SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இதயம் காப்போம்

2022-09-29@ 00:22:22

இன்று சர்வதேச இதய தினம் (செப். 29). மனித உடலில் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய உறுப்பு இதயம். அதிகபட்சம் கால் கிலோ அளவில் எடையுள்ள இதயமே மனித உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, நம்மையும் அன்றாட வாழ்வில் சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. இன்றைய நவீன உலகில் பிறக்கும் குழந்தைகள் கூட சர்க்கரை நோய், இதய பாதிப்புடன் பிறப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் சர்க்கரை அளவு, ரத்தக்கொதிப்பு இயல்பாக இல்லாமலிருத்தல், ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு கூடுதலாக இருத்தலே இதய பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன.

மன அழுத்தம், நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஓட்டல்கள் மற்றும் பொது இடங்களில் ஆரோக்கியமற்ற முறையில் தயாரிக்கப்படும் துரித உணவுகளை அதிகளவில் உட்கொள்பவர்கள் எளிதாக இதய நோய் பிரச்னைக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் 1990களில் ஆண்டுதோறும் இதய நோய் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2.50 மில்லியனாக இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து தற்போது ஆண்டுக்கு 5 மில்லியன் பேருக்கும் மேல் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, 30 வயதை தாண்டினாலே முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நலம். பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் இதய நோயாளிகளின் சராசரி வயது 10 - 20 ஆண்டுகள் குறைவாக இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா ஊரடங்கு காலங்களில் பலர் வீட்டை விட்டு வெளியேறவில்லை. முறையான மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் மாரடைப்பு ஏற்படுவது 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் மெல்லிய மாரடைப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இதய நோய் பாதிப்பின் சதவீதம் 2 மடங்காக அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஒவ்வொருவரும் உடல் நலன், உணவு, உடற்பயிற்சி விஷயங்களில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். தினமும் காலை அரை மணி நேர நடைப்பயிற்சி, முடிந்தால் சிறு சிறு உடற்பயிற்சி, யோகா போன்றவைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இன்றைய அவசர உலகில் பலர் காலை உணவை தவிர்க்கின்றனர்.

அது உடலுக்கு நல்லதல்ல... காரணம், முதல்நாள் இரவில் இருந்து மறுநாள் காலை வரை மிக நீண்ட நேரம் உடலுக்குத் தேவையான உணவு எடுக்காமல் இருக்கிறோம். ஆகவே, காலையில் அவசியம் உணவு உட்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட  வயதுக்கு மேல் பொரித்த உணவு வகைகளை குறைத்தல் அல்லது கூடுமானவரை தவிர்த்தல், மிக தாமதமாக உணவு உண்ணுதல், அதிகளவு உடல் எடை போன்றவைகளும் இதய நோய்களுக்கு காரணமாகின்றன. அதுமட்டுமின்றி, இன்று ஒவ்வொருவர் கைகளிலும் ஆன்ட்ராய்டு செல்போன்கள் வந்த பின்னர், குடும்பத்தினருடன் கூட மனம் விட்டு பேசுவது குறைந்து விட்டது. மன உற்சாகத்திற்காக சுற்றுலா செல்லும்போது கூட, ரசிக்கும் மனோபாவமின்றி செல்பி எடுக்கும் கலாச்சாரம் பெருகி வருகிறது. குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்து வாழ்ந்தால்... நெருங்கி வரும் நோய்களை விரட்டியடிக்கலாம். இதயம் காப்போம்...!

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliand-monkey

  தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

 • light-show-28

  பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்