SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது: ‘ஏகன் அநேகனாய்’ அருட்காட்சி

2022-12-07@ 00:06:14

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. தீபத்திருவிழா உற்சவத்தின் 10ம் நாளான நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீப விழா நடந்தது. ஆதியும், அந்தமும் இல்லாத பரம்பொருளான இறைவன் ஒருவனே. நிலம், நீர், காற்று, ஆகாயம், பூமி எனும் பஞ்ச பூதங்களையும் அரசாளுகிற இறைவன், ஏகனாகவும் அதே நேரத்தில் அனேகனாகவும் அருள்புரிந்து, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து காரியங்களையும் நிறைவேற்றுகிறார்.

ஏகன் அநேகனாக அருள்பாலிக்கும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதையொட்டி, நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து அண்ணாமலையார் கோயிலில் பரணி தீப வழிபாடு நடந்தது.  
அண்ணாமலையாருக்கு சந்தனம், வாசனை எண்ணெய், மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், திருநீறு, இளநீர், சொர்ணபுஷ்பம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 4 மணி அளவில், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ எனும் பக்தி முழக்கத்துடன் சுவாமி சன்னதியில் ஒரு மடக்கில் சிவாச்சாரியார்கள் தீபத்தை ஏற்றினர். அதைத்தொடர்ந்து, அந்த தீபத்தை கொண்டு ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. மேலும், அண்ணாமலையார் சன்னதியில் இருந்து வைகுந்த வாயில் வழியாக தீபமலை நோக்கி பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் காண்பித்து வழிபட்டனர். விழாவில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், கலெக்டர் பா.முருகேஷ், ஏடிஜிபி சங்கர், ஐஜி கண்ணன், எஸ்.பி கார்த்திகேயன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், கோயில் இணை ஆணையர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

* குழந்தைகளின் கைகளில் ‘டேக்’ கட்டிய போலீசார்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் சுமார் 2,700 சிறப்பு பஸ்கள், 14 சிறப்பு ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை தீப விழாவை காண குழந்தைகளுடன் நேற்று காலை முதல் பஸ்களில் பக்தர்கள் பயணம் செய்தனர். அப்போது, போலீசார் குழந்தைகளின் பெயர், அவர்களின் பெற்றோரின் செல்போன் எண், மற்றும் ஊர் பெயரை எழுதி குழந்தைகளின் கைகளில் டேக் கட்டிவிட்டனர். தீப விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • switzerland-japan-win

  சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

 • choco-fac-fire-27

  அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

 • missii

  வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்