கூடலூரில் நடைபயணம்; எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் தலையீடு அதிகம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
2022-09-30@ 00:38:28

ஊட்டி: கூடலூரில் நேற்று ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் தலையீடு அதிகமாக உள்ளது என குற்றம்சாட்டினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி தொடங்கிய இந்த ஒற்றுமை நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 19 நாட்களாக ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் 450 கி.மீ. தூரம் பயணம் செய்து ஏராளமான மக்களை சந்தித்தார்.
கேரளாவில் நடைபயணத்தை நிறைவு செய்த அவர் நேற்று மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலம் பகுதிக்கு வந்தார். அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் ஓய்வெடுத்தார். பின்னர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள், படுகர் இன மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். மாலை 4.45 மணிக்கு அங்கிருந்து நடைபயணத்தை துவக்கினார். 6 கி.மீ. தூரம் நடந்து கூடலூர் பேருந்து நிலையம் அடைந்தார். சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் நின்று அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும், ஏராளமான மக்கள் அவருடன் நடைபயணத்தில் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.
நந்தட்டி பகுதியில் பழங்குடியின மக்கள் அவருக்கு பாரம்பரிய முறைப்படி நடனமாடி வரவேற்பு அளித்தனர். கூடலூர் நகரில் சிறுவன் ஒருவனை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு ராகுல்காந்தி மகிழ்ந்தார். கூடலூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: எனது சகோதரியின் இல்லம் சிம்லாவில் உள்ளது. சிம்லா அழகான ஊர். எனவே, அங்கு என்னை வருமாறு அடிக்கடி அழைப்பது வழக்கம். ஆனால், அதைவிட கூடலூர் அழகாக உள்ளது. இயற்கை எழில் கொஞ்சம் மலைகளும் பசுமை நிறைந்த காடுகளும் என்னை வசீகரித்தது. இங்கு தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் ஒன்றிணைந்து வாழ்கின்றனர்.
அனைத்து மதங்களின் கலாசாரங்களையும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதுவே இந்த நடைபயணத்தின் குறிக்கோளாகும். அதனை கூடலூர் மக்கள் மிகவும் அழகாக பின்பற்றி வருகின்றனர். அனைத்து மதங்களை சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து வாழும் இந்தியா எனும் நதியை ஒரே மொழி ஒரே மதம் என்று பாஜ சீர்குலைக்க முயற்சிக்கிறது. இதுபோன்ற அமைதி நதியில் வன்முறையை அனுமதிக்கமாட்டோம். தற்போது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கவர்னர்களை வைத்து கலைக்க பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் ஈடுபடுகின்றன. இதுவும் கண்டிக்கத்தக்கது. பாஜ வெறுப்பு அரசியலை நடத்தி வருகிறது.
சிறு தொழில் செய்பவர்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. நான் இன்று (நேற்று) சிறு மற்றும் குறு தொழில் செய்யும் பலரை சந்தித்தேன். அவர்கள் ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிறக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசு, தமிழக பொறுப்பாளர் குண்டுராவ், எம்பி ஜோதிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தை 14 ஆண்டுகளாக ரயில்வே புறக்கணிப்பு: ராமதாஸ் சாடல்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்
அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!