SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சரித்திரமாக நிலைக்கும்

2022-09-16@ 00:57:21

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நேற்று துவக்கி வைத்தார். மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். மாணவர்களுக்கும் சாப்பாடு ஊட்டிவிட்டார். தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு சமைப்பதில் எடுத்துக்கொள்கிற சிரத்தையோடு, தங்கள் அன்பை கொட்டி, தூய்மையுடன் உணவை பரிமாற வேண்டும் என களப்பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இளமையில், வறுமையோடும், பசியோடும் இருப்பது கொடுமையானது. பல மாணவர்கள் பசித்த வயிறோடு பள்ளிக்கு வருகின்றனர். வறுமை காரணமாக கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காகவே மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார்.

பின்னர், எம்ஜிஆர், கலைஞர் ஆட்சி காலத்தில் இது சத்துணவு திட்டமாக மாறியது. ஒருவேளை உணவு கிடைக்கிறதே என கிராமப்புற மாணவர்கள் பலர் பள்ளிக்கு வந்தனர். கலவை சாதம், வெள்ளை சாதம், சாம்பார் கொடுக்கப்பட்ட மதிய உணவில், முட்டை, வாழைப்பழம், உருளைக்கிழங்கு, சுண்டல், பாசிப்பயறு ஆகியவையும் சேர்க்கப்பட்டது. சத்தானதாகவும், சுவையானதாகவும் உணவு கொடுக்கவேண்டும் என்பதில் கலைஞர் அக்கறையோடு இருந்தார். தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிய உணவு மட்டும் போதாது, காலை உணவும் தேவை எனக்கருதி இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

கிராமப்புறங்களில், பல பெற்றோர் கூலி வேலைக்கு செல்பவர்களாக இருப்பதால், அவர்களது குழந்தைகள் காலையில் சாப்பிடாமலே பள்ளிக்கு வருகின்றனர். அதிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதால், பலர் மயக்க நிலைக்கு செல்கின்றனர் என களஆய்வில் தெரியவந்ததால், இத்திட்டத்தை முதல்வர் கொண்டு வந்துள்ளார். முதல்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்திற்காகரூ.33.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் துவக்கிவைத்தது மட்டுமின்றி, மாணவர்களுக்கு உணவு ஊட்டிவிட்ட காட்சி, டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. #TNBreakfast என்னும் ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இத்திட்டத்தை ஆஹா... அற்புதம்... என பாராட்டி வருகின்றனர். ‘’பசித்த வயிற்றுக்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீராக, திக்கற்றவர்களுக்கு திசையாக, யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருப்பதை போன்ற கருணை வடிவான திட்டம்தான், இந்த காலை உணவு திட்டம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என 7.5.2022 அன்று விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதை இன்று செய்துகாட்டியுள்ளார். தென்னிந்தியா மட்டுமின்றி, வட இந்தியாவிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டம், சரித்திரமாக நிலைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliand-monkey

  தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

 • light-show-28

  பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்