SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டுமனைகளாக மாறும் விளை நிலங்கள்; விவசாயம் அழியும் அபாயம்

2022-08-02@ 01:36:52

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் விவசாய மாவட்டமாக உள்ளது. ஏரி, குளங்கள், ஆறுகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.  திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவலாங்காடு, கடம்பத்தூர், பூண்டி, எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம், புழல், பூந்தமல்லி, வில்லிவாக்கம் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 526 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் கண்ணுக்கு பச்சை பசேலென காட்சியளிக்கும் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்கள் மூன்று போகமும் விளையக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத் தலைநகரான சென்னையை ஒட்டிய மாவட்டமான திருவள்ளூர் மாவட்டம் தற்போது வளர்ந்து வரும் மாவட்டமாக உள்ளது. சென்னையில் வீட்டுமனைகள் விற்பனை கோடிக்கணக்கில் விற்பனையாவதால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரிகள்,  தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என பெரும்பாலானோர் திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டுமனைகளை வாங்கி வீடு கட்டி வாழ்ந்து வரத் தொடங்கினர்.

இதனால் தற்போது திருவள்ளூர் மாவட்டத்திலும் வீட்டுமனைகளின் விலை உயர்ந்து வருகிறது.இந்நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், விவசாய நிலங்களை  குறைந்த விலைக்கு வாங்கி அதனை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யும் தொழில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்து காணப்படுகிறது.  இந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் விவசாயம் படிப்படியாக அழிந்து போகும் அபாயகரமான சூழ்நிலை உருவாகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை பச்சைபசேல் என்று இருந்த நெல்வயல்கள் இப்போது வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு வெட்டவெளியாக காய்ந்து கிடக்கின்றன. நாகரீக வளர்ச்சி மற்றும் கல்வித் தரம் உயர்ந்து இருப்பதால் படித்த இளைஞர்கள் நல்ல வேலைக்கு செல்லவே  பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதனால் நமது முன்னோர்கள் அந்த விளை நிலங்களை விற்றுவிடுகின்றனர். ஆதிகாலத்தில் இருந்த மனிதன் பசிக்காக விவசாயத்தைக் கண்டுபிடித்தான். இக்காலத்தில் உள்ள மனிதனோ அதனை பணத்துக்காக அழித்து வருகிறான். கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள் கூட கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட்  உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சில ஆண்டுகளாகவே விளைநிலங்கள் வீட்டு மனைகளுக்காக விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் நிலங்களை தரிசு நிலங்களாக்கினர். பயிர் இன்ஸ்சூரன்ஸ் திட்டம் அறிவிக்கபட்ட பின் விவசாயிகள் விவசாயம் செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். ஆனால் நகரங்களில் வீட்டு மனைகளுக்கான இடத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரியல் எஸ்டேட் நடத்துவோர், தேசிய நெடுஞ்சாலையோர கிராமங்களை தேர்ந்தெடுத்து மொத்தமாக விளை நிலங்களையும் விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். விளை நிலங்களுக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். விளைநிலங்கள் வீட்டு மனைகளுக்காக விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளதால், வரும் காலங்களில் விவசாய சாகுபடி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ‘உலக மயம்’என்ற வார்த்தை இன்றைய உலகையே உலுக்கி கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையால் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாடாய்படுகிறது. ‘உலக மயம்’‘தாராளமயம்’என்று இவர்கள் வார்த்தைகளை அடுக்கினாலும், உண்மையில் அனைத்தும் தனிநபர்களை முதலாளியாக்குகின்றன. உலகில் உள்ள பெரும் பணக்காரர்களின் கையில் உலகத்தையே ஒப்படைப்பது தான் இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வெளிநாட்டு கொள்கையில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டாலும், விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலும் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. புதிது, புதிதாக தொடங்கப்பட்ட மனை விற்பனை நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் போட்டி, போட்டு கொண்டு விவசாயத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு கூறுபோட்டு கொண்டிருக்கிறது. ஒரு நாட்டின் இன்றியமையாதது அந்நாட்டின் உணவு உற்பத்தியே. அத்தகைய உணவு உற்பத்தியை இயற்கையாக பெற்றுள்ள நாடு நமது நாடு.

அத்தகைய விவசாயத்தை பேணிக்காப்பது நமது கடமை. எனவே விளை நிலங்களை வீட்டுமனைகளாக விற்க அரசு தடை விதிக்க வேண்டும் என்றும், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை உணவு வகைகளை நாம் பார்ப்பதே அரிதாக உள்ளது. பீசா, பர்க்கர் போன்ற வாயில் நுழையாத பெயர்களை கொண்ட உணவு வகைகளையே இந்த காலத்து இளைஞர்கள் சாப்பிடும் நிலை உள்ளது. அந்த காலத்தில் கம்பு, கேழ்வரகு போன்றவற்றை பயிர்களை அதிகளவில் பயிரிட்டு வந்தனர். அதனை சாப்பிட்ட நம் முன்னோர்களும் 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது 30 வயது ஆனதுமே, பல்வேறு நோய்கள் ஏற்பட்டு 50 முதல் 60 வயதுக்குள் பெரும்பாலானோர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனவே விளை நிலத்தை வீட்டு மனைகளாக விற்பனை செய்ய அரசு தடை விதிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருக நல்ல பல திட்டங்களை செயல்படுத்திடவும் விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்