SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகக்கோப்பை 2022 போட்டிகளுக்கு பின்னர் கால்பந்துக்கு ‘குட்பை’: ஓய்வை அறிவிக்க உள்ள சூப்பர் ஸ்டார்கள்...

2022-11-19@ 17:06:47

கால்பந்து உலகின் தற்போதைய முடிசூடா மன்னர்கள் என உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்சி மற்றும் நெய்மர் உள்ளிட்ட டாப் 10 பிளேயர்களில் நெய்மரை தவிர மற்ற அனைவருமே, வயது காரணமாக அடுத்த உலகக்கோப்பை போட்டிகளில் ஆட மாட்டார்கள் என்பது உறுதியாகி விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் கொத்தாக இவர்கள் வெளியேற உள்ள நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார்கள் இவர்கள்தான் என்பதற்கான அறிகுறிகள், தற்போதைய இளம் வீரர்களிடையே இல்லை என்பதுதான். இதனால் பீலே, மரடோனா, உள்ளிட்ட முந்தைய தலைமுறைகளுக்கு பின்னர், அவர்களது இடத்தை பிடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்சி ஆகியோரது ஓய்வுக்கு பிறகு சூப்பர் ஸ்டார்களுக்கான இடம் காலியாகத்தான் இருக்கப்போகிறது என்பதுதான் ரசிகர்களின் கவலை.

நடப்பு உலகக்கோப்பைக்கு பின்னர் ஓய்வு பெற உள்ள சூப்பர் ஸ்டார்களின் பட்டியல் வருமாறு:

1. கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்)
தரவரிசையில் இவர் எந்த இடத்தில் இருந்தாலும், உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களில் பெரும்பாலானோருக்கு இவர்தான் எப்போதுமே நம்பர் 1 கால்பந்து வீரர். தற்போது இவருக்கு 37 வயதாகிறது. இந்த வயதிலும் எதிர் அணி வீரர்களுக்கு இவர் சிம்ம சொப்பனம்தான். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஆடிக் கொண்டிருக்கிறார். ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ் என முன்னணி கிளப்கள் அனைத்திலும் ஆடியிருக்கிறார். 2009 முதல் 2018 வரை ரியல் மாட்ரிட் அணியில் இருந்த அவர் அப்போது அடித்த கோல்களின் எண்ணிக்கை 311!. போர்ச்சுகல் நாட்டின் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் கடந்த 2001ம் ஆண்டு இடம் பெற்ற இவர், 17, 20, 21, 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போர்ச்சுகல் அணியில் படிப்படியாக முன்னேறி, 2003ம் ஆண்டு முதல் தற்போது வரை நாட்டுக்காக ஆடிக் கொண்டிருக்கிறார். இதில் 191 போட்டிகளில் 117 கோல்களை அடித்துள்ளார். இவர் கடத்திக் கொண்டு வந்து, பந்தை சக வீரர்களுக்கு கொடுத்து, அவர்கள் அடித்த கோல்களின் எண்ணிக்கை 300க்கு மேல் இருக்கும். இதுதான் என்னுடைய கடைசி உலகக்கோப்பை என்று முன்னரே கூறிவிட்டார்.

2. லயோனல் மெஸ்சி  (அர்ஜென்டினா)
அர்ஜென்டினா கால்பந்தின் அடையாளம் டீகோ மரடோனா. உலகில் இவருக்குத்தான் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள். அந்த நாட்டில் இருந்து வந்து, எனது வழி தனி வழி என்று இன்றும் கலக்கிக் கொண்டிருக்கிறார் லயோனல் மெஸ்சி. தற்போது இவருக்கு 35 வயது. எனவே இவருக்கும் இது கடைசி உலகக்கோப்பை போட்டிதான். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கிளப்புக்காக ஆடிக் கொண்டிருக்கிறார். முன்னதாக பார்சிலோனா கிளப்புக்காக 474 கோல்களை அடித்து, கால்பந்து உலகை மிரட்டி விட்டார். 2005 முதல் அர்ஜென்டினாவுக்கு ஆடி வரும் இவர், நாட்டுக்காக 91 கோல்களை அடித்துள்ளார். அர்ஜென்டினாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மெஸ்சியை கொண்டாடும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவரது ஓய்வு வருத்தமான செய்திதான்.

3. கரீம் பென்சேமா (பிரான்ஸ்)
பிரான்ஸ் கால்பந்து அணியின் தற்போதைய கேப்டன் கரீம் பென்சேமா, உலகின் மிகச் சிறந்த ஸ்ட்ரைக்கர்களின் பட்டியலில் ஒருவர் என ஃபிபாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ஸ்டைலிஷ் பிளேயர், பிளே மேக்கிங் மற்றும் ஃபினிஷிங்கில் இவர் கால்கள் மாயாஜாலம் காட்டுகின்றன. அந்தரத்தில் பாய்ந்து, பறந்து வந்து பந்தை அடிப்பதிலும், தடுப்பதிலும் வல்லவர். வலது கால் வீரர் என்றாலும், தேவைக்கேற்ப இடது காலிலும் இவரது ஸ்ட்ரைக்கு துல்லியமாக இருக்கும் என்பதால் இவருடன் முன்களத்தில் இருபுறமும் ஓடி வரும் சக வீரர்கள், எப்போதுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பந்தை கொடுத்து, வாங்குவதில் கில்லாடி என்பதும், பந்தை பின்னால் வரும் சக வீரருக்கு விட்டு விட்டு, முன்னால் வெறுமனே ஓடி, பந்தை பறிக்க தன்னுடன் ஓடி வரும் எதிரணி வீரர்களை நொடிப்பொழுதில் ஏமாற்றி விடுவார் என்பதும் இவரது ஆகச் சிறந்த அடையாளங்கள். இதையெல்லாம் தெரிந்தும், எதிரணி வீரர்கள் கோட்டை விடுகிறார்கள் என்பதுதான் விசேஷம். ரியல் மாட்ரிட் அணிக்காக 224 கோல்களும், நாட்டுக்காக 37 கோல்களும் அடித்துள்ளார்.

4. செர்ஜியோ ராமோஸ் (ஸ்பெயின்)
ஸ்பெயின் அணியின் தடுப்பாட்ட வீரர். உலகின் தடுப்பாட்ட வீரர்களில் இவருக்கு தாராளமாக முதல் 5 இடங்களில் ஒன்றை கொடுக்கலாம். தடுப்பாட்டம் என்ற போதிலும் சமயம் கிடைத்தால் பந்தை கடத்தி சென்று, பந்தை அழகாக பாஸ் செய்து, வாங்கி, கோல் அடித்து விடுவார் என்பதால், எதிரணி வீரர்கள் இவர் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே ஆடுவார்கள். வேகமாக ஓடுவார் என்பது இவரது பிளஸ் பாயின்ட். தடுப்பாட்ட வீரராக இருந்தாலும் கூட நாட்டுக்காக 23 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிஎஸ்ஜி கிளப்பில் ஆடி வரும் இவர், முன்னர் ரியல் மாட்ரிட்டில் ஆடிய போது 72 கோல்களை அடித்துள்ளார்.

5. தியாகோ சில்வா (பிரேசில்)
பிரேசிலின் சென்டர் பேக் பிளேயர். செல்சியா கிளப்புக்காக ஆடிக் கொண்டிருக்கிறார். எதிரணி முன்கள வீரர்களிடம் இருந்து பந்தை பறித்து, கோல் போட விடாமல் தடுப்பதில் இவருக்கு இணை இவர்தான். 38 வயதிலும் அதிக உற்சாகத்துடன் கத்தார் மைதானங்களை கலக்க காத்துக் கொண்டிருக்கிறார்.

6. பெப்பே (போர்ச்சுகல்)
போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு நட்சத்திர வீரர் பெப்பே. சென்டர் பேக் பொசிஷனில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதால், 39 வயதான போதிலும், இந்த உலகக்கோப்பைக்கான அணியிலும் இவருக்கு இடம் கிடைத்துள்ளது. தற்போது போர்ட்டோ கிளப் அணிக்காக ஆடிக் கொண்டிருக்கிறார். ரியல் மாட்ரிட்டில் ஆடிய போது 13 கோல்களை அடித்துள்ளார். நாட்டுக்காக 7 கோல்களை அடித்துள்ளார்.

7. லூகா மோட்ரிக் (குரோஷியா)
குரோஷியா அணியின் முன்கள வீரர். கடந்த உலகக்கோப்பையில் குரோஷியா ரன்னர் கோப்பையை வென்றுள்ளது. அந்த தொடர் முழுவதும் மாரியோ மன்ட்சுகிக் சிறப்பாக ஆடினார். அவருக்கு உறுதுணையாக லூகா மோட்ரிக்கும் தன் பங்கை செவ்வனே செய்தார். தற்போது ரியல் மாட்ரிட் அணியில் உள்ளார். தொடர்ந்து கிளப் போட்டிகளில் ஜொலித்து வருவதால், 37வது வயதிலும் உலகக்கோப்பைக்கான குரோஷிய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த உலகக்கோப்பைதான் எனது கடைசி சர்வதேச கால்பந்து போட்டி என்று அறிவித்து விட்டார்.

8. ஒலிவியர் ஜிரோட் (பிரான்ஸ்)
பிரான்ஸ் அணியின் ஸ்டிரைக்கர். தற்போது ஏசி மிலன் கிளப் அணியில் ஆடிக் கொண்டிருக்கிறார். 2012 முதல் 2018 வரை ஆர்செனல் அணியில் இருந்த போது, அந்த அணிக்காக 73 கோல்களை அடித்துள்ளார். ஏசி மிலன் அணியில் இணைந்து ஒன்றரை ஆண்டுகளில் 16 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச    போட்டிகளில் பிரான்ஸ் அணிக்காக 49 கோல்கள் அடித்துள்ளார். 36 வயதாகிறது என்றாலும், ஓட்டத்திலும், உதையிலும் வேகம் குறையவே இல்லை என்கிறார்கள் சக வீரர்கள்.
‘கத்தாரில் இறங்கியவுடன் எங்கள் அணிக்கு இங்குள்ள இந்திய ரசிகர்கள், விமான நிலையத்திற்கே வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியர்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த  உலகக்கோப்பையை 2வது முறையாக தொடர்ந்து வெல்ல வேண்டும் என்பது எங்கள் இலக்கு’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

9. மானுவல் நியூயர் (ஜெர்மனி)
ஜெர்மன் அணியின் கோல் கீப்பர். இவருக்கு இது 4வது உலகக்கோப்பை. 36 வயதாகிறது. பேயர்ன் முனிச் கிளப் அணியில் ஆடிக் கொண்டிருக்கிறார். ஸ்வீப்பர்-கீப்பர் என்று இவருக்கு பட்டப்பெயர் உண்டு. கோல் போஸ்ட்டை நோக்கி வரும் பந்தை, அப்படியே கூட்டித் தள்ளி விடுவார் என்பதால் இந்தப் பெயர். கடந்த 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பை தொடரில் நம்பர் 1 கோல் கீப்பராக அறிவிக்கப்பட்டார். கடந்த 2014ம் ஆண்டில் ஜெர்மன் உலகக்கோப்பையை வென்றது. அந்த தொடரில் சிறந்த கோல் கீப்பருக்கான ‘கோல்டன் கிளவுஸ்’ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

10. நெய்மர் (பிரேசில்)
கடைசியாக இந்த பட்டியலில் நெய்மர். 30 வயதுதான் இவருக்கு. அடுத்த உலகக்கோப்பை தொடரிலும் இவர் ஆடலாம். ஆனால் இதுதான் எனது கடைசி உலகக்கோப்பை என்று மறைமுகமாக கூறிவிட்டார். ரசிகர்கள் கொண்டாடும் டாப் 3 வீரர்கள் என்று பட்டியலிட்டால் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்சி, நெய்மர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு இணையான சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவர் ஓய்வு பெற்று விடக் கூடாது என்று ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். 18 வயதிலேயே பிரேசில் அணியில் இடம் பிடித்துவிட்டார். இன்று வரை முன்கள வீரராக ஜொலிக்கிறார். நாட்டுக்காக 75 கோல்கள் அடித்துள்ளார். தற்போது பிஎஸ்ஜி கிளப் அணியில் உள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

 • baaagh11

  பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

 • somaliya-dead-2

  சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

 • aus-fish-21

  ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்