SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒத்துழைப்பு வேண்டும்

2022-09-20@ 00:04:33

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனங்கள் என்பதால், இப்பகுதிகளில் அத்துமீறி நுழைவது, குப்பைகளை வனங்களில் வீசுவது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கிடக்கும் கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி- தெப்பக்காடு சாலையோரத்தில் யானை ஒன்று புல்வெளியில் கிடந்த பிளாஸ்டிக்கை தனது தும்பிக்கையால் எடுத்து உட்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக்கை சாப்பிடும் வனவிலங்குகளுக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டு இறக்கும் அபாயம் உள்ளது. வனவிலங்குகள் மற்றும் இயற்கை மீது ஒவ்வொருவருக்கும் அக்கறை வேண்டும். குறிப்பாக, வனப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்விஷயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் பிளாஸ்டிக் ஒழிப்பில் வெற்றி பெற முடியும்.

கடந்த காலங்களில் நாகரிகம் என்ற பெயரில் நகரம் முதல் கிராமம் வரை பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து இருந்தது. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால், பிளாஸ்டிக் பயன்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை ஒழிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக, நகரங்களில் கூட கடைக்கு செல்லும் மக்கள் துணிப்பையை பயன்படுத்தி வருகின்றனர். இது பிளாஸ்டிக் ஒழிப்பில் தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி. வளர்ச்சி, வலுவான கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மிக சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதைப்போல், பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

புதிதாக வனத்தை உருவாக்குவது எளிதான காரியம் இல்லை. வனப்பகுதி மற்றும் வனவிலங்குகளை காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. இதை சுற்றுலா பயணிகள் கருத்தில் கொள்ள வேண்டும். வனப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்த வனப்பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி பயன்படுத்தும் போக்கை சுற்றுலா பயணிகள் கைவிட வேண்டும். இயற்கை, வனவிலங்குகளை கண்டு ரசிப்பதை விட, அவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை சுற்றுலா பயணிகளுக்கு உள்ளது.

நகர பகுதிகளில் கால்நடைகள் பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே சாலையோரம் மற்றும் தெருக்களில் உணவுப்பொருட்களுடன் பிளாஸ்டிக் பையை வீசி செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன்படுத்துவது ஏன்? பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தால், அடுத்த தலைமுறையினர் கடும் பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliand-monkey

  தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

 • light-show-28

  பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்