப்ப அப்படி யாரும் தருவதில்லை. நமக்கும் அவர்களிடம் போய் கேட்கவும் கூச்சமாக இருக்கும். அப்படி நான் உரிமையா கேட்பது எங்க பக்கத்து வீட்டு கீதா ஆன்டியிடம்தான். ஒரு முறை காரடையான் நோன்பு அடை செய்து தரச்சொல்லி கேட்டேன். அப்படியே என் அம்மாவின் கைமணம். அப்பதான் எனக்கு புரிந்தது சாப்பாடு நம்முடைய நினைவுகள்னு. எனக்கு ஏற்பட்ட அந்த நினைவுகளை மற்றவருக்கும் கொடுக்க விரும்பினேன்’’ என்றவர் பூக்லேவின் பயணம் குறித்து விவரித்தார்.
‘‘அம்மாவின் உணவினை சாப்பிட்ட பலர் அவங்க பட்சணம் செய்து விற்பனை செய்ய சொல்வாங்க. ஆனால் அவங்களுக்கு அதில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லை. அதற்கான காரணத்தை நான் கேட்டபோது, ‘என்னால் அதெல்லாம் பார்த்துக்க முடியாது. உனக்கு என்ன வேணும்னு சொல்லு, செய்து தரேன். பட்சணம் செய்து விற்பனை எல்லாம் செய்ய என்னால் முடியாது’ன்னு சொல்வாங்க. ஆனால் இது போல் ஒரு சிறு தொழில் செய்வதற்கான சரியான பிளாட்பார்ம் கிடைக்க பல பெண்கள் ஏங்கிக் கொண்டு இருக்காங்க. அவர்களுக்கு ஒரு பாலமா இருக்க விரும்பினேன். எங்க செயலியில் அம்பத்தூரைச் சேர்ந்த செஃப் சங்கீதாவின் பைனாப்பிள் கேசரி அந்த ஏரியா முழுதும் ஃபேமஸ்.
சுவையான உணவிற்கு கண்டிப்பா நல்ல மார்க்ெகட் மக்கள் மத்தியில் இருக்கு. குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு இது மிகவும் ஏற்ற பிளாட்பார்ம். வீட்டில் இருந்தே சமைக்கலாம். பெரிய அளவில் இன்வெஸ்ட்மென்ட் தேவையில்லை. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு சிறிய அளவில் உதவி செய்ய உதவும். குறிப்பாக சிங்கள் பேரன்டாக இருக்கும் பெண்களுக்கு இதில் வரும் வருமானம் பெரிய அளவில் ஊக்கத்தினை தரும்.
சாப்பாடு பொறுத்தவரை சமைப்பவர்கள் மற்றும் அதை சாப்பிடுபவர்கள் என இரண்டு ரகம்தான். இது குறித்து நாங்க ஒரு எட்டு மாசம் ஆய்வு செய்தோம். முதலில் நான் என்னுடைய முகநூலில் இது குறித்து பதிவு செய்தேன். மறுநாள் பார்த்த போது கிட்டத்தட்ட 150 பெண்கள் மற்றும் ஆண்கள் அவர்களுக்கு இதில் விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தனர். அதன் பிறகு அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள நேரில் சந்தித்து அவர்களின் உணவுகளை சுவைத்து பார்த்தேன்.
அதற்கு காரணம் நல்ல சுத்தமாக, சுவையாக மற்றும் ஆரோக்கியமாக செய்கிறார்களா என்று ஆய்வு செய்தேன். அதில் இப்போது 53 பேர் என்னுடன் இணைந்து வேலை பார்க்கிறார்கள். இவர்களைப் பற்றி எனக்கு முழுமையாக தெரியும். சொல்லப்போனால் நாங்க ஒரு குடும்பமா இணைந்துதான் இதை செய்து வருகிறோம்’’ என்றவர் செயலியில் வழங்கப்படும் உணவுகள் குறித்து விவரித்தார். ‘‘முதலில் இவர்களுக்கான மெனுவை உருவாக்கினேன். எல்லோரும் எல்லா உணவும் சமைப்பாங்க. அதில் ஒரு குறிப்பிட்ட உணவில் எக்ஸ்பர்ட்டா இருப்பாங்க.
சிலர் பிரியாணி நல்லா செய்வாங்க. ஒரு சிலர் பீட்சா, பாஸ்தா, சூப்னு கலக்குவாங்க. அதே சமயம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பாரம்பரிய உணவு இருக்கும். அதை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட பிறகு தான் மெனுவினை தயாரித்தேன். என்னைப் பொறுத்தவரை இட்லி, தோசை கொடுத்தா அது மற்ற உணவகங்கள் கொடுக்கும் உணவு. அதையும் தாண்டி இலை அடை, மாம்பழ புலிசேரி, மலபார் பரோட்டா, வெஜிடபிள் பேக், இரானி சிக்கன் பிரியாணி, பாஸ்போசா… இது போன்ற உணவுகளைதான் நாங்க கொடுக்க விரும்பினோம்.
காரணம், ஒவ்வொரு உணவுக்கும் பின் ஒரு கதை இருக்கும். 100 கிலோ மீட்டர் தாண்டினாலேயே ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பாரம்பரிய உணவு உண்டு. அவை எல்லாம் காலப்போக்கில் நாம் மறந்துவிட்டோம். அதை மீண்டும் நினைவுபடுத்த விரும்பினேன்’’ என்றவர் இதில் எவ்வாறு செஃப்பாக இணைய வேண்டும் என்பது குறித்தும் விவரித்தார்.
‘‘எங்க இணையத்தில் ‘பிகம் எ செஃப்’னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் உங்களைப் பற்றிய விவரங்கள் அனுப்பினால், நாங்க தொடர்பு கொள்வோம். எங்களின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் சமையல் இருந்தா கண்டிப்பா நீங்களும் எங்களின் குடும்பத்துடன் இணையலாம். அவ்வாறு இணைபவர்கள் முதலில் FSSI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் நாங்க உதவி செய்கிறோம். எங்களிடம் இருக்கும் எல்லா செஃப்களும் அந்த சான்றிதழ் பெற்றவர்கள். இவ்வாறு ஒவ்ெவாருவரா கண்டுபிடித்து இணைக்க காரணம், அவர்கள் தரும் சுவையான உணவு மட்டுமே. ஓட்டலில் பனீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்தா, பத்தே நிமிஷத்தில் கொண்டு வந்திடுவாங்க.
காரணம், மசாலா எல்லாம் ரெடியா இருக்கும். அதில் பனீரைப் போட்டு கொதிக்க வச்சு தருவாங்க. ஆனா, வீட்டில் அப்படி இல்லை. மூன்று வேளையும் தினமும் சமைப்போம். அவங்க வீட்டில் உள்ளவங்களுக்கு எப்படி அன்போட சமைக்கிறாங்களோ அதே அன்போட தான் கஸ்டமர்களுக்கும் சமைப்பாங்க. எல்லாவற்றையும் விட ஆர்டரை பொருத்துதான் சமையலே நடக்கும். அதனால்தான் நாங்க ஒரு நாள் முன்பே ஆர்டர் கொடுக்க சொல்கிறோம்.
அதன் மூலம் எந்த உணவு எவ்வளவு சமைக்கணும்னு அவங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். மேலும் ஒருவரால் எவ்வளவு சமைக்க முடியுமோ அதற்கு ஏற்பதான் ஆர்டர் எடுப்போம். எங்களிடம் பெரும்பாலும் இல்லத்தரசிகள், மேக்ரோ தொழில் முனைவோர்கள் உள்ளனர். அதில் ஒரு சிலர் ெதாழில் சார்ந்தவர்களும் உள்ளனர். பின்னணி பாடகி அனுபமா எங்களின் பாஸ்தா, பீட்சா செஃப். அவரை பாடகராக எல்லோருக்கும் தெரியும்.
அவரின் மறுமுகமான சமையல் கலையும் மக்களுக்கு தெரிய வேண்டும் என்று விரும்பி எங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதில் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் உள்ளனர். ஒருவர் வசிக்கும் இடத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் வரை நாங்க உணவினை டெலிவரி செய்கிறோம். அதற்காக ரூ.40 மட்டும் சார்ஜ் செய்கிறோம். வாடிக்கையாளர்கள் பொறுத்தவரை எங்களின் செயலியினை அவர்கள் செல்போனில் டவுன்லோட் செய்து விரும்பும் உணவினை ஒரு நாள் முன்பே ஆர்டர் கொடுக்கலாம்.
எதிர்கால திட்டம் நிறைய இருக்கு. குறைந்தபட்சம் 200 செஃப்களை நியமிக்க வேண்டும். இதன் மூலம் சென்னையில் இருக்கும் ஒவ்வொரு ஏரியாவிலும் பல தரப்பட்ட உணவுகளை வழங்க முடியும். ஒரு நாளைக்கு 1000 ஆர்டர்கள் வரை எடுக்கணும். பெங்களூர், மும்பை, கொல்கத்தா, தில்லி, பூனா, கேரளா போன்ற நகரங்களில் டியர் 1 மற்றும் 2 என இரண்டு விதமான மக்களுக்கும் எங்களின் உணவு போய் சேரவேண்டும். தற்போது சென்னையில் மட்டும் ஒவ்வொரு ஏரியாவிலும் செஃப்களை இணைக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அடுத்து ஐந்து வருடங்களில் இந்தியா முழுதும் இதனை பெரிய அளவில் கொண்டு வரவேண்டும்’’ என்றார் அரவிந்த்.
தொகுப்பு: ஷன்மதி