SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

9 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி 54 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

2022-11-27@ 00:12:25

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 9 செயற்கைக்கோள்களை கொண்ட பி.எஸ்.எல்.வி-சி 54 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொழில் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக செயற்கைக்கோள்களை வடிவமைத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நேற்று காலை 11.56 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதில் அனுப்பப்பட்ட 9 செயற்கைக்‍கோள்களும், புவி சுற்றுவட்ட பாதையில் திட்டமிட்டப்படி புவியிலிருந்து 742 கி.மீ உயரத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. ஆர்பிட் சேஞ்ச் த்ரஸ்ட்டர் (ஓசிடி) என்ற தொழில்நுட்பம் மூலம் மற்ற செயற்க்கைக்கோள்கள் ஓசோன்சாட் செயற்கைக்கோளை விட குறைவான உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டன.

இதில் மொத்தம் 4 நிலைகளை கொண்டுள்ள இந்த ராக்கெட்டில், முதல் மற்றும்  மூன்றாவது உந்து நிலைகளில் திட எரிபொருளும், இரண்டு மற்றும் நான்காவது  நிலைகளில் திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்பட்டது. மேலும், பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடைகொண்ட, ‘ஓசன்சாட்03’  என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோளுடன் 8 நானோ  செயற்கைக்கோள்களையும் சுமந்து சென்றது. இதனிடையே நேற்று காலை சரியாக 17 நிமிடம் 20 வினாடிகளில் வட்டப்பாதையில் இந்த ஓசோன்சாட்-3 நிலைநிறுத்தப்பட்டது. பின்னர் வரிசையாக 8 நானோ செயற்கைக்கோள்கள் புவி வட்டப்பாதைகளில் சரியாக பிற்பகல் 2.05 மணியளவில் முழுவதுமாக நிலை நிறுத்தப்பட்டன. குறிப்பாக, ஓசோன்சாட்-3 செயற்கைக்கோள் கடலின் தன்மை, அதன் மேற்பரப்பு, வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தின் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து தகவல்களை அளிக்கும் செயற்கைக்கோளாக விளங்குகிறது.  ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கடலின் தன்மைகள் குறித்து ஆராய அனுப்பப்பட்ட செயற்கைக்கோளின் ஆயுட்காலம் நிறைவடைந்துவிட்டதால், தற்போது ஓசோன்சாட்-3 செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல், பி.எஸ்.எல்.வி-சி54 ராக்கெட்டுடன் அமெரிக்க நாட்டின் ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைக்கோள்கள்-4, துருவா  விண்வெளி நிறுவனத்தின் தைபோல்ட் 1 மற்றும் தைபோல்ட் 2 என்னும் 2 செயற்கைக்கோள்கள், இஸ்ரோ மற்றும் பூடானை சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ஐ.என்.எஸ். பூட்டான் சாட், பிக்ஸெல் நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைக்கோள் ஆகிய  8 நானோ செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இந்த நிகழ்வில் இஸ்ரோ தலைவர் சோம்நாத், பூட்டானின் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் கர்மா டொனென் வாங்க்டி மற்றும் மூத்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: பி.எஸ்.எல்.வி - சி54 ராக்கெட் குறித்த நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது. முதல் 17.20 நிமிடங்களில் ஓசோன் ஷாட்- 3 செயற்கைக்கோள் மிக வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதன்பின் 8 நானோ செயற்கைக்கோள்களும் திட்டமிட்டபடி நிலை நிறுத்தப்பட்டன. மேலும், கணித கணக்கீட்டின்படி நினைத்ததை விட துல்லியமாக இது நடந்து முடிந்தது.

அதன்படி, நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் உள்ள சோலார் பேனல்கள் சிறப்பாக செயல்பட தொடங்கி உள்ளன. கடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள சிறந்த செயற்கைக்கோளாக ஓசோன்ஷாட் 3 செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும். அதனுடன், இந்தியா பூட்டான் கூட்டு தயாரிப்பில் உருவாக்கியுள்ள ஐ.என்.எஸ். 2பி செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியது ஒரு சிறப்பான தருணம். மேலும், 2023ம் ஆண்டு நிறைவுக்குள் ககன்யான் திட்டத்தின் சோதனைகள் நிறைவு பெற்று ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய உள்ளோம். குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதளத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மேலும், அங்கு குடிநீர், மின்சாரம், சாலை மற்றும் பாதுகாப்பு சுவர்கள் அமைப்பது உள்ளிட்ட அடிப்படை கட்டுமானங்கள் தொடங்கி நடந்து வருகிறது. அடுத்த 24 மாதங்களுக்குள்ளாக அனைத்து பணிகளும் முடிவடையும் என நம்புகிறோம். பி.எஸ்.எல்.வி-சி54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவிய அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் கர்மா டொனென் வாங்க்டி கூறியிருப்பதாவது: இஸ்ரோ மற்றும் பூடானை சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ஐ.என்.எஸ். பூடான் சாட் செயற்கைக்கோள் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். வரக்கூடிய காலங்களில் இந்தியா மற்றும் பூடான் நட்புறவு இதுபோன்ற நிகழ்வுகளால் மேலும் வலுப்பெறும். தற்போதைய சூழ்நிலையில் உலகத்திற்கு இதுபோன் புதிய புதிய தயாரிப்புகள் தேவைப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் தான் ஐ.என்.எஸ் பூடான் சாட் செயற்கை கோள் வடிவமைக்கப்பட்டது. தற்போது இவை வெற்றிகரமாக விண்ணில் விரைவாக செலுத்தப்பட்டுள்ளது. இந்தியா - பூடான் செயற்கைக்கோள் விண்வெளி தொழில்நுட்பத்திற்கு அடுத்தகட்டத்தை நோக்கி எடுத்துச்சென்றுள்ளது. தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ் பூடான் சாட் மட்டுமல்லாது எதிர்காலத்தில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்