SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிப்காட் போன்ற வணிக பயன்பாட்டுக்கு கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களும் நிறுவனங்களின் லாபத்தில் பங்குபெறும் வகையில் சட்டம்: தமிழ்நாடு திட்ட குழுவுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை

2022-11-28@ 01:01:36

சென்னை: சிப்காட் போன்ற வணிக பயன்பாட்டுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது நில உரிமையாளர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் லாபத்தில் குறிப்பிட்ட பங்குபெறும் வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று தமிழ்நாடு திட்ட குழுவுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வல்லம் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்காக கடந்த 1997ல் வசந்தா கங்காதரன் என்பவருக்கு சொந்தமான 19.08 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அந்த நிலத்தில் 1.5 ஏக்கருக்கு மட்டுமே கடந்த 2016ல் இழப்பீடு வழங்கப்பட்டது. இதேபோல், நவ்ஷீன் பாத்திமா, அம்ரீன் பாத்திமா, ெசய்தா மதீன், முகமது இம்ரான் ஆகியோருக்கு சொந்தமான நிலங்களும் 1999ல் கையகப்படுத்தப்பட்டன. ஆனால், அதற்கான சொற்ப இழப்பீடுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டு அந்த தொகையும் தரப்படாமல் கருவூலத்தில் உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலம்போக மீதமுள்ள நிலத்திலேயே நில உரிமையாளர்கள் தொடர்ந்து வசித்து வருகிறார்கள். அந்த நிலத்தில் எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட்டது, அதற்கான இழப்பீடு எவ்வளவு என்பது குறித்து நில உரிமையாளர்களுக்கு தெரியவில்லை.

 இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் சிறப்பு தாசில்தாரிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டவர்கள் தகவல்களை கோரியுள்ளனர். உரிய தகவல் வராததால் அவர்கள் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நில உரிமையாளர்களும், சிப்காட் சிறப்பு தாசில்தாரும் ஆஜராகினர். அப்போது, சிறப்பு தாசில்தார் மனுதாரர்களுக்கான தொகை கருவூலத்தில் உள்ளது. அந்த பில்களும் காலாவதியாகிவிட்டன என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்த உத்தரவு வருமாறு: அரசு பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் விலை கிராமம், நகரம் என ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடுகிறது. அரசு நிலத்தை கையகப்படுத்தும்போது இழப்பீடு தொகையுடன் நில உரிமையாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் வழங்க 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

விளைநிலங்களை கையகப்படுத்தும்போது அதே அளவுக்கு தரிசு நிலங்களை விளைச்சல் நிலங்களாக மாற்ற வேண்டும். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சாலைகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முழு இழப்பீடு தொகையையும் அரசு தர வேண்டும்.

அதே நேரத்தில் சிப்காட் போன்ற தொழில் பூங்காக்கள் என வணிக நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும்போது உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை. இதற்காக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள், அதிகாரிகள், நீதிமன்றங்கள் என்று ஏராளமான கதவுகளை தட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் 1999 முதல் மனுதாரர்கள் தங்களின் நிலத்திற்கான இழப்பீடு தொகையை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். நிலம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. அரசியலமைப்பிலும் அது பாதுகாக்கப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு அவர்களின் நிலத்திற்கான இழப்பீட்டை முழுவதும் தந்துவிட்டால் பணத்தை கையாள்வது தொடர்பாக அவர்களுக்கு தெரியாமல் அந்த தொகையை விரைவில் செலவு செய்துவிடுவார்கள்.

இதற்கு மாற்றாக, எந்த நிறுவனத்திற்காக அரசு நிலத்தை கையகப்படுத்தியதோ அந்த நிறுவனம் நிலத்தின் உரிமையாளருக்கு இழப்பீடு தொகையின் ஒரு பகுதியை தரவேண்டும். மீதமுள்ள இழப்பீடு தொகைக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் லாபத்தில் ஒரு பகுதியை நில உரிமையாளர்களுக்கு பங்காக தர வேண்டும். அப்போது நில உரிமையாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும். இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில திட்டக்குழு உரிய சட்டத்தை கொண்டுவருவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரை செய்கிறது.

இதே நடைமுறையை பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கும், நெய்வேலி நிலக்கரி கழக திட்டத்திற்கும் நிலம் கையகப்படுத்தும்போது செயல்படுத்தினால் நிலத்தை தரும் மக்களுக்கும் நம்பிக்கை வரும். நிலத்தை இழப்பவர்களும் ஏழைகள்தான். அவர்களுக்கு இழப்பீடு வாங்கி தருவதற்காக சட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு செய்து தரவேண்டும். இதன்மூலம் நிலத்திற்கான இழப்பீடுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளும் விரைந்து தீர்த்துவைக்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்