SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெற்றி வசப்படும்

2022-10-01@ 00:04:06

தமிழகத்தின் பொருளாதாரத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்த்துவதே நமது லட்சியம் என பெகாட்ரான் தொழிற்சாலையை திறந்துவைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கடந்த 2020-2021-ம் நிதியாண்டில் 1.93 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியை செய்து  தமிழ்நாடு, இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் இந்த ஏற்றுமதி, ஒட்டுமொத்த நாட்டின் ஏற்றுமதியில் 8.97 சதவீதம் ஆகும். இது, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரிக்க  வேண்டும். ஏற்றுமதியில் இந்திய மாநிலங்களில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம். அதுவே, எனது லட்சியம்  என முதல்வர்

குறிப்பிட்டுள்ளார். இந்த பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு ஏற்றுமதி மிகவும் முக்கியமானது. தற்போது, தமிழ்நாட்டின் ஏற்றுமதி 26 பில்லியன் டாலராக உள்ளது. இதை 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக அதிகரிக்க  வேண்டும். இந்தியாவின் ஏற்றுமதியில் தென்மண்டலம் சுமார் 27 சதவீதம் பங்கு கொண்டுள்ளது. இது அடுத்த 5 ஆண்டுகளில் 35 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பதே இலக்கு. ஒன்றிய அரசின், “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’’ என்ற திட்டத்தை, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்துவதை, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு உறுதிசெய்ய வேண்டும் எனவும் முதல்வர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தனித்தன்மையான தஞ்சாவூர்  ஓவியங்கள், தட்டுகள், வீணை, கோவை கோரா காட்டன் சேலைகள், கோவில்பட்டி கடலைமிட்டாய், சேலம் பட்டு, ஈரோடு மஞ்சள், அலப்பை பச்சை ஏலக்காய், நீலகிரி தேயிலை, திருவில்லிப்புத்தூர் பால்கோவா, பழனி பஞ்சாமிர்தம், சிறுமலை மலை வாழைப்பழம் என 48  பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் உள்ளன. இந்த தயாரிப்புகளுக்கு நல்ல  ஏற்றுமதி வாய்ப்புகளும் உள்ளன. மேலும், கம்பம் பன்னீர் திராட்சை, சேலம் ஜவ்வரிசி, உடன்குடி பனங்கருப்பட்டி, மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மக்ரோனி, பண்ருட்டி முந்திரி மற்றும் பலாப்பழம், மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 24  பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்து பரிசீலனையில் இருக்கிறது. வெளிநாடுகளிலும், இந்த பொருட்களுக்கு நல்ல வரவேற்பு  இருக்கிறது.

இதன்மூலம், நமது உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியின் மூலம்  மேன்மை அடையமுடியும் என்பதில் சந்தேகம் இல்லை. இவற்றை அதிகமாக தயாரிப்பதுடன், தரம் குறையாமல் பார்த்துக்கொள்ளும்போது ஏற்றுமதி சந்தை விரிவடையும்.  
2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்க ஆண்டுக்கு 13 முதல் 13.5 சதவீத வளர்ச்சி தேவை. திமுக அரசின் முதல் ஆண்டில், தமிழக வளர்ச்சி 14.5 சதவீதமாக உள்ளது. இதே நிலை அடுத்த 4 ஆண்டுகளிலும் தொடரும்போது இலக்கை நிச்சயம் அடைய முடியும். தமிழகத்தில் இப்போது இருக்கும் திறனையும், வளத்தையும் பார்க்கும்போது, ஏற்றுமதியில் நாம் இலக்கை தாண்டி, பயணிப்போம் என உறுதியாக கூற முடியும்.
தமிழகத்தில், அனைத்து துறைகளிலும் ஒருங்கே சாதனை படைத்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் அடுத்த இலக்கு எட்டப்படும் தூரம் வெகு தொலைவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், பல வெற்றிகளை தன்வசமாக்கிய தமிழக அரசுக்கு, இந்த வெற்றியும் மிக எளிதாக வசப்படும்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliand-monkey

  தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

 • light-show-28

  பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்