SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அஜித் ராம் சுழலில் மூழ்கியது அசாம் தமிழ் நாடு அணிக்கு முதல் வெற்றி: இன்னிங்ஸ், 70 ரன் வித்தியாசத்தில் அசத்தல்

2023-01-21@ 00:03:02

சென்னை: அசாம் அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ் நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன் வித்தியாசத்தில் நடப்பு சீசனின் முதல் வெற்றியை வசப்படுத்தி அசத்தியது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 17ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த தமிழ் நாடு 540 ரன் குவித்து ஆல் அவுட்டானது (ஜெகதீசன் 125, இந்திரஜித் 77, விஜய் சங்கர் 112, பிரதோஷ் பால் 153). அடுத்து களமிறங்கிய அசாம், முதல் இன்னிங்சில் 266 ரன்னுக்கு சுருண்டது. அதிகபட்சமாக புர்கயஸ்தா 74 ரன் விளாச, பராக் 48, அபிஷேக் 37, கேப்டன் கோகுல் 31 ரன் எடுத்தனர். தமிழ் நாடு தரப்பில் அஜித்ராம்  4, கேப்டன் சாய் கிஷோர் 3, சந்தீப், திரிலோக் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

274 ரன் பின் தங்கிய நிலையில் ‘ஃபாலோ ஆன்’ பெற்ற அசாம் அணி, 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. அந்த  அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று நிதானமாக ரன் குவித்து டிரா செய்யும் முனைப்புடன் அசாம் களமிறங்கியது. எனினும், துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுத்த தமிழ் நாடு அணி வீரர்கள் விக்கெட் வேட்டை நடத்தி அசத்தினர். ஓரளவு தாக்குப்பிடித்த தொடக்க வீரர்கள் ஷுபம் மண்டல் 33 ரன், ராகுல் ஹசாரிகா 40 ரன் எடுத்து சாய் கிஷோர் பந்துவீச்சில் வெளியேறினர். அடுத்து வந்த ரிஷவ் தாஸ் ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி நிற்க, சக பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். கடுமையாகப் போராடி அரை அதம் அடித்த ரிஷவ் தாஸ் 58 ரன் (121 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சந்தீப் பந்துவீச்சில் சாய் சுதர்சன் வசம் பிடிபட்டார்.

அஜித் ராம் - அபராஜித் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய பின் வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்ட, அசாம் அணி 204 ரன்னுக்கு 2வது இன்னிங்சை இழந்தது (88.1 ஓவர்). ஆகாஷ் சென்குப்தா 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழ் நாடு அணி இன்னிங்ஸ், 70 ரன் வித்தியாசத்தில் நடப்பு சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது. அஜித் ராம் 5 விக்கெட் அள்ளி (முதல் இன்னிங்சில் 4) ஆட்ட நாயகன் விருது பெற்றார். சாய் கிஷோர், அபராஜித் தலா 2, சந்தீப் 1 விக்கெட் எடுத்தனர். 7 புள்ளிகள் பெற்ற தமிழ் நாடு, பி பிரிவில் 15 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தை பிடித்தது. நாக் அவுட் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட தமிழ் நாடு அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில்  வலுவான சவுராஷ்டிரா அணியை மீண்டும் சென்னையிலேயே எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜன.24ல் தொடங்கும். சவுராஷ்டிரா 6 போட்டியில் 3 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன்  26 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

டெல்லி வெற்றி: மும்பை அணியுடன் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில், டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மும்பை 293 ரன் & 170 ரன்; டெல்லி 369 ரன் & 97/2. டெல்லி அணி 6 புள்ளிகள் பெற்றது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்