திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்தல் தொடர்பாக சென்னையில் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது
2022-09-20@ 00:03:58

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்தல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. அதன் பிறகு பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்ட கழக தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர, மாநகர பகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. பின்னர் மாநகர கழகங்களுக்கான தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாவட்டம் வாரியாக வருகிற 22ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. வருகிற 25ம் தேதி காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கட்சி ரீதியாக உள்ள மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தலை எந்தவித பிரச்னைகளுக்கும் இடம் கொடுக்காமல் அமைதியாக நடத்த வேண்டும். தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தலை கண்காணிக்க நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் திமுக பொதுக்குழுவை எப்போது, எந்த தேதியில் கூட்டுவது என்பதும் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு இரண்டு நாட்களே உள்ளதால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதனால், திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் மாவட்ட செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதனால், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்து முடிந்த பின்னர் தலைவர், பொது செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். தொடர்ந்து பொதுக்குழு கூட்டப்பட்டு புதிய நிர்வாகிகளுக்கான ஒப்புதல் அளிக்கப்படும். திமுக பொதுக்குழு கூட்டம் அனேகமாக அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. எந்த இடத்தில், எந்த தேதியில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்பதை கட்சி தலைமை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
DMK District Secretaries Elections Chennai Chief Minister M.K.Stalin consultation with senior executives திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்தல் சென்னை மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைமேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் ஓ. பன்னீர்செல்வம்
உச்சநீதிமன்றத்தில் 30ம் தேதி இரட்டை இலை வழக்கு விசாரணை எடப்பாடி, ஓபிஎஸ் அவசர ஆலோசனை: நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே வேட்பாளரை அறிவிக்க இருவரும் முடிவு
சொல்லிட்டாங்க...
வரும் 30ம் தேதி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் கட்சி இணைப்பு? சமூக வலைதள பதிவால் பரபரப்பு
மருத்துவத்துறையில் காலியாக உள்ள இயக்குனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேமுதிக பொறுப்பாளர்கள் விஜயகாந்த் அறிவிப்பு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!