SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்சியை கவிழ்க்கலாம்.! ஆட்சியை அமைக்கலாம்.! அ முதல் ஃ வரை...இந்தியாவை ஆட்டிப்படைக்கும் சொகுசு விடுதி அரசியல்

2022-06-29@ 00:09:04

உலகத்திலேயே எங்குமே இல்லாத ஒரு அரசியல் பார்முலா, நம் நாட்டில் மட்டும்தான் உள்ளது. இது நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்ல. அதாவது, எந்த நாட்டிலும், மக்கள் பிரதிநிதிகள் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படுவதாக சரித்திரம் இல்லை. ஆனால், இந்தியாவில் மட்டும்தான் ஆட்சியை காப்பாற்றவும், ஆட்சியை கவிழ்க்கவும் என இரு விஷயத்திற்கும் சொந்த கட்சி எம்எல்ஏக்கள் சிறைக் கைதிகளாக ஒரே இடத்தில் அடைக்கப்படுகிறார்கள். இந்த அரசியல் பார்முலாவின் பிரம்மாஸ்திரமாக திகழ்பவைதான் சொகுசு ஓட்டல்கள், சொகுசு ரிசார்ட்டுகள். இதைத்தான் கவுரவமாக ‘ரிசார்ட் அரசியல்’ என்கின்றனர். அதாவது, ‘சொகுசு விடுதி அரசியல்’. காரணம், எம்எல்ஏ.க்களை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு தேவையான ‘அனைத்து’ விதமான சகல சவுபாக்கியங்களும் இங்கே அவர்களுக்கு கிடைத்து விடும்.

மகாராஷ்டிராவில் பரபரப்பு

ரிசார்ட் அரசியலுக்கு நாட்டின் எந்த மாநிலமும் விதி விலக்காக இல்லை. சமீபத்தில் மாநிலங்களவை தேர்தலின் போது ராஜஸ்தானை மையம் கொண்ட சொகுசு விடுதி அரசியல், தற்போது மகாராஷ்டிராவில் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆளும் சிவசேனா கட்சியில் அதிருப்தி அடைந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட எம்எம்ஏ.க்கள் அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர். இதனால், சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளின் கூட்டணியில் அமைந்த மகா விகாஸ் அகாடி அரசு எந்த நேரத்திலும் கவிழும் நிலையில் உள்ளது.

வளர்த்த கிடா

உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை இழப்பதோடு மட்டுமில்லாமல், சிவசேனா கட்சித் தலைவர் பதவியையும் கூட இழக்கும் துயரத்தில் தவிக்கிறார். ஆனால், கட்சியில் அவரால் வளர்த்து விடப்பட்டவர்களோ, சொகுசு ஓட்டலில் சொகுசாக தங்கி கொண்டு, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிரா மக்களோ நடக்கும் கூத்துகளை பார்த்து விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, எதிர்க்கட்சியாக உள்ள பாஜ, ஆட்சியை பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. சிவசேனா ஆட்சியை கவிழ்க்க காய் நகர்த்திய ஷிண்டே, ஹீரோ போல் பரபரப்பாக பேசப்படுகிறார்.

பிள்ளையார் சுழி

சொகுசு விடுதி அரசியல் இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. இது கிட்டத்தட்ட 40 ஆண்டு கால வரலாற்றை கொண்டிருக்கிறது. சொகுசு விடுதி அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் தேசிய லோக் தளம் கட்சியின் தேவி லால்தான். 1982ல் அரியானாவில் ஆட்சி அமைக்க எம்எல்ஏ.க்களை டெல்லியில் உள்ள ஓட்டலில் தங்க வைத்து, இந்த புதுவித அரசியலை தொடங்கி வைத்தார். அதன்பின் இன்று வரையிலும் சொகுசு விடுதி அரசியல் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

கழுகுகளிடம் இருந்து காக்க:

கர்நாடகாவில் கடந்த 1983ல் ஜனதா கட்சியின் முதல்வரான ராமகிருஷ்ண ஹெக்டே, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் இருந்து தப்பிக்க சொகுதி விடுதி அரசியல் எனும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தார். கட்சியின் 80 எம்எல்ஏ.க்களை ஒரு சொகுசு விடுதியில் தங்க வைத்தார். ‘காங்கிரஸ் கழுகு’களிடம் இருந்து காப்பற்றுவதற்காக எம்எல்ஏ.க்களை சொகுதி விடுதியில்  தங்க வைத்திருப்பதாக ஹெக்டே பேசியது பரபரப்பானது. இதில், ஹெக்டே ஆட்சியை காப்பாற்றி வெற்றி கண்டார்.

பெங்களூருக்கு வந்த ஆந்திரா

கடந்த 1984ல் ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார். அப்போது நாதென்த்லா பாஸ்கர ராவை இடைக்கால முதல்வராக ஆளுநர் நியமித்தார். இதனால், தெலுங்கு தேசம் கட்சியில் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசம் எம்எல்ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதிகள், ஓட்டல்களில் கிட்டத்தட்ட 2 மாதங்கள் தங்க வைக்கப்பட்டனர். 2 மாதத்திற்கு பின் என்டிஆர் திரும்பி வந்த பிறகுதான், இந்த எம்எல்ஏ.க்கள் ஆந்திரா அழைத்து வரப்பட்டனர்.

ஆட்சிக் கவிழ்ப்பு

இப்படியாக ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்டு வந்த சொகுசு விடுதி அரசியல், முதுகில் குத்தும் துரோக அரசியலாக மாறியது கடந்த 1995ல்தான். கடந்த 1995ல் தெலுங்கு தேசம் கட்சியில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. கட்சியில் தூக்கி வளர்த்த, நம்பிக்கைக்கு பாத்திரமான மருமகன் சந்திரபாபு நாயுடு, முதல்வர் என்டிஆருக்கு எதிராக கலகம் செய்தார். 1994ல் நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 226 இடங்களில் வென்றிருந்தது. ஆனால், 200 எம்எல்ஏக்கள் என்டிஆருக்கு எதிராக திரும்பினர். அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திரபாபு நாயுடு ஐதராபாத் ஓட்டலில் தங்க வைத்தார். இதனால், என்டிஆர் முதல்வர் பதவியை இழக்க, சந்திரபாபு நாயுடு அரியணை ஏறினார். இப்போது இதே போன்ற ஒரு உட்கட்சி பிரச்னையைதான் மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சி சந்தித்து வருகிறது.  

இதே போல், கர்நாடகாவில் கடந்த 2019ல் ‘ஆபரேஷன் தாமரை’ என பெயரில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடந்தது. 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பெரும்பான்மை இழந்தது. உடனடியாக மஜத, காங்கிரஸ், பாஜ ஆகிய 3 கட்சிகளும் தங்களின் எம்எல்ஏ.க்களை பெங்களூர், மும்பையின் புறநகரில் உள்ள சொகுசு விடுதிகளில் தங்க வைத்தன. ஆனாலும், மஜத.வின் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அங்கு பாஜ ஆட்சியை கைப்பற்றியது.

வேற லெவல்

இதன் பின் பல்வேறு காலகட்டங்களில் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார், வடகிழக்கு மாநிலங்களிலும் கூட சொகுசு விடுதி அரசியல்கள் நடந்துள்ளன. ஆனாலும், இந்த அரசியலை வேற வெலுக்கு கொண்டு சென்று, உலகப் பிரபலமாக்கிய பெருமை தமிழ்நாட்டின் அதிமுக கட்சியையே சேரும்.

கூவத்தூர் கூத்து

கடந்த 2017ல் தமிழக முதல்வராக சசிகலாவை நியமிக்கும் முயற்சியாக அதிமுக எம்எல்ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு எம்எல்ஏக்கள் நீச்சல் குளத்தில் நீந்துவது, ஊஞ்சல் ஆடுவது, ஜாக்கிங், சைக்கிளிங், வாக்கிங் செய்வது, பாட்டு பாடுவது என அதிரிபுதிரி செய்த வீடியோக்களும், புகைப்படங்களும் பத்திரிகைகளிலும், டிவி சேனல்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது, ‘அ முதல் ஃ வரை’ அனைத்தும் சப்ளை செய்யப்பட்டன. வெளியில் அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்க, ஓட்டலில் எம்எல்ஏ.க்கள் கூலாக ‘என்ஜாய்’ செய்த விஷயங்கள் மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி, சொகுதி விடுதியில் இருந்து சில எம்எல்ஏ.க்கள் தப்பி வந்ததும், பரபரப்பாக பேட்டி அளித்ததும், த்ரில்லர் சினிமாவை விட அதிகமான விறுவிறுப்பை ஏற்படுத்தின. இப்படியாக, இந்த சொகுசு விடுதி அரசியல் நாட்டில் பல மாநிலங்களில் ஆட்சியை காப்பாற்றியும் உள்ளன; பல ஆட்சிகளை கவிழ்த்தும் உள்ளன. பெரும்பாலும் ஆட்சிக்கு குழிதோண்டும் அரசியல் களமாக சொகுசு விடுதிகள் மாறி வருகின்றன. இங்கு அதிருப்தி எம்எல்ஏக்களை அடைத்து வைத்து ஆட்சியை கவிழ்ப்பவர்கள் ஹீரோக்களாக புகழப்படுகின்றனர். அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில், இதுவும் ஒரு அரசியல் தந்திரமாக, அரசியல் சாதுர்யமாகத்தான் பார்க்கப்படுகிறது.


தோல்விகளும் உண்டு

சொகுசு விடுதி அரசியல் அனைத்தும் வெற்றிக்கதைகளாக அமைந்ததில்லை. இதில் சிலர் தோல்வியையும் சந்தித்துள்ளனர். முதல் சொகுசு விடுதி அரசியலே தோல்விதான். கடந்த 1982ல் அரியானா சட்டப்பேரவை தேர்தலில் தேவி லாலின் தேசிய லோக் தளம்-பாஜ கூட்டணி 37 இடங்களிலும், காங்கிரஸ் 36 இடங்களிலும் வெற்றி பெற்றன. 90 இடங்களை கொண்ட பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 45 எம்எல்ஏ.க்கள் தேவை. சுயேச்சைகள் 16 பேர் வென்றிருந்தனர். அவர்களில் 8 பேரை அழைத்துக் கொண்டு, 45 எம்எல்ஏ.க்களுடன் தேவி லால் டெல்லி ஓட்டலில் முகாமிட்டார்.

ஆனால், ஒரு சுயேச்சை எம்எல்ஏ, ஓட்டலில் தண்ணீர் குழாய் வாயிலாக தப்பிச் சென்றதால், லோக் தளம்-பாஜ கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. 16 சுயேச்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இதே போல், கடந்த 2020ல் ராஜஸ்தானில் உட்கட்சி மோதல் ஏற்பட்ட போது காங்கிரசின் அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் 18 எம்எல்ஏ.க்களுடன் அம்மாநில முதல்வர் கெலாட்டுக்கு எதிராக சொகுசு விடுதி அரசியலில் இறங்கினார். ஆனால், கட்சி மேலிடம் சமரசம் செய்து வைத்ததால், கெலாட் அரசு தப்பியது. பைலட்டின் முயற்சி தோல்வி அடைந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nepal_snowfall

  நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு; பலர் காயம்

 • italy-first-female

  இத்தாலியில் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி

 • shooting-russia-school-26

  ரஷ்யாவில் பள்ளி வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!!

 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்