SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வந்துவிட்டது புதிய வகை கொரோனா வைரஸ்; தீபாவளி கூட்டத்தில் என்ன நடக்க போகிறதோ?: விஞ்ஞானி சவுமியா, ஒன்றிய அமைச்சகம் எச்சரிக்கை

2022-10-21@ 21:57:29

புதுடெல்லி: உலக நாடுகளில் வேகமாக பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதால், மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், தற்போது ஒமிக்ரான் வைரசின் எக்ஸ்பிபி என்ற பிஎப்.7 வகை வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சில நாடுகளில் இந்த வைரஸ் தொற்று மற்றொரு அலையை ஏற்படுத்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், ‘தீவிர கண்காணிப்பு மூலமே புதிய வகை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றார். கொரோனா தொற்றுநோய் முடிந்துவிட்டதாக கூறவில்லை; அந்த வைரஸ் இன்னும் இருக்கிறது’ என்றார். இந்நிலையில் புதிய வகை வைரஸ் இந்தியாவுக்குள்ளும் பரவிவிட்ட நிலையில், ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு அனுப்பி உள்ள சுற்றிக்கையில், ‘நாடு முழுவதும் காய்ச்சல் போன்ற காரணங்களால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். இந்த வார இறுதியில், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் தொடங்கவிருப்பதால், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், கேளிக்கை விடுதிகள், மால்கள் போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். தற்போது வெகு சிலர் மட்டுமே முகக்கவசம் அணிகின்றனர். மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அதனால், தொற்று பரவல் அதிகரிக்குமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.

காலாவதியானது 10 கோடி டோஸ்: கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனவால்லா, செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், ‘கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்தியை கடந்த டிசம்பருடன் நிறுத்தி விட்டோம். மொத்த கையிருப்பில் இருந்த சுமார் 100 மில்லியன் (10 கோடி) டோஸ்கள், கடந்த ஆண்டு டிசம்பரில் காலாவதியாகிவிட்டன. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர். தடுப்பூசி ெசலுத்திக் கொள்வதில் மக்களிடையே ஒருவித சோம்பல் உள்ளது. 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்கு செலுத்தப்படும் ‘கோவாவேக்ஸ்’ தடுப்பூசியின் பூஸ்டர் தடுப்பூசிக்கான அனுமதி இன்னும் இரு வாரங்களில் கிடைத்துவிடும்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

 • baaagh11

  பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

 • somaliya-dead-2

  சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

 • aus-fish-21

  ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்