SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒன்றிய அரசின் அலட்சியம்

2022-09-22@ 00:49:02

தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இலங்கை கடற்படை தாக்குவது, விரட்டியடிப்பது, சிறைபிடிப்பது போன்ற சம்பவங்கள் பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளன. கடந்த 20ம் தேதி, புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும், கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களின் வலையையும் வெட்டி கடலில் வீசி விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த அராஜக போக்கால் தமிழகத்தில் மீன்பிடித்தொழில் மிகப்பெரிய அபாயத்தில் உள்ளது. இந்த தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பியுள்ள லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

மீனவர் பிரச்னை தொடர்பாக, ஒன்றிய அரசு சார்பில் நடக்கும் பேச்சுவார்த்தைகள் கண் துடைப்பாகவே உள்ளன. இன்னும் சொல்லப்ேபானால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் நடவடிக்கையை கடுமையாக கண்டிப்பதோ, இந்த பிரச்னை தொடராமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்கவோ ஒன்றிய அரசு போதிய அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் மீனவர்கள் மத்தியில் தொடர்ந்து கூறப்படுகிறது. மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி விடுவிக்கக் கோருகிறார். தமிழக அரசின் தொடர் அழுத்தத்தாலேயே, மீனவர்கள் விரைவில் விடுதலையாகி வருகின்றனர். சமீபத்தில் கூட 12 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலை தொடர்பாகவும், ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தற்போது இலங்கை சிறையில் 19 மீனவர்கள் உள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட சுமார் 100 படகுகள் இலங்கை கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை அரசின் புதிய சட்டப்படி, சிறைபிடிக்கப்படும் மீன்பிடி படகுகள் அரசுடைமையாக்கப்படும். ஏலம் விடும் நடைமுறையும் உள்ளது. பல லட்சம் விலை கொடுத்து வாங்கப்பட்ட  தமிழக விசைப்படகுகள் இலங்கை கடற்பரப்பில் உப்புக்காற்று மற்றும் இயற்கை பேரிடர்களால் வீணாகின்றன. தமிழக அரசு தரப்பில் கூட சிறைபிடிக்கப்பட்ட படகுகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.

ஆனாலும், இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்கிறது. படகுகளையும் விடுவிக்க மறுக்கிறது. மேலும், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து தமிழகம் நோக்கி ஏராளமானோர் வந்தவண்ணம் உள்ளனர். இதுவரை 150க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். மேலும், வாழ்வாதாரம் தேடி வரும்  தமிழர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் வழிமறித்து, கைது செய்து மீண்டும் இலங்கைக்கே கொண்டு செல்லும் துயர சம்பவங்களும் தொடர்கின்றன. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடந்த ஜனவரி - ஏப்ரல் வரை 968 மில்லியன் டாலர் நிதியுதவி இந்தியா அளித்துள்ளது.

உணவுப்பொருட்கள், எரிபொருட்கள் ேதவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்திய அரசின் மனிதாபிமான உதவியை மனதில் கொள்ளாமல், தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைபிடிக்கும் சம்பவங்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. மீனவர்கள் பிரச்னை இனியும் தொடராமல் இருக்க, இருநாட்டு அரசுகளும் உரிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இப்பிரச்னைக்கு சுமூகமான தீர்வையும் காணவேண்டும். அப்போதுதான் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்கள், நிம்மதியாக மீன்பிடித்தொழிலை கையாள முடியும். யோசிக்குமா ஒன்றிய அரசு?

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliand-monkey

  தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

 • light-show-28

  பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்