SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வனத்துறை நில ஆக்கிரமிப்பில் ஆள்மாறாட்டம் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: பதில் அளிக்க அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

2022-12-06@ 00:34:33

சென்னை: வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அரசு உயரதிகாரி, பினாமிகள் மூலமாக அபகரித்த விவகாரம் குறித்த வழக்கில் ஆள் மாறாட்டம் செய்தவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூலத்தூர் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலம் அப்போதைய குன்னூர் தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநரும் தற்போதைய தமிழ்நாடு கணக்கு தணிக்கை பிரிவு அதிகாரி, பினாமிகள் மூலம் வாங்கியதாக கூறி பூலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த 2010-13ம் ஆண்டுகளில் நடந்த இந்த சட்டவிரோத நடவடிக்கை  தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வனத்துறைக்கு சொந்தமான அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம் குறித்து சர்வே செய்வதற்கு மாவட்ட செஷன்ஸ் நீதிபதி முயற்சிகள் எடுத்த நிலையில் அப்போதைய மாவட்ட கலெக்டர், அப்போதைய தாசில்தாரர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் 35 பேர் வரை கூட்டு சேர்ந்து எனக்கு எதிராக 11 பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். எனது குடும்பத்தினரையும் துன்புறுத்துகிறார்கள்.

வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது பிரச்னைக்குரிய ஆக்கிரமிப்பு நிலத்தை செந்தில்முருகன் என்பவரிடம் இருந்து வாங்கியதாக அப்போதைய கலெக்டரின் பினாமியாக இருந்த பாண்டியன் என்பவர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தந்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ.25 லட்சம் வரை தரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தியபோது, வனத்துறை அதிகாரிகள் வெள்ளை காகிதத்தில் என்னிடம் கையெழுத்து வாங்கினர் என்று பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தாசில்தார் மாணிக்க கிருஷ்ணமூர்த்தியும் அவரது ஆதரவு அதிகாரிகளும் புகார் தெரிவித்து, அதன் அடிப்படையில் என்மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்காக போலி வில்லங்க சான்றிதழ்களும் தயாரிக்கப்பட்டன.
இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் மீது விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் ஆவண மோசடி, ஆள்மாறாட்டம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்தனர். பின்னர் அதிகாரிகளின் அழுத்தத்தால் சிபிசிஐடி விசாரணையும் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தந்தது, ஆள் மாறாட்டம் செய்தது, ஆவண மோசடி செய்தது போன்ற இந்த பெரிய முறைகேடு தொடர்பாக அரசுக்கு பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த முறைகேடுகள் தொடர்பாக கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை நியமித்து விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மகாவீர் சிவாஜி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்பு ஆணையர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு  உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்