SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செலவு கொஞ்சம் வசதி அதிகம் சுற்றுலா செல்பவர்கள் ரயில்நிலையங்களில் தங்கலாம்

2017-04-24@ 16:45:09

சுற்றுலா சுகமாக இருக்க வேண்டும் என்றால்  நல்ல உணவு கிடைப்பது போல், நல்ல தங்கும் விடுதிகளும் அவசியம். காரணம் புத்துணர்ச்சியுடன் சுற்றிப்பார்க்க நல்ல உணவு, நல்ல உறக்கம் தேவை. அந்தந்த ஊர்களில் கிடைக்கும் உணவை வாங்கிச் சாப்பிட்டு சமாளிக்கலாம். ஆனால் காலைக்கடன்கள் முதல் குளியல், ஓய்வு என தொடர்ந்து இரவு உறக்கம் வரை வசதியாக இல்லாவிட்டால். சுற்றுலா சென்ற நாள் முழுக்க வீணாகி விடும்.

அதற்கு நல்ல விடுதி அதாவது லாட்ஜ், ஓட்டல், போர்டிங் வசதிகள் கிடைக்க வேண்டும். பட்ஜெட் பிரச்னை இல்லை என்றால் இந்த வசதி எளிதில் கிடைத்து விடும். ஆனால் பட்ஜெட் பார்த்து விடுதி அறைகளை தேடினால் நம் வீட்டில் உள்ளது போன்ற வசதிகள் கிடைக்காது. அதுவும் வட மாநிலங்களில் பான்பராக் கறைகளுக்கு விடுதி சுவர்களும் தப்பிப்பதில்லை.

அப்புறம் பாதுகாப்பு இன்னொரு கேள்விக் குறி. குடும்பத்துடன் செல்பவர்களின் தூக்கம் இது போன்ற விடுதிகளில் தங்கும் போது காணாமல் போய் விடும். இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து எளிதில் தப்பிக்க சிறிய வாய்ப்பு உள்ளது. அது ரயில்நிலையங்களில் உள்ள தங்கும் அறைகள்(ரிடையரிங் ரூம்ஸ்). ரயில்நிலையத்தின் முக்கிய தன்மைக்கு ஏற்ப அறைகளின் எண்ணிக்கை இருக்கும். குறைந்தது ஒரு அறையாவது இருக்கும்.

ஒருவர், இருவர் தங்க, ஏசி, ஏசியில்லாமல், 10 பேர் கூட தங்கும் வசதியுள்ள தூங்கும் அறைகள் கிடைக்கும். தண்ணீர், மின்சாரம் தடையின்றி கிடைக்கும். பாதுகாப்பு குறித்த கவலையும் வேண்டாம். எல்லாமே 24 மணி நேர வசதி. இந்த வசதி கிடைக்க எந்த ஊர் ரயில்நிலையத்தில் தங்குமிடம் வேண்டுமோ அந்த ஊருக்கோ, அந்த  ஊரில் இருந்தோ முன்பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கான முன்பதிவு பயணச்சீட்டும், உரிய அடையாள அட்டையும் இருக்க வேண்டும்.

இவை இருந்தால் ரயில்நிலைய அதிகாரியை அணுகலாம் அல்லது அதற்கு என உள்ள தனி அலுவலரை அணுகி அறையை பெற்றுக் கொள்ளலாம். இவை தவிர ஆன்லைன் மூலமும் முன்பதிவு செய்யலாம். எல்லா ரயில்நிலையங்களிலும் உள்ள தங்குமிடங்களும் இந்த ஆன்லைன் மூலம் இணைக்கப்படவில்லை. ஆனால் அறை வசதி உள்ள பெரும்பான்மையான ரயில்நிலையங்கள் இப்படி இணையத்தின்  மூலம் இணைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இந்த வசதி கிடைக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, மதுரை, கோவை, சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், தஞ்சாவூர், திருத்தணி, ராமேஸ்வரம், காட்பாடி, அரக்கோணம், சேலம் என முக்கிய ரயில்நிலையங்கள் பலவற்றில் உள்ள அறைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். அதேபோல் புதுடெல்லி, மும்பை, செகந்திராபாத், பெங்களூர்,  ஆக்ரா, விஜயவாடா என பல நகரங்களில் உள்ள ரயில்நிலையங்களில் ஆன்லைன் மூலம் அறையை முன்பதிவு செய்யலாம்.

இது தவிர இந்த ரயில்நிலையங்களில் உள்ள தங்குமிட அறை அலுவலரை முன்பதிவு பயணச்சீட்டுடன் நேரில் அணுகியும்   செல்ல வேண்டிய ஊருக்கான ரயில்நிலையத்தில் உள்ள அறைகளை முன்பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய முன்பதிவு பயணச்சீட்டில் உள்ள பயணிகள் முன்பதிவு வரிசை எண்(பிஎன்ஆர்) அவசியம். அந்த எண்ணை பயன்படுத்தி  www.irctc.co.in  என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய முடியும்.

தங்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை அறைகளின் இருப்பை பொருத்தும், சுற்றுலா காலத்தை பொருத்தும் அனுமதிக்கப்படும். கோடை உள்ளிட்ட நெரிசல் காலங்களில் முதலில் ஒன்று அல்லது 2 நாட்களுக்கு மட்டுமே அறைகளை முன்பதிவு செய்ய முடியும். அறைகள் இருப்பு இருந்தால் தங்கிக்கொண்டே நீட்டிப்பு செய்துக் கொள்ளலாம். அதற்கு ஏற்ப கட்டணமும் உயரும்.

ஏசி இல்லாத சாதரண அறைகள் இருந்தால் கட்டணம்  200, 300 ரூபாய் முதல் 900 ரூபாய்க்குள் கிடைக்கும். ஏசி அறைகள் என்றால் 500, 600 முதல் 1500 ரூபாய் வரை மட்டுமே. வாடகை என்பது 12 மணி நேரத்திற்கா, 24 மணி நேரத்திற்கா' என்பதை முன்பதிவு செய்யும் போதே விசாரித்துக் கொள்வது நல்லது. இப்போது புதிதாக டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் காரணமாக கட்டணச் சலுகை குறைவாகவும், கூடுதலாக சேவை வரி, சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

பயணம் செய்யும் நாளில் இருந்து 120 நாட்களுக்கு முன்பு பயணத்திற்கான முன்பதிவு செய்யலாம். அப்படி முன்பதிவு செய்ததும் உடனடியாக அறைகளையும் முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு உறுதியாகி இருந்தாலோ அல்லது ஆர்ஏசியாக இருந்தால் மட்டுமே அறை கிடைக்கும். ஒரு முன்பதிவு சீட்டுக்கு ஒரு முறை, ஒரு அறை மட்டுமே பதிவு செய்ய முடியும்.

- வள்ளி அபுரூபம்

பட்ஜெட் ஓட்டலை விட குறைவு
காஞ்சிபுரம், கன்னியாகுமரி என முக்கிய சுற்றுலா தலங்களில் உள்ள ரயில்நிலையங்களில் குறைந்தக் கட்டணங்களில் அறைகள் கிடைக்கும். ஊட்டி ரயில்நிலையத்தில் 6 இரு படுக்கை அறைகள் உள்ளன. அறை கட்டணம் தலா 600 ரூபாய். ஊட்டியில் குறைந்த கட்டணங்கள் வசூலிக்கும் பட்ஜெட் ஓட்டலின் அறை கட்டணத்தை விட இந்தக் கட்டணம் குறைவு. இது தவிர டார்மிட்ரி எனப்படும் தூங்கும் அறையும் உள்ளது. இந்த அறையில் ஒருவருக்கு ஒருக்கட்டிலும், பொருட்களை வைத்துக்  கொள்ள ஒரு வைப்பு அறையும் தருவார்கள்.

திருத்தணியில் ஏசி அறை 330
திருத்தணியில் ஏசி, ஏசியில்லாத இரு படுக்கை அறைகள் உள்ளன. ஏசி அறை ஒன்றின் வாடகை 330. ஏசியில்லாத இரு படுக்கை அறைக்கு கட்டணம் 170 ரூபாய் மட்டுமே. ரயில்வே கட்டணங்கள் பயணக்கட்டணம் மூலம் திடீர் மாறுதலுக்கு உட்பட்டது. சேவைவரி, சேவைக்கட்டணங்களும் இப்போது வசூலிக்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்