பசுமை சென்னை திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள 315 பூங்கா, 91 விளையாட்டு திடல்களை விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க முடிவு: அதிகாரிகள் தகவல்
2022-10-03@ 02:19:21

சென்னை: பசுமை சென்னை திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள 315 பூங்காக்கள், 91 விளையாட்டு மைதானங்களை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான தீர்மானமும் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலை விரிவாக்கம், புதிய கட்டுமான பணிகளுக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால், சுற்றுச்சூழல் மற்றும் மழை பொழிவு பாதிக்கப்பட்டு, கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்க வேண்டியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோடை காலத்தில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடியது. மக்கள் தண்ணீருக்காக குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டது. இதே நிலைமை நீடித்தால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் சில ஆண்டுகளில் வெகுவாக குறைந்து விடும் என்று ஆய்வுகள் தெரிவித்தன. இதை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தக்கோரி அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் இதன் ஒருகட்டமாக சென்னையை சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. சென்னை நகரின் மொத்த பரப்பளவு 426 சதுர கி.மீட்டராகும். இதில் 64 சதுர கி.மீ. பரப்பளவு பசுமையாக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமை கொள்கையின் அடிப்படையில் 33 சதவீதம் நகரம் பசுமை நிறைவுடன் காணப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையின் பசுமை பரப்பை அதிகரிக்கும் திட்டங்களுக்கு சென்னை மாநகராட்சி முன்னுரிமை அடிப்படையில் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. சென்னையை பசுமையாக்கும் முயற்சியில், ‘பசுமை சென்னை’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் மண்டல வாரியாக மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், காலி இடங்கள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மண்டலத்திலும், அதிகாரிகள், நலச்சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, மரக்கன்று நடும் பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்று, சென்னையை பசுமையாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில், அமைக்கப்பட்ட ‘மியாவாக்கி’ எனப்படும் அடர்வனம் தற்போது நன்கு வளர்ந்து, பசுமையாக காட்சியளிக்கிறது. இதன் பலனாக, சென்னையின் பசுமை பரப்பு 1 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, 1,000 இடங்களில் செயல்படுத்தப்பட்டால், சென்னையின் பசுமை பரப்பு, 4 முதல் 5 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அடர்வனத்திலும் மொத்தம் 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. மண்ணின் தன்மையை பொறுத்து, பல இடங்களில் அடர்வனங்கள் செழித்து வளர்ந்துள்ளன.
இதனால், அப்பகுதிகளில் குளிர் காற்று வீசுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைந்துள்ளதாக, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தவிர, மேலும் பல இடங்களில், தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புவாசிகளின் முயற்சியால், மரக்கன்றுகள், செடிகள் நடப்பட்டு, பசுமை பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் தற்போது, பசுமை பரப்பு 15 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் உள்ள காலி இடங்களில் மரக்கன்றுகளை நட்டு அப்பகுதிகளை பசுமையாக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் வெயில் வெளுத்து வாங்கினாலும் பூங்காக்களுக்குள் சென்றால் அங்கே மலை வாசஸ்தலங்களில் நிலவுவது போன்ற குளிர்ச்சியான சூழ்நிலையை உணரலாம் என்ற நோக்கத்தில் இந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு நடந்து வருகிறது.
இதனால் சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் பல இடங்களில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களும் பசுமை நிறைந்த பூங்காக்காளாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விளையாட்டு மைதானங்களை சுற்றிலும் செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதுதவிர சென்னை மாநகரில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதியில் செடிகள் உருவாக்கப்படுகின்றன. பாலத்தின் தூண் பகுதி முழுவதும் செடிகள் படர விடப்பட்டுள்ளன. இது பார்ப்பதற்கு பசுமையாக அழகாக உள்ளது. சென்னையில் மேம்பாலங்களின் கீழ் பகுதியில் உள்ள காலி இடங்களில் அழகிய செடிகள், மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன. இது தவிர பூங்காக்கள் மேம்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பச்சை பசேல் என காட்சியளிக்கும் வகையில் 315 பூங்காக்கள், 91 இடங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன. மாநகராட்சி மன்ற கூட்டத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
*குளிர்ச்சியான சூழல்
மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் கூறுகையில், ‘‘சென்னை மாநகரை பசுமையாக மாற்ற வேண்டும் என்பதே முதல்வரின் முக்கிய நோக்கமாகும். நகரம் முழுவதும் பூங்காக்கள், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மைதானம் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு மைதானத்தை சுற்றி மரங்கள் அமைத்து பசுமையான சூழலை உருவாக்கப்படுகிறது. அதற்கான முயற்சிகளில் சென்னை மாநகராட்சி முழு கவனம் செலுத்தி வருகிறது. இந்த பணிகள் எல்லாம் முடிவடையும்பட்சத்தில் பூங்காக்கள் மட்டுமல்ல அதை சுற்றி அமைந்துள்ள இடங்களும் எழில் மிகு தோற்றத்துடன் மாறும். அதோடு, குளிர்ச்சியான காற்று பூங்காக்களில் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, சிறுவர்கள் விளையாடும் பகுதி, இருக்கைகள் அமைத்தல், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நடுவில் ஸ்டேஜ் போன்றவையுடன் உருவாக்கப்படுகிறது,’’ என்றார்.
*மரம் நடுபவர்களுக்கு விருது வழங்கப்படும்
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. மரம் நடுவது மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும் என்றும், குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஆண்டுதோறும் குறைந்தது 500 மரங்களையாவது நட வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறது. அவ்வாறு நட்டு மரங்களை நன்றாக பராமரிக்கும் குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
Tags:
பசுமை சென்னை திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள 315 பூங்கா 91 விளையாட்டு திடல்களை விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க முடிவுமேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்