அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மக்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே உருக்குலைந்த 348 இ-டாய்லெட்கள்: மாநகராட்சி நிலைக்குழு தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
2023-01-31@ 01:44:13

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையில் இந்தாண்டுக்கான முதல் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, நேரமில்லா நேரத்தில், கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகர் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் 2014 முதல் 2017ம் ஆண்டு வரை சுமார் 348 இடங்களில் இ-டாய்லெட்டுகள் மற்றும் மாடுலர் டாய்லெட்டுகள் அமைக்கவும், அதை பராமரிக்கவும் 4 நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த 348 டாய்லெட்டுகளின் இடங்களின் விவரங்களும், அதன் பராமரிப்பு விவரமும் முழுமையாக கிடைக்கவில்லை.
எனவே, எனது தணிக்கை ஆய்வில் அதிகாரிகளிடம் கேட்ட போது, இரு மண்டலங்களில் மொத்தம் 24 இ-டாய்லெட்கள் இருப்பதாகவும், ஆனால் அதில் தற்போது வேறும் 2 மட்டுமே உபயோக நிலையில் இருப்பதாகவும் கூறினர். இதுகுறித்து அவர்களிடம் நான் விளக்கம் கேட்டேன். அவர்கள் அளித்த விவரத்தில், கடந்த அதிமுக ஆட்சியிலேயே ஒப்பந்ததாரர்கள் பல இ-டாய்லெட்களின் பணியை முழுமையாக முடிக்காமல் விட்டு சென்று விட்டதாகவும், நிர்வாக சீர்கேட்டால் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு வழங்குவதில் குளறுபடி நடைபெற்றதால் பல இ-டாய்லெட்கள் அமைக்கப்பட்டும் உபயோகிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், தற்போது இந்த டாய்லெட்டுகள் பயன்பாட்டுக்கு வராமலேயே உருக்குலைந்த நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
முறையாக திட்டமிடல் ஏதும் இல்லாமல் ஸ்வச் பாரத் தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரில் ஒன்றிய அரசின் மானிய நிதியை கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு கடந்த அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த 348 டாய்லெட்கள் குறித்த முழு அறிக்கையை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட வேண்டும். மேலும் நிர்வாக சீர்கேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு டெண்டர் ஒப்பந்தத்தை பின்பற்றாத ஒப்பந்ததாரர்கள் இனி டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி விளக்கமளிக்கையில், ‘‘2014 ஆண்டு முதல் இ-டாய்லெட்கள் 144 இடங்களில் அமைக்கப்பட்டது. தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள இ- டாய்லெட்களை சீரமைக்க குறிப்பிட்ட அந்த நிறுவனங்களை மீண்டும் அழைத்து டாய்லெட்கள் சரிசெய்ய அறிவுறுத்தினோம். 37 இடங்களில் சீர் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி முழுவதும் கழிவறைகள் கட்ட தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதிதாக கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடம் 358 இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநகராட்சிகளுக்கு முன்னுதாரணமாக சென்னையில் கழிப்பறைகள் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் பணியாளர்கள் அமர்த்தப்படவுள்ளனர்,’’ என்றார்.
* முன்னாள் எம்எல்ஏ முறைகேடு
பெருங்குடி எம்ஜிஆர் சாலையில் இருக்கும் நில உரிமையாளர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தனிடம் ரூ.29.33 லட்சத்தை திறந்தவெளி ஒதுக்கீடு கட்டணம் வசூலிக்காமல் கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த நிலத்தில் இருக்கும் கட்டிடங்களுக்கு சீல் வைத்து, தற்போதைய வழிகாட்டு மதிப்பு படி திறந்தவெளி ஒதுக்கீடு கட்டணம் அபராதத்துடன் வசூலிக்க வேண்டும். உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர்களின் உறுப்பினர் நிதி ரூ.35 லட்சத்தில் இருந்து சுமார் ரூ.7.5 லட்சத்துக்கு மேல் ஜிஎஸ்டி மற்றும் இதர இனங்களுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே இந்த நிதியை ரூ.1 கோடியாக உயர்த்த வேண்டும்.
மேலும் செய்திகள்
மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுநர்களுக்கு பணியிட ஆணைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!
போலி செய்திகள் மற்றும் வெறுப்பு செய்திகளை கண்டறிய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!
நெல்லையில் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் விசாரணைக்கு ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்.!
அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கி 31 கோடியை சத்யா ஸ்டுடியோவிடமிருந்து வசூலிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு ஜூன் 28ல் குடமுழுக்கு: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
தருமபுரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!