திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை: மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு
2022-11-11@ 00:04:01

சென்னை: திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். இதில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார். திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த அக்டோபர் 9ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில், முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்ட செயலாளரும், தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர் பட்டியலை தயார் செய்து நவம்பர் 10ம் தேதிக்குள் தலைமைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அவ்வாறு நியமிக்கப்படும் வாக்குச்சாவடி முகவர் அந்தந்த வாக்குச்சாவடியில் குடியிருப்பவராகவும்-வாக்குச்சாவடி குறித்து முழுமையாக தெரிந்தவராகவும்-களப்பணி செய்பவராகவும் இருத்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்து திமுக தலைமைக்கு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக 12ம் தேதி (நாளை) ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.
வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்க உள்ளார். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பல்வேறு முக்கிய அறிவுரைகளை கட்சியினருக்கு அவர் வழங்க உள்ளார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு, புதுவைக்கு உட்பட்ட நாற்பது தொகுதிகளையும் கைப்பற்றுவதன் மூலமாக அகில இந்திய அரசியலில் முக்கியமான சக்தியாக நாம் திகழ வேண்டும். எந்தவகையிலும் யாரும் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. அடுத்து நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் 100 விழுக்காடு வெற்றியை நாம் பெற இதுதான் அடித்தளமாக அமையும் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்’’ என்று கூறி இருந்தார். அதன் அடிப்படையில் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
மதுரவாயல் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
திருவேற்காடு சாலையில் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை
மூவரசன்பட்டு ஊராட்சியில் ரூ.67.17 லட்சத்தில் வளர்ச்சி பணி: கிராமசபை கூட்டத்தில் முடிவு
போலீஸ் சிறப்பு தணிக்கையில் 7,195 வாகனங்கள் சோதனை: போதையில் ஓட்டியதாக 84 பேர் சிக்கினர்
இறைச்சிக்காக விஷம் வைத்து கொல்லப்பட்ட நீர் பறவைகள்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அருமந்தை கூட்டுச்சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!