SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தவறுகள், குறைகள் என் கவனத்துக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்: அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

2022-10-04@ 00:08:49

சென்னை: அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பொறுப்பிலே இருக்கக்கூடிய திமுக நிர்வாகிகளிடம் எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும்  அலட்சியமான போக்கு வேண்டாம். தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. என் கவனத்திற்கு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க சிறிதும் தயங்க மாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திராவிட அரசியல் பேரியக்கமான திமுகவின் 15வது அமைப்பு தேர்தல் மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர்-கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி ‘விங்க்ஸ்’  கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது. திமுக தலைவர் என்ற பொறுப்பை, கண்ணுங் கருத்துமாக, எனது இதயத்திலும் தோளிலும் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், உங்களின் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஒருமனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி, அக்டோபர் 7ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறேன்.  

திமுக அமைப்புகளில் உள்ள பொறுப்புகளுக்குப் போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி மனு தாக்கல் செய்வது வழக்கம். ஒரு மாவட்டத்திற்கு ஒரு செயலாளர்தான் என்பதை மனு தாக்கல் செய்த ஒவ்வொருவருமே அறிவார்கள். தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னிலையில் அவர்களின் விருப்பமும், வாய்ப்பும் பரிசீலிக்கப்பட்டு, தேவையென்றால் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுவதும், அதற்கான அவசியம் ஏற்படாத நிலையில், ஒருமனதாக ஒருவரைத் தேர்வு செய்வதும் கலைஞர் உருவாக்கிய வழிமுறையின்படி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திமுக எனும் பேரியக்கம் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலமாக வலிமை குன்றாமல் இருப்பதும், தேர்தல் தோல்விகளைக் கடந்து மீண்டும் மீண்டும் மக்களின் ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து சமூகநீதி மற்றும் சமத்துவ நெறி அடிப்படையிலான சட்டங்களைத் தீட்டி, தக்க திட்டங்களை நிறைவேற்றுவதும் ‘பாரம்பரியமிக்கவர்களுக்கு’ உறுத்தலாக இருப்பதன் விளைவுதான், நம்முடைய  உள்கட்சித் தேர்தலில் அவர்கள் காட்டுகின்ற அதீத ‘அக்கறை’க்குக் காரணம். இவற்றையெல்லாம் கடந்துதான் திராவிட இயக்கம் நூற்றாண்டு காலமாக இந்த மண்ணில் ஓயாது பாடுபட்டு, மக்கள் மனதில் மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் உருவாக்கி, ஈராயிரம் ஆண்டுகால ஒடுக்குமுறைகளைத் தகர்த்து, இன்று ‘எல்லார்க்கும்  எல்லாம்’ என்கிற திராவிட மாடல் நல்லரசை வழங்கி வருகிறது.

கடைக்கோடி மனிதர்களுக்கும், கடைசி குக்கிராமத்திற்கும் அரசின் திட்டங்கள் சிந்தாமல்  சிதறாமல் சென்று சேர வேண்டும் என்கிற சிந்தையுடனும் முனைப்புடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது அரசு ஒவ்வொரு நொடியும் செயல்பட்டு வருகிறது. இதற்கு எப்படியாவது ஊறு விளைவித்திட வேண்டும் என நினைப்போரை சரியாக அடையாளம் கண்டு நாம் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயலாற்றிட வேண்டும். ‘சொன்னதைச் செய்வோம்-செய்வதைச்  சொல்வோம்’ என்கிற அரசாட்சியின் அடிப்படை இலக்கணத்தை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நமக்கு வழங்கியிருக்கிறார். அதனைக் குறைவின்றிக் கடைப்பிடிப்பதுடன்,  ‘சொல்லாததையும் செய்வோம். சொல்லாமலும் செய்வோம்’ எனப் புதிய புதிய முற்போக்குத் திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வருகிறோம்.

அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளாட்சிப் பொறுப்பிலே  இருக்கக்கூடிய திமுக நிர்வாகிகளுக்கும் நான் ஏற்கனவே செப்டம்பர் 26ம் நாளன்று ஓர் அறிக்கை வாயிலாக அன்புக்கட்டளை விடுத்திருக்கிறேன். அதனை மீண்டும் நினைவூட்டுகிறேன். எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள். மற்றவர்களைவிட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகளவில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் இன்னும் கூடுதல் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன். அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு, அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு நீங்கள் யாரும் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டங்களால் நிரம்பியது நமது ஆட்சி. அதனால், மக்களிடம் நம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றும் வகையில் நமது அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்குத் தடங்கலாகும் சூழலை திட்டமிட்டு உருவாக்க சில அரசியல் கட்சிகளும், அவர்களின் பின்னணிக் குரலாகச் செயல்பட நினைப்போரும் காத்திருக்கிறார்கள். நாம் பேசுகிற நீண்ட பேச்சில், தொடர்பில்லாமல் ஒரு சிறிய துண்டை மட்டும் எடுத்து, அதிலும் வெட்டி-ஒட்டி, திரித்து மோசடி செய்து, வெற்றுப் புழுதியைக் கிளப்பி, அதனை எதிர்ப்புப் புயல் என நம்ப வைக்க நினைக்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். அவர்களின் கற்பனையிலும் கனவிலும்தான் புழுதிமண் விழும்; விழ வேண்டும்.

அதற்கேற்ப உங்களின் சொற்களும் செயல்களும் கவனம் குறையாத வகையில் அமைந்திட வேண்டும். ஞாயிறு என்றாலே சூரியன்தான். உதயசூரியன் வெளிச்சத்தால் தமிழ்நாட்டில் விடியல் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் கதிரொளி எத்திசையும் பரவிடும் வகையில் செயல்படுவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றவிருக்கும் பொதுக்குழுவில், உயிரனைய உடன்பிறப்புகளை நானும், உங்களில் ஒருவனான என்னை நீங்களும் காணவிருக்கிறோம். ஒரு தாய் மக்களாய்-ஒரு கொள்கைக் குடும்பத்துச் சொந்த பந்தங்களாய் - பொதுக்குழுவில் நாம் காண்போம். தமிழ்ப் பொதுமக்கள் நலன் தவறாது காப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* திமுக தலைவர் தேர்தல் மு.க.ஸ்டாலின் 7ம் தேதி மனுதாக்கல்
பொதுக்குழு அக்டோபர் 9ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது. திமுக தலைவர் என்ற பொறுப்பை, கண்ணுங்கருத்துமாக, எனது இதயத்திலும் தோளிலும் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், உங்களின் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஒருமனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி, அக்டோபர் 7ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறேன் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* அறிவிப்பு
ஆயுத பூஜையை முன்னிட்டு தினகரன் அலுவலகத்துக்கு இன்று விடுமுறை. அடுத்த இதழ் 6ம் தேதி வியாழக்கிழமை வெளிவரும். - நிர்வாகி

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்