SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 ஆண்டுக்கு பின் களைகட்டியது சீசன் பழநியில் ரூ.200 கோடி வர்த்தகத்திற்கு வாய்ப்பு-வணிகர்கள் மகிழ்ச்சி

2022-11-22@ 14:15:33

பழநி : பழநியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சீசன் களைகட்டி உள்ளதால் இந்த ஆண்டு ரூ.200 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் அதிகளவு வருகின்றனர். தொடர்ந்து தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை என ஜூன் மாதம் வரை பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவார பகுதியில் 1000க்கும் மேற்பட்ட தற்காலிக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் பழநி நகரில் குவிந்துள்ளனர். இதுபோல் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் குடும்பத்துடன் பழநி புறநகரில் டெண்ட் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வருகையை அடிப்படையில் லாட்ஜ், தங்கும் விடுதிகள், உணவகங்கள், டிராவல்ஸ், பொம்மை கடைகள், பிரசாத பொருட்கள் விற்பனை கடைகள், பஞ்சாமிர்த கடைகள், சுற்றுலா வாகனங்களில் படம் வரைபவர்கள், டாட்டூ வரைபவர்கள், இயற்கை மூலிகை விற்பனையாளர்கள் என பல்வேறு வகையான தொழில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பக்தர்களை நம்பி 10 ஆயிரம் குடும்பம்

பழநியில் ஒவ்வொரு ஆண்டும் இந்த தொடர் சீசனுக்கு சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் பக்தர்களின் வருகையை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.  ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தரிசனத்திற்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் பக்தர்கள் வருகை இல்லாமல் போனது. இக்காலங்களில் சுமார் ரூ.200 கோடி அளவிற்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டது. பக்தர்களின் வருகையை நம்பி இருந்த சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி கடும் பாதிப்பிற்குள்ளாகினர். மாற்று தொழில் தேடி அல்லாடினர்.

சீசன் துவக்கத்திலே சிறப்பு

இந்நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் துவங்கி சில நாட்களே ஆன நிலையில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்கள் அதிகளவு வர துவங்கி உள்ளனர். வார விடுமுறை தினமான நேற்று முன்தினம் கிரிவீதி சாலையில் நடக்க முடியாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சீசன் துவகத்தித்திலே பக்தர்களின் வருகை களைகட்ட துவங்கி உள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு சுமார் 200 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வணிகர்களின் 2 ஆண்டுகால கஷ்டநிலை மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இடையூறு ஏற்படாமல் இடங்கள் ஒதுக்கீடு

இதுகுறித்து பழநி அடிவாரத்தை சேர்ந்த கவுன்சிலர் தீனதயாளன் கூறியதாவது, கொரோனா காரணமாக பக்தர்கள் வருகை இல்லாமல் போனதால் கடந்த 2 ஆண்டுகளாக வியாபாரம் முழுமையாக முடங்கி விட்டது. வணிகர்கள் கடன்களை கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் தற்போது சீசன் துவக்கத்திலேயே ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகளவு உள்ளது. இதனால் வணிகர்களிடையே இந்த ஆண்டு நல்ல நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கடன்களை அடைத்து விடும் சூழல் உண்டாகி உள்ளது. சாலையோரங்களில் வியாபாரம் செய்யும் சிறுவியாபாரிகள் நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் கடும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் அன்றாடம் கடன் பெற்று பொருட்கள் வாங்கி, அதனை விற்று கிடைக்கும் சொற்ப வருமானத்தை வாழ்க்கை நடத்துபவர்கள். 4 மாத சீசனில் கிடைக்கும் தொகையை வைத்தே அடுத்த சீசன் வரை வாழ்க்கை நடத்த வேண்டிய நிலையில் உள்ளவர்கள். எனவே, சாலையோர வியாபாரிகளின் நிலைமையை உணர்ந்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விற்பனை செய்ய இடங்களை ஒதுக்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்