SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனைவியை அபகரித்த நண்பனை கத்தியால் வெட்டிய கணவன்: சேலத்தில் பரபரப்பு

2022-12-08@ 15:36:04

சேலம்: சேலம் சூரமங்கலம் திருவாகவுண்டனூர் மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் பூபதி (36). இவரது மனைவி சரண்யா (30). கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சரண்யா மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. இதுபற்றி சூரமங்கலம் போலீசில் பூபதி புகார் கொடுத்தார். போலீசார் இளம்பெண் மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவரது வீட்டில், சரண்யா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் கணவன் பூபதிக்கு, ‘‘எனக்கு உன்னை பிடிக்கவில்லை. நான் செல்கிறேன். என்னை தேட வேண்டாம்,’’ எனக்கூறியிருந்தார்.

போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், இளம்பெண் சரண்யாவை கணவன் பூபதியின் நண்பனான அம்மாபேட்டை மிலிட்டரிரோடு பகுதியை சேர்ந்த கண்ணன் (32) என்பவர் அழைத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. பூபதியின் வீட்டிற்கு நண்பன் என்ற பெயரில் அடிக்கடி வந்தபோது, சரண்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி தனியாக குடும்பம் நடத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து கண்ணன், சரண்யாவை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் சரண்யா, தன்னால் கணவன் பூபதியுடன் வாழ முடியாது. நான் கண்ணனுடன் செல்கிறேன் எனக்கூறிவிட்டார். போலீசார், அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை. பின்னர், இருதரப்பையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை, பூபதியும், கண்ணனும் போனில் பேசியுள்ளனர். அப்போது சமாதானம் பேசிக்கொள்ளலாம் என கண்ணனிடம் பூபதி கூறியுள்ளார். அதன்பேரில் திருவாகவுண்டனூர் குழிஇருசாயி கோயில் பகுதிக்கு வந்து இருவரும் பேசியுள்ளனர். அப்போது மது வாங்கி குடித்துள்ளனர். போதை தலைக்கு ஏறிய நிலையில், என்னுடன் நன்றாக பழகிவிட்டு, மனைவியை அபகரித்து சென்று விட்டாயே எனக்கேட்டு கண்ணனிடம் பூபதி தகராறு செய்துள்ளார். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், பூபதி ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணனை சரமாரியாக வெட்டினார். கழுத்து, மார்பு, தலை, கை என பல இடங்களில் வெட்டு மற்றும் குத்து விழுந்தது.

பலத்த ரத்தக்காயமடைந்த அவர், பூபதியிடம் இருந்து தப்பி ஓடினார். அங்கு நிறுத்தியிருந்த தனது பைக்கை எடுத்துக் கொண்டு கொண்டலாம்பட்டி நோக்கி வேகமாகச் சென்றார். கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் சென்றபோது, கண்ணன் மீது எதிரே வந்த கார் மோதியது. தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சீரியசாக உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி, பூபதி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். மனைவியை அபகரித்த விவகாரத்தில் நண்பனை கத்தியால் சரமாரியாக வெட்டிய இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

 • baaagh11

  பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

 • somaliya-dead-2

  சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

 • aus-fish-21

  ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்