காஞ்சிபுரம்: முட்டவாக்கம் ஊராட்சியில் “ஓரணியில் தமிழ்நாடு’’ திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக சார்பில் மண், மொழி, மானம் காக்க இணைவோம் ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ எனும் கருத்தை முன்னிறுத்தி, உறுப்பினர் சேர்க்கை முகாம் முட்டவாக்கம் ஊராட்சியில் நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் துவக்கி வைத்து, திமுக நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார். அப்போது, திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர். வீட்டின் முன்பு ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ ஸ்டிக்கர் ஒட்டியும், ரோஜா பூ வழங்கியும் உறுப்பினராக சேர்ந்தவர்களை திமுகவினர் வரவேற்று மகிழ்ந்தனர். மேலும், முதியவர் ஒருவரின் வீட்டிற்கு திமுகவினர் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்றபோது, தான் அண்ணா கட்சி துவங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை திமுகவிற்கு தான் வாக்களித்து வருகிறேன், என் இறுதி மூச்சு வரை திமுகவிற்கு வாக்களிப்பேன் என தெரிவித்து திமுகவினரை நெகிழ்ச்சி அடைய செய்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி மனோகரன், ஊராட்சி செயலாளர் முட்டவாக்கம் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் தெய்வாணை சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.