SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் 10% இடஒதுக்கீடு குறித்து புயலை கிளப்ப திட்டம்: காங்கிரஸ் முடிவு

2022-12-04@ 01:45:36

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம், கொலிஜியம் அமைப்பு தொடர்பாக நீதிமன்றத்துடன் மோதும் ஒன்றிய அரசு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட விவகாரங்களை குளிர்கால கூட்டத் தொடரில் எழுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் 16 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, இக்கூட்டத் தொடருக்கான வியூகம் வகுப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், கூட்டத்தொடரில் என்னென்ன பிரச்னைகளை எழுப்புவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்பிரிவினர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் ஒன்றிய அரசின் உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதில் 3 நீதிபதிகள் சட்டத்தை ஆதரித்தும், 2 நீதிபதிகள் எதிர்த்தும் தீர்ப்பளித்தனர். ஆனாலும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதை நிர்ணயிக்கும் தகுதி நெறிகள் தற்போதும் பெரும் விவாதப் பொருளாக உள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் முறையிட தீர்மானித்துள்ளது. மேலும், நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்யும் கொலிஜியம் நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றத்துடன் ஒன்றிய அரசு மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த விவகாரத்தையும் எழுப்ப திட்டமிட்டுள்ள காங்கிரஸ், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதாக ஒன்றிய அரசு தந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது குறித்து பேச முடிவு செய்துள்ளது. இதுதவிர பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், இந்திய எல்லையை சீனா ஆக்கிரமிக்கும் விவகாரம் உள்ளிட்டவற்றை எழுப்ப பட்டியல் தயாரித்துள்ளது.

* ‘முடக்க மாட்டோம்’
குளிர்கால தொடருக்கான வியூகம் வகுக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், ‘‘அவையை அநாவசியமாக முடக்க மாட்டோம். மக்கள் பிரச்னைகளை முன்வைப்போம். ஒன்றிய அரசு இம்முறையாவது பயந்து ஓடாமல் விவாதம் நடத்த முன்வர வேண்டும்’’ என்றனர். ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் உள்ளதால் குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்