SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டையே உலுக்கிய டெல்லி கொடூர கொலை ஒரு அறையில் காதலி சடலம்... இன்னொரு அறையில் டேட்டிங்...

2022-11-16@ 00:31:19

* குப்பை வேனில் ரத்தம் படிந்த ஆடைகள் ; காட்டிலும், ரோட்டிலும் நிர்வாண உடல் பாகங்கள்
* 15-20 நாளில் இன்னொரு பெண்ணுடன் காதலன் உல்லாசம்
* தடயங்களை அழிக்க பலே பிளான்

முகம் தெரியாத ஆண் நண்பர்களை டேட்டிங் ஆப் மூலம் தேடி கண்டுபிடிக்கும் பெண்கள், அவர்கள் எதிர்காலத்தை பற்றி யோசிப்பதே இல்லை. இன்றைய உலகத்தில் தொழில்நுட்பம் வளர, வளர டேட்டிங் உள்ளிட்ட பல்வேறு ஆப்களும், கொலை, பலாத்கார சம்பவங்ளும் அதிகரித்து வருகின்றன. டேட்டிங் ஆப்களால் நாட்டின் கலாச்சாரம் சீரழிவதோடு இல்லாமல் பல இளம்பெண்களின் வாழ்க்கை மண்ணோடு மண்ணாக புதைந்து விடுகிறது. இதனால், பல கனவுகளுடன் தங்களது குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு கண்ணீர் மட்டுமே மிச்சமாகிறது. இதற்கு சிறந்த உதாரணம் நாட்டையே உலுக்கி உள்ள டெல்லி கொடூர கொலைதான்.   

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வசாய் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா வாக்கர் (26). இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் மும்பையை சேர்ந்த அப்தாப் பூனாவாலா (28) என்பவரை காதலித்து வந்தார். இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால், சில மாதங்களுக்கு முன் ஷ்ரத்தாவை அப்தாப் டெல்லிக்கு அழைந்து வந்து, டெல்லி, மெஹ்ராலி பகுதியில் ஒரு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். ஷ்ரத்தாவின் காதலை விரும்பாத அவரது பெற்றோர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகளுடன் பேசாமல் இருந்துள்ளனர்.

ஷ்ரத்தா, டெல்லியில் தங்கியிருப்பதே அவர்களது பெற்றோருக்கு முதலில் தெரியாது. அவரது சமூக வலைதள பக்கத்தை பார்த்துதான் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது பெற்றோர் அறிந்து வந்தனர். கடைசியாக, தான் இமாச்சல் செல்ல இருப்பதாக பதிவு போட்டுள்ளார். அதன் பின் பல நாட்களாக எவ்வித பதிவும் இல்லை. கடந்த 2 மாதங்களாக ஷ்ரத்தாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்தாப்பும் தனியாக வேலைக்கு சென்று வந்துள்ளார். இதுகுறித்து ஷ்ரத்தாவின் சகோதரரிடம் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.  

இதனால் அதிர்ச்சியடைந்த ஷ்ரத்தாவின் தந்தை கடந்த 8ம் தேதி டெல்லியில் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து பார்த்தார். வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால், தன்னுடைய மகள் கடத்தப்பட்டதாக மெஹ்ராலி போலீசில் புகார் அளித்தார். போலீசார் தலைமறைவான அப்தாப் அமீனை தேடி கொண்டிருந்தபோது, டெல்லியில் பல இடங்களில் துண்டு துண்டாக மனித உடல் பாகங்கள் வீசப்பட்டது தெரிந்தது. அது, ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் என தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை அமைத்து கடந்த 12ம் தேதி அப்தாப்பை போலீசார் கைது செய்தனர். அவரை 5 நாளில் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அப்போது, போலீசாரின் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அப்தாப் கதறி அழுதார்.

அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ‘பம்பிள்’ ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் 2019ம் ஆண்டு ஷ்ரத்தாவுக்கும், அப்தாப்புக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் நேரில் சந்தித்து, மும்பை மலாட் பகுதியில் உள்ள ஒரே கால் சென்டர் நிறுவனத்தில் பணிபுரிய  தொடங்கினர். அப்போது, இருவரும் காதலரானார்கள். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு  தெரிவித்தனர். இதனால், இந்த ஜோடி இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லி  மெஹ்ராலிக்கு இடம்பெயர்ந்து லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்தனர். லிவ் இன் உறவில் இருந்த அப்தாப்பிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஷ்ரத்தா தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த மே 18ம் தேதி  இருவரும் சண்டை முற்றிய நிலையில், ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அமெரிக்க கிரைம் தொடரான ‘டெக்ஸ்டர்’யை முன் உதாரணமாக வைத்து ஷ்ரத்தாவை, அப்தாப் கழுத்தை நெரித்து கொலை  செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி உள்ளார். பின்னர், 300 லிட்டர் பிரிட்ஜ் வாங்கி அதில் 20 நாட்கள் உடல் பாகங்களை வைத்துள்ளார். தினமும் ஒரு துண்டை எடுத்து, அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அதிகாலை 2 மணிக்கு எடுத்து கொண்டு, 20 நிமிடங்கள் நடந்து சென்று டெல்லியில் பல்வேறு பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் வீசிவிட்டு வந்துள்ளார். கொலை செய்தபின் துர்நாற்றம் வர கூடாது என்பதற்காக ஊதுபர்த்திகளை அதிகம் கொளுத்தி வைத்துள்ளார். ரூம் ப்ரெஷ்னரையும் அதிகளவு அடித்து உள்ளார்.

ஷ்ரத்தாவின் தந்தை மும்பை போலீசில் அளித்த புகாரில், ஷ்ரத்தாவை அப்தாப் அடிக்கடி அடிப்பதாக தனது குடும்பத்தினருக்கு முன்பே தெரிவித்து உள்ளனர். அப்தாப்பை விசாரித்தப்போது, சில காலத்துக்கு முன்பே தாங்கள் பிரிந்துவிட்டதாக தெரிவித்தார். 2019ம் ஆண்டு முதல் லிவ் இன் உறவில் இருவரும் இருந்துள்ளனர். விசாரணையின்போது முன்னுக்கு பின் முரணாக அப்தாப் பதிலளித்ததால் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. ஷ்ரத்தாவை கொலை செய்த பின் தடயவியல் நிபுணர்கள் தடயத்தை கண்டுபிடிக்க முடியாதபடி, சல்பர் ஹைபோகுளோரைட்டை பயன்படுத்தி ரத்தத்தை கழுவி உள்ளார்.

இவ்வாறு செய்தால் அனைத்து டிஎன்ஏ தடயங்களையும் அழித்துவிடலாம் என்று அவர் நம்பி உள்ளார். ஷ்ரத்தாவின் ரத்தம் படிந்த ஆடைகளை குப்பை வேனில் வீசி உள்ளார். உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசி உள்ளார். ஷ்ரத்தாவை கொன்ற 15-20 நாட்களுக்குள் அதே டேட்டிங் ஆப் மூலம் அப்தாப் வேறொரு பெண்ணுடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார். புதிய காதலியையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை மற்றொரு அறையில் உள்ள கப்போர்டுக்குள் மறைத்து வைத்து உள்ளார். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடக்கிறது. இதில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம்.  இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

* 13 உடல் பாகங்கள் மீட்பு
ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி மூட்டையில் கட்டி டெல்லியில் பல்வேறு பகுதிகளில் அப்தாப் வீசினார். விசாரணையின்போது அவர் வீசியதாக சொன்ன தெற்கு டெல்லியில் உள்ள சத்தர்பூர் வனப்பகுதிக்கு சென்று 3 மணி நேரம் போலீசார் விசாரித்தனர். உடல் பாகங்களை எங்கெங்கு வீசினார் என அடையாளம் காட்ட கூறினர். அவர் கூறியபடி நடந்த தேடுதல் வேட்டையில் 13 உடல் பாகங்கள் மட்டுமே மீட்கப்பட்டது. வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு இரையாக ஷ்ரத்தாவின் உடலை அப்தாப் வீசி உள்ளதால், மீதமுள்ள உடல் பாகங்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வீசப்பட்ட உடல் பாகங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மீட்கப்பட்ட உடல் பாகங்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் வந்த பிறகே அது ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள்தான் என்பது உறுதிப்படுத்த முடியும்.

* ரம்பத்தால் உடல் துண்டுதுண்டாக அறுப்பு
ஷ்ரத்தாவை கொலை செய்ய பக்காவாக திட்டம் போட்ட அப்தாப், அவரை 35 துண்டுகளாக வெட்ட மினி ரம்பத்தை பயன்படுத்தி உள்ளார். இதன் மூலம்தான் ஷ்ரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டி எடுத்துள்ளார். 13 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மட்டும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* ரத்தக் கறையுடன் சிகிச்சைக்கு சென்றார்
மே 18ம் தேதி ஷ்ரத்தா உடலை ரம்பத்தால் துண்டுதுண்டாக வெட்டி எடுக்கும்போது அப்தாப்புக்கு கையில் ஆழமான வெட்டு விழுந்தது. இதனால், அவர் ரத்தக்கறையுடன் அவருடைய மருத்துவரிடம் சென்றுள்ளார். அவர் என்னாச்சு என கேட்டபோது, சமையல் செய்யும்போது பொருட்களை கத்தியால் வெட்டும்போது, எதிர்ப்பாராதவிதமாக இவ்வாறு நடந்துவிட்டது என கூறி உள்ளார். அவர் சொன்னது நம்புவதுபோல் இருந்ததால், மருத்துவருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. இதன்பின் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பி உள்ளார்.

* கசாப்புக்காரனான சமையல்காரர்
அப்தாப் ஒரு பயிற்சி பெற்ற சமையல்காரர் (செப்). இதனால், இவருக்கு கத்தியை கையாள்வது என்பது எளிது. மாமிசத்தை கசாப்பு கடைக்காரர் வெட்டுதுபோல், ஷ்ரத்தாவின் உடலை இவர், கிரைம் தொடரை பார்த்து வெட்டி உள்ளார். அப்தாப் ஒரு உணவு பிளாக்கர். இவரை, இன்ஸ்டாகிராமில் 28,500 பேர் பின் தொடர்கிறார்கள். ‘hungrychokro_escapades’ என பெயரிடப்பட்ட இன்ஸ்டாகிராம் உணவு வலைப்பதிவை அப்தாப் நடத்தி  வந்துள்ளார். உணவு சம்பந்தமாக நிறைய வீடியோக்களை பதிவிடுவார். இதில், உணவின் உயர்தர புகைப்படங்களை விவரிக்கும் 601 பதிவுகள் உள்ளன. கடைசியாக பிப்ரவரி 8ம் தேதி அவர் இந்த பக்கத்தில் பதிவு போட்டுள்ளார்.

*  இந்தி தெரியாது
மும்பையில் 20 ஆண்டுகளாக வசிக்கும் அப்தாப்புக்கு இந்தியே தெரியாது என்பது ஆச்சர்யமாக உள்ளது. ‘இந்த வழக்கில் கைது செய்யப்பட்டது முதல் தற்போது வரை விசாரணையில் அவர் இந்தி பேசவே இல்லை. ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்கிறார். அவருக்கு இந்தி தெரியாது என கூறுகிறார்’ என்று போலீசார் தெரிவித்துள்ளார்.

* ஷ்ரத்தாவின் இன்ஸ்டாவை பயன்படுத்திய அப்தாப்
கடந்த மே மாதமே ஷ்ரத்தாவை கொன்ற அப்தாப், அவர் உயிரோடு இருக்கிறார் என்று காட்ட பல திட்டங்களை போட்டுள்ளார். குறிப்பாக அவரது நண்பர்களை நம்ப வைக்க ஷ்ரத்தாவின் இன்ஸ்டாகிராமை அப்தாப் பயன்படுத்தி வந்துள்ளார். கடைசியாக ஜூன் மாதம் வரை ஷ்ரத்தாவின் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி உள்ளார். அதன்பிறகு, ஷ்ரத்தாவிடம் இருந்து எந்த குறுஞ்செய்திகளும் வராததால், நண்பர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

* தப்பிக்க கூகுளில் வழி தேடிய அப்தாப்
அமெரிக்க கிரைம் தொடர்  ‘டெக்ஸ்டர்’யை பார்த்து ஷ்ரத்தாவின் உடலை கூறுபோட திட்டமிட்ட அப்தாப், உடலை எப்படி பல துண்டுகளாக வெட்டுவது, தடயங்கள், ரத்த கறைகளை ஆதாரங்கள் இல்லாமல் அழிப்பது எப்படி?, உடலை குளியலறையில் மறைத்து வைத்து விட்டு, பிடிபடாமல் தப்புவது எப்படி என பல்வேறு வழிகளை கூகுளில் தேடி உள்ளார். அதில் கிடைத்த தகவல்படி, ரத்தத்தை சுத்தம் செய்து, தடயங்களை அழிக்க முயற்சித்துள்ளார்.

* கொலையை முன்பே அறிந்த ஷ்ரத்தா
கொடூரமாக கொல்லப்பட்ட ஷ்ரத்தாவின் தோழி (மும்பையில் வசிக்கிறார்) அசம்பாவிதங்கள் நடக்க போவதை முன்பே எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஒருமுறை ஷ்ரத்தா எனக்கு மெசேஜ் செய்து, அவளை அழைத்துச் செல்லும்படி கூறினார். இல்லையெனில் அப்தாப் கொலை செய்துவிடுவார் என்று கூறினார். அப்போது நண்பர்கள் சிலர் ஷ்ரத்தாவை எச்சரித்தனர். நாங்கள் அப்தாப் மீது போலீசில் புகார் அளிக்க சென்றோம். ஆனால் ஷ்ரத்தா எங்களைத் தடுத்தார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால், அவளது சகோதரரிடம் காவல்துறையை நாடுவது நல்லது என கூறினோம்’ என்று தெரிவித்தார். இவர் அப்தாப்  மற்றும் ஷ்ரத்தாவுக்கு பொதுவான நண்பர் என்று கூறப்படுகிறது. இவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.  

* பத்திரிகையாளராக ஆசை
ஷ்ரத்தாவின் மற்றொரு நெருங்கிய நண்பர் கூறுகையில், ‘அப்தாப் பின்னணியை பார்க்கும்போது, இந்த கொலை பெரிய சதியாக இருக்கலாம். போலீசார் கண்டுபிடிக்க வேண்டும். ஷ்ரத்தா ஒரு பத்திரிகையாளராக விரும்பினார். அவர் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். அவரது ஆளுமையில் ஒரு தீப்பொறி இருந்தது. 2018ம் ஆண்டு ஷ்ரத்தாவிடம் சில மாற்றங்களை கவனித்தேன். எப்போதும் வருத்தமாக இருப்பார். இது, அப்தாப் அவள் வாழ்க்கையில் நுழைந்த நேரம் என்று நான் நினைக்கிறேன்’ என்றார்.

* ‘லவ் ஜிகாத்’தா?
‘லவ் ஜிகாத்’தால் தனது மகள் கொல்லப்பட்டிருக்கலாம். எனது மகளை கொன்ற அப்தாப் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று ஷ்ரத்தாவின் தந்தை தெரிவித்துள்ளார். இதேபோல், மும்பை பாஜ எம்எல்ஏ ராம் கடம் கூறுகையில், ‘ஷ்ரத்தாவை அப்தாப் கொலை செய்ததற்கு பின்னால் ‘லவ் ஜிகாத்’ உள்ளதா என்பது  குறித்து விசாரணை நடத்தக் கோரி டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதுவேன்.  இதுபோன்ற சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் குழுக்கள் அல்லது கும்பல்கள் உள்ளனவா? இதில் எதிரி நாடு சம்பந்தப்பட்டதா? இது விசாரிக்கப்பட வேண்டும். ஷ்ரத்தா கொலையை ஒரு தனி வழக்காக பார்க்கக் கூடாது. இதற்கு முன்னரும்  இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன’ என்று தெரிவித்தார்.

* பிரிட்ஜில் வைத்த முகத்தை தினமும் பார்த்தார்
காதலியை 35 துண்டுகளாக வெட்டி தனித்தனி பாகங்களாக மூட்டைக்கட்டி அதை பாதுகாக்க புதிய ஒரு 300 லிட்டர் பிரிட்ஜ் ஒன்றை கிரெடிட் கார்டு மூலம் வாங்கி உள்ளார். பின்னர், உடல் பாகங்களை அந்த பிரிட்ஜில் வைத்துள்ளார். சுமார் 20 நாட்கள் வரை ஷ்ரத்தா உடல் பாகங்கள் பிரிட்ஜில் இருந்துள்ளது. அப்போது, ஷ்ரத்தாவின் முகத்தை தினமும் பார்த்து வந்துள்ளார்.

* மும்பை வீட்டை 15 நாட்களுக்கு முன் காலி செய்த அப்தாப் குடும்பம்
மும்பையில் சுமார் 20 ஆண்டுகளாக வசித்த அப்தாபின் குடும்பம் 15 நாட்களுக்கு முன்பு அந்த இடத்தில் இருந்து வெளியேறி சென்றுள்ளது தெரிய வந்தது. அப்போது அவர்களுக்கு அப்தாப் உதவி செய்ய மும்பை வந்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்கள் அங்கு சென்ற போது அப்தாப் மிகவும் சாதாரணமாக இருந்துள்ளார். ஷ்ரத்தாவும் இதற்கு முன்பு அடிக்கடி வந்து சென்றுள்ளது தெரிய வந்தது. இதுபற்றி அப்தாப் குடும்பம் வசிக்கும் குடியிருப்பின் தலைவர் ராம்தாஸ் கேவட் கூறுகையில், ‘எதற்காக வீட்டை காலி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அப்தாபின் இளைய சகோதரருக்கு சமீபத்தில் மும்பையில் வேலை கிடைத்தது. அவரது தந்தைக்கும் அங்கு தான் வேலை. எனவே மும்பைக்கு செல்வதுதான் சரி என்று அவர்கள் தெரிவித்தனர்’ என்றார்.

* சிபிஐயும் விசாரணை
இந்த கொலை வழக்கு நாட்டையே உலுக்கி உள்ளதால் சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்த தொடங்கி உள்ளனர். மெஹ்ராலி காவல் நிலையத்திற்கு நேற்று சென்ற சிபிஐ தடயவியல் அதிகாரிகள் உடல் பாகங்களை வைத்திருந்த பிரிட்ஜ் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். மேலும் வழக்கில் போலீசார் கைப்பற்றிய முக்கிய ஆதாரங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.

* கொலை செய்ய புதிய வீடு
ஷ்ரத்தாவும், அப்தாப்பும் டிராவலிங் செய்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்கள். மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மலைப்பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். மே மாதத்தில் சில நாட்கள் இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்று ஒன்றாகத் தங்கி உள்ளனர். அப்போது, டெல்லியை சேர்ந்த ஒருவரை சந்தித்தனர். பின்னர், அவர் தங்கியிருந்த குடியிருப்பில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். பின்னர், அப்தாப் சத்தர்பூரில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, ஷ்ரத்தாவுடன் மாறினார். இங்குதான் அவர் கொல்லப்பட்டார். இந்த வீடு கொலை சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஷ்ரத்தாவை கொலை செய்யும் நோக்கில் இவர் டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* வலையில் சிக்கிய பல பெண்கள்
அடுக்குமாடி குடியிருப்பில் ஷ்ரத்தாவுடன் குடியிருந்த அப்தாப், அங்குள்ள மற்றவர்களுடன் பழகவில்லை. ஷ்ரத்தாவையும் அவர்களுடன் நெருங்கவிடாமல் பார்த்து கொண்டுள்ளார். ஷ்ரத்தாவை கொன்ற 15-20 நாட்களில் அதே டேட்டிங் ஆப் மூலம் இன்னொரு பெண்ணுடன் அப்தாப் டேட்டிங் செய்துள்ளார். அந்த பெண்ணை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மேலும், இவர், பல பெண்களை அவர் வசிக்கும் குடியிருப்புக்கு அழைத்து வந்து உள்ளதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்தில் பல பெண்கள் அப்தாப் வீட்டிற்கு வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஷ்ரத்தாவை காதலிப்பதற்கு முன்பு 2014ல் இருந்து அவரது வலைப்பதிவு பக்கத்தில் அதிதி மெக்தா, அதிதி காந்தி, குஷ்பு, மான்சி லோக்ரே என்ற 4 பெண்களுடன் நெருங்கிப் பழகிய படங்களை அப்தாப் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

 • baaagh11

  பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

 • somaliya-dead-2

  சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

 • aus-fish-21

  ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்