SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்க பசுமை தமிழகம் இயக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; முதல்கட்டமாக 2.80 கோடி மரம் வளர்க்க திட்டம்

2022-09-25@ 00:06:21

சென்னை: இயற்கை சொத்தை, அரசும்-மக்களும் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘பசுமை தமிழகம் இயக்கம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதனை சென்னை வண்டலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை வண்டலூரில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால், இயற்கையை நாம் நினைத்தால் நிச்சயமாக காப்பாற்ற முடியும். அதைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். அப்படிப்பட்ட உணர்வை எல்லோரும் பெற்றிட வேண்டும். அந்த அடிப்படையில் நம்மிடத்தில் இருக்கும் இயற்கை வளத்தைக் காப்பாற்றுவதற்காக பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழகம் என்பதே பசுமை மாநிலம் தான். நம்முடைய இலக்கியங்கள் இயற்கையைப் பற்றியே அதிகமாக எழுதி இருக்கின்றன. இயற்கையைப் பற்றியே நம்முடைய புலவர்கள் அதிகமாகப் பாடி இருக்கிறார்கள். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனம் நம்முடைய தமிழினம். மண்ணையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுத்து வாழ்ந்தவர்கள் நம்முடைய தமிழர்கள். மக்களுக்கு மட்டுமல்ல, மண்ணுக்கும் மணமும் குணமும் சொன்ன இனம் நம்முடைய தமிழினம். அனைத்து கோயில்களிலும் தனித்தனி மரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

வளர்ச்சி என்பதன் பெயரால் இயற்கைக்கு சோதனை வரும்போதெல்லாம், இயற்கையையும் காத்து வளர்ச்சியை வழிநடத்தி வருகிறோம். அதனால்தான் தமிழக அரசினுடைய பசுமைக் கொள்கை. இயற்கையையும்-பசுமையையும் அரசும், ஆட்சியும் மட்டுமே காப்பாற்றிவிட முடியாது. மக்களும் சேர்ந்தால் தான் காப்பாற்ற முடியும். ஏனென்றால், இயற்கை அரசினுடைய சொத்து மட்டுமல்ல-மக்களின் சொத்து. எதிர்கால சமுதாயத்தின் சொத்து. அத்தகைய இயற்கைச் சொத்தை, அரசும்-மக்களும் காக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தில்தான், இந்த பசுமைத் தமிழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்போது நமக்கு இருக்கக்கூடிய மாபெரும் அச்சுறுத்தல் என்பது காலநிலை மாற்றம் தான்.மண்ணின் வளம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நிலையான வாழ்வாதாரம், நிலையான வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு-ஆகியவற்றில் வனமும் மரமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே மரங்களை வைப்பது, வனங்களைப் பாதுகாப்பதில் பசுமை தமிழ்நாடு இயக்கம் கவனம் செலுத்த வேண்டும். அரசின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி உதவியாக 920 கோடியே 58 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. இதன் மூலமாக சுற்றுச்சூழலை மேம்படுத்த இருக்கிறோம்.

வனப் பகுதியின் சமூகப் பொருளாதாரம் மேம்படுத்தப்பட இருக்கிறது. அதேபோல், தரம் குன்றிய வன நிலப் பரப்புகளை மறுசீரமைப்பு செய்து, அவ்விடத்தில் புதிய வன மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வதற்காக, நபார்டு வங்கி 481 கோடியே 14 லட்ச ரூபாயையும் வனத்துறைக்கு வழங்கியிருக்கிறது, அதற்கான ஒப்புதலையும் தந்திருக்கிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேவையான திறனை நாட்டு மரங்கள் தருகின்றன. எனவே அதிகளவிலான நாட்டு மரங்களை நடுவது இந்த பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமாக இருப்பதை அறிந்து நான் உள்ளபடியே பாராட்டுகிறேன்.

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில், தட்பவெப்ப நிலை மாற்றங்களை தாக்குப் பிடிக்கும் மரங்களை அதிகமாக நடவேண்டும். அடுத்த பத்தாண்டு காலத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் அதிகமான இயற்கைச் சூழலை உருவாக்கியாக வேண்டும். இந்த இயக்கத்தின்கீழ் குறுகிய காலத்தில் மாநிலம் முழுவதும் 350 நாற்றங்கால்களில் 2 கோடியே 80 லட்சம் நாற்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன. பொருளாதார முக்கியத்துவத்தையும் மனதில் வைத்து சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க உழவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். மாநிலத்தின் உணவு உற்பத்தியில் சமரசம் செய்யாமல், மர உற்பத்தியைப் பெருக்க முயற்சிப்போம். இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், உழவர்கள், கிராம ஊராட்சி மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தைப் பெருக்க இந்தத் திட்டம் உதவும் என நம்புகிறேன்.

ஆட்டோ ஓட்டுநர்கள், மாணவச் செல்வங்கள், சுய உதவிக்குழுக்கள், தொழில்முனைவோர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இங்கே கூடியுள்ளீர்கள். இதை வெற்றியடையச் செய்ய வேண்டும். இந்த வெற்றி உங்கள் கைகளில்தான் இருக்கிறது. ஒரு அங்குல இடம் இருந்தாலும் கூட, அதில் ஒரு தாவரத்தினை வளர்ப்போம் என உறுதிமொழி எடுத்து, ஒவ்வொருவரும் எத்தனை தாவரங்களை உருவாக்க முடியுமோ அத்தனை தாவரங்களையும் உருவாக்கி இத்தமிழகத்தினைப் பசுமைமிகு தமிழகமாக மாற்றிட வேண்டும். செவ்விந்தியர்கள் எனப்படும் அமெரிக்கப் பழங்குடி மக்களிடையே சொல்லப்படும் புகழ்பெற்ற பொன்மொழி ஒன்றை இங்கு நான் சுட்டிக்காட்ட, நினைவூட்ட விரும்புகிறேன். “கடைசி மரமும் வெட்டப்பட்ட பின்னர்தான்- கடைசி ஆறும் நஞ்சுகளால் நிரப்பப்பட்ட பின்னர்தான்- கடைசி மீனும் பிடிக்கப்பட்ட பின்னர்தான்- பணத்தைச் சாப்பிட முடியாது என்பதை நீங்கள் உணர்வீர்கள்” - என்பதே அந்தப் பொன்மொழி. அத்தகைய நிலைமை நமக்கு வரக்கூடாது.

பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுப்போம். வளர்த்தெடுப்போம். பசுமையிலும் வளர்ந்த மாநிலமாக வளமோடு வாழ்வோம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பசுமை தமிழ்நாடு இயக்க தொடக்க விழாவில், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளில் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடுதலைப்பற்றி தேவையான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ள எண்ம சுவர் , எண்ம நூல்கள் போன்றவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும், இந்நிகழ்ச்சியின் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பசுமை தமிழ்நாடு இயக்கம் குறித்த ஆவண சிறப்பு மலரை வெளியிட்டார்.

பின்னர், பசுமையாக்கல் மற்றும் மரம் வளர்ப்பு பணிகளில் சிறந்த முறையில் பங்காற்றிய விவசாயிகள் மற்றும் தனிநபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு தங்களது பங்களிப்பாக, ஹூண்டாய் இந்தியா மோட்டார் நிறுவனத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாயும், மணலி தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் 35 லட்சம் ரூபாயும், பசுமை சுற்றுச்சூழல் பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் 1 லட்சம் ரூபாயும், மகளிர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.15 ஆயிரம், என மொத்தம் 46 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், கா.ராமச்சந்திரன், எம்பிக்கள் ஜி.செல்வம், கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, எஸ்.சுதர்சனம், இ.கருணாநிதி, ஏ.கிருஷ்ணசாமி, ஏ.வி.எம்.பிரபாகர் ராஜா, பி.அப்துல் சமது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கி வைக்கப்பட்ட நாளான இன்று, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

* பேரிடரில் இருந்து காக்கும் நாட்டு மரங்கள்
தமிழகத்தில் வனப் பரப்பை அதிகப்படுத்தி, பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் வகையில் “பசுமை தமிழ்நாடு இயக்கம்” தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டுமர வகைகள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் திகழ்வதால், அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவது மற்றும் ஊக்குவிப்பது பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும். இந்த இயக்கத்தின் கீழ், அடுத்த பத்தாண்டு காலத்தில் நகர்ப்புற பகுதிகள், விவசாயப் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள், தொழிற்சாலைகளுக்கு சொந்தமான நிலங்கள், ஏரிக்கரைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆற்றுப் படுகைகள் மற்றும் பிற பொது நிலங்களில் பொருளாதாரம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் மர வகைகள் நடப்படும். மேலும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்ரக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். நாற்றுகளின் தேவை மற்றும் நாற்றங்கால்களைக் கண்காணிக்க, பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்காக www.greentnmission.com என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்