பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகலா? பீகார் அரசியலில் திடீர் திருப்பம்; 10 நாட்களில் 3 முக்கிய நிகழ்ச்சிகளை புறக்கணித்ததால் பரபரப்பு
2022-07-25@ 21:45:30

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த 10 நாட்களில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 3 முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்ததால், கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய கூட்டணி கட்சிகளில் ஐக்கிய ஜனதா தளமும் ஒன்றாகும். இக்கட்சியின் தலைவரான நிதிஷ்குமார், பாஜகவுடன் கூட்டணி அமைத்து பீகாரில் ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால் பீகார் அரசியலில் நிதிஷ்குமார் - மாநில பாஜக தலைவர்கள் இடையே ஆட்சி அதிகாரத்தில் முட்டல் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார். ஆனால், இந்த விசயத்தில் பாஜக தலைமைக்கும் நிதிஷ்குமாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதனால் கடந்த 10 நாட்களில் பாஜகவின் மிக முக்கியமான 3 நிகழ்ச்சிகளில் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை. கடந்த 17ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த தேசிய கொடி தொடர்பான நிகழ்ச்சிக்கு நிதிஷ்குமார் செல்லவில்லை. அவருக்குப் பதிலாக வேறொரு பிரதிநிதியை அனுப்பிவைத்தார். கடந்த வெள்ளிக்கிழமை குடியரசு தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியிலும் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை. இதற்கு காரணம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பதுதான் என்று கூறப்படுகிறது. ஆனால், குடியரசுத் தலைவரின் பிரியாவிடை நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் கலந்து கொள்ளாத நிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் மாலை 4 மணியுடன் முடிவடைந்தது.
இன்று திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவியேற்ற நிகழ்ச்சியிலும் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை. நூறு நாள் வேலை திட்டம் தொடர்பான கூட்டம் பீகாரில் நடப்பதால், அவர் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. முன்னதாக பீகார் சட்டப் பேரவையின் நூறாண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றிய விதம் இருவருக்கும் கருத்து வேறுபாட்டை அதிகரிக்க செய்தது. அன்றைய கூட்டத்தில் சபாநாயகர் விஜய் குமார், நிதீஷ் குமாரின் பெயரை குறிப்பிடாமல் இருந்தது மற்றும் நினைவுப் பரிசில் நிதிஷ்குமாரின் புகைப்படம் இல்லாதது ஆகியன உறவுகள் பாதிக்கப்பட்டதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் சபாநாயகரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், பாஜக தலைவர்கள் மாநில அரசை பகிரங்கமாக விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் நிதிஷ் குமார் ஏற்கனவே பாஜக மூத்த தலைவர்களிடம் கோரி வருகிறார்.
ஆனால் அவர்கள் செவிசாய்ப்பதில்லை. இதன்மூலம் பீகாரில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. ஆனால் கூட்டணி ஒப்பந்தத்தின்படி, நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை பாஜக தாரை வார்த்தது. கடந்த மாத தொடக்கத்தில், அக்னிபாதை திட்டம் குறித்து ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு, மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் ஐக்கிய ஜனதா தளத்தை கடுமையாக விமர்சித்தார். இவ்வாறாக ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்குள் மாநில அளவில் மோதல்கள் அதிகரித்து வருவதால், தொடர்ந்து பாஜக சார்ந்த கூட்டங்களை நிதிஷ்குமார் புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக கூட்டணிக்குள் பிளவு ஏற்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்
திருமணமான சில மாதங்களில் சண்டை கணவர் தாக்கியதில் நடிகையின் முகம் வீங்கியது: நகை, பணத்தை அள்ளிச் சென்றதாக புகார்
ஓடும் பைக்கில் ‘ரொமான்ஸ்’: காதல் ஜோடி மீது போலீஸ் வழக்கு
ரூ38 கோடி மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் கைது: ஐதராபாத் போலீஸ் அதிரடி
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்
பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடி கியாரா, சித்தார்த் திடீர் திருமணம்
'கட்சிகளிடம் ஒற்றுமையில்லாததால் 2019ல் மீண்டும் பாஜக ஆட்சி': மாநிலங்களவையில் பாஜக அரசை உப்புமாவுடன் ஒப்பிட்டு விமர்சித்த திருச்சி சிவா..!!
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!