SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ணகிரியில் லிட்டில் இங்கிலாந்தும், இந்தியாவின் நயாகராவும்

2017-04-24@ 16:47:33

கோடைசுற்றுலா என்றவுடன், குலுமனாலி, ஊட்டி, கேரளா, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்கள்தான் உடனே மனதில் நிழலாடும். ஆனால், தமிழகத்திலேயே வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கோடையின் உக்கிரத்தை தணித்து மனதை மகிழ்விக்கும் எழில் கொஞ்சும் இடங்கள், ஆன்மிக தலங்கள் எனக் காணவேண்டிய இடங்கள் பல உள்ளன. அவற்றில், முதலிடம் பெறுவது கிருஷ்ணகிரி மாவட்டம்.

கொங்கு நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணகிரி, கண்ணன் மலை என்றும் அழைக்கப்பட்டு இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1400 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் பக்கத்து மாவட்டங்களை விட வெப்பத்தின் தாக்கம் குறைவுதான். தர்மபுரியில் இருந்து இம்மாவட்டம் உருவாவதற்கு முன்னால், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் மைசூர் போன்ற இடங்கள் ஒன்றாக சேர்க்கப்பட்டு ‘தகடூர் நாடு’ ‘அதியமான் நாடு’ எனவும் அழைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில், ‘பாரா மகால்’ என அழைக்கப்பட்ட 12 கோட்டைகள் தென்னிந்திய வரலாற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளன. ஆங்கிலேயர்களுக்கும், மைசூர் மன்னர்களுக்கும் நடந்த போர்களின் தளமாகவும் கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகள் இருந்திருக்கின்றன.

சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில்

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் இடையே, இக்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை பிரிகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயில் சிறிய மலைமீது அமைந்து இருக்கிறது. கோயில்வரை வாகனங்கள் செல்ல மலைப்பாதையும், பக்தர்கள் நடந்து செல்ல படிகளும் உள்ளன. பொதுவாக, சிவன் கோயில் மலைமீது காணப்படுவது அதிசயமான ஒன்று என்று சொல்வார்கள். இங்கு காளிகாம்பாள் சந்நதி இருப்பது கூடுதல் விசேஷம். இக்கோயிலுக்கு வருபவர்கள் மலை மீது இருந்தவாறு ஓசூரின் முழு அழகையும் கண்டு களிக்கலாம்.

தளி

ஏராளமான ஏரிகள், சிறுசிறு மலைக்குன்றுகள் மற்றும் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் தரும்   எண்ணற்ற பள்ளத்தாக்குகளுடன் அமைதியான அழகிய சோலையைப்போல் காண்போரைக் கவரும் வகையில் இயற்கை எழிலுடன் காணப்படும் தளி கிராமம் ‘லிட்டில் இங்கிலாந்து’ என்ற பெருமைக்கு உரியது. ஓசூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தில் ஆண்டு முழுவதும் குளுமையான தட்பவெப்பம் நிலவுவதால் உள்ளூர்வாசிகள் மட்டுமில்லாமல், தமிழகம் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர் செல்பவர்கள் தளியில் நிலவும் ரம்மியமான இயற்கை சூழலைக் கண்டு ரசிப்பதற்காகவே சிறிது நேரமாவது இங்கு ஓய்வு எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கிராமத்தின் முக்கிய இடமாக திகழும் தேன்கனிக்கோட்டையில் 1530-ல் பாளையக்காரர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆங்காங்கே சிதிலம் அடைந்து காணப்பட்டாலும் பல வரலாற்று சம்பவங்களைத் தாங்கியவாறு வரலாற்று ஆர்வலர்களை ஈர்க்கும் இடமாக இன்றும் திகழ்கிறது. மேலும், இங்குள்ள வேணுகோபால சுவாமி கோயில் ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கும் பக்தி விருந்து படைத்து வருகிறது.   

மாம்பழத் திருவிழா

கிருஷ்ணகிரிக்கு மிகவும் பக்கத்தில் உள்ள மகாராசகடை என்ற இடத்தில், 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற  காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாடு முழுவதும் இருந்து கொண்டு வரப்படும் மாம்பழங்களை வைத்து திருவிழா நடத்துவது இன்னுமொரு சிறப்பு. பழங்களின் அரசனாக கருதப்படும் மாம்பழம் மஞ்சள், பச்சை நிறத்தில் குவியல்குவியலாக இருப்பதைக் காற்றோடுகாற்றாக கலந்து இருக்கும் மாம்பழ வாசனையை நுகர்ந்தவாறு காண்பது கண்கொள்ளாக் காட்சி.

ராயக்கோட்டை

காவிரி ஆற்றில் அமைந்துள்ள இந்த அருவி தர்மபுரியில் இருந்து 46 கி.மீ. தொலைவிலும், பெங்களுரில் இருந்து 180 கி.மீ. தொலைவிலும்(தேசிய நெடுஞ்சாலை எண்-7 வழியாக) உள்ளது. ‘இந்தியாவின் நயாகாரா’ என்றழைக்கப்படும் இந்த அருவியின் பரிசல் பயணம், எண்ணெய் குளியல் மற்றும் மீன் பொரியல் மிகவும் பிரபலம். மழைக்காலத்தை தொடர்ந்து வருகின்ற குளிர்காலம்(ஜனவரி, பிப்ரவரி மாதங்கள்) ஒகனேக்கல் செல்ல ஏற்ற காலமாகும் ஏனென்றால் மழைக்காலங்களில் பரிசல் பயணம் நடைபெறாது.

ஆனால் இன்று தண்ணீர் மட்டுமல்ல ஈரம் கூட இல்லாமல் வறண்டுக்கிடக்கிறது ஒகனேக்கல். அருவி  கொட்டுகிறதா என்று கேட்டுக் கொண்டு பயணம் மேற்கொள்ளலாம். ஒகனேக்கலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பெண்ணாகரத்தில் நடைபெறும் வாரசந்தை மிகவும் பிரபலம். எனவே, இந்த அருவியைப் பார்க்க போகின்றவர்கள் தவறாமல் பெண்ணாகர வாரசந்தைக்கு ஒரு நடை போய் வரலாம்.

ஒசூர்

கிருஷ்ணகிரிக்கு அடுத்து, கோடை சுற்றுலா செல்ல ஓசூர் சரியான இடம். பெங்களூருக்கு அருகில் இருப்பதால் பெங்களூருக்கு இணையான குளுமையான தட்பவெப்ப நிலை நிலவும் இடம். ஓசூர் என்பதற்கு ‘புதிய நகர்’ எனப் பொருள். ஓசூரின் தேர்ப்பேட்டையில் அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரர் கோயிலில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில், கி.பி. பத்தாம் நூற்றாண்டில் செவிடபாடி என்றும், 13-ம் நூற்றாண்டில் முரசு நாடு என்றும் அழைக்கப்பட்ட ஊரே 16-ம் நூற்றாண்டில் ஓசூர் என பெயர் பெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து 315 கி.மீ.(சாலை வழி) தொலைவில் அமைந்துள்ள இந்நகருக்கு நேரடி ரயில் வசதி கிடையாது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை ரயிலில் சென்று, அங்கிருந்து பேருந்து மூலமாக ஓசூர் செல்லலாம். ஜோலார்பேட்டை - ஓசூர் இடையே உள்ள தொலைவு 80 கி.மீ. கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் சுமார் 70 கி.,மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.

- ச.விஜயகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • BIPIN RAWAT

  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

 • BlackBox_Helicopter_Coonoor

  குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

 • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

  வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

 • Vaikunda Ekadasi

  பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

 • burundi-fire-8

  புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்