SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முகமது நபிகள் குறித்து பாஜ தலைவர்கள் சர்ச்சை கருத்து அரபு நாடுகள் கடும் அழுத்தம்: பாக். கண்டனத்திற்கு இந்தியா பதிலடி

2022-06-07@ 07:40:17

புதுடெல்லி: முகமது நபிகள் குறித்து பாஜ தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் அரபு நாடுகள் ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசுக்கு கடும் அழுத்தம் தந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி தந்துள்ளது. பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதை கண்டித்து உபி கான்பூரில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால், சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்து பாஜ நடவடிக்கை எடுத்தது. அதே போல, கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்ட டெல்லி பாஜ செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெரும் அழுத்தமாக மாறி உள்ளது. துபாய், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்து, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்நாடுகளின் இந்திய தூதர்களுக்கு சம்மன் அனுப்பியது. மேலும், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார் போன்ற நாடுகளும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தான் கூட இந்த விவகாரத்தில் இந்தியாவை கண்டித்துள்ளது. முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா பொது மன்னிப்பு கோர வேண்டுமென குவைத் அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த அரபு நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த வரிசையில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோர் கண்டன அறிக்கைகளை விடுத்தனர். ‘இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான செயல்கள் நடப்பதை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என ஷெபாஸ் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதர் விளக்கம் அளிக்க பாகிஸ்தான் அரசு நேற்று சம்மன் அனுப்பியது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தன் பாக்சி நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி செய்வதற்கு பதிலாக தன் நாட்டின் பாதுகாப்பு, மக்கள் நல வாழ்வுக்கான விவகாரத்தில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும். சிறுபான்மை சமூகத்தினரை எவ்வாறு நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பது குறித்து கருத்தில் நீங்களே யோசித்து பார்க்க வேண்டும். பாகிஸ்தான் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில் பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், உள்ளிட்ட சிறுபான்மையினர் துன்புறுத்தப் படுவதற்கு உலகமே சாட்சியாக உள்ளது’’ என்றார்.

இதே போல இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஐசி) கண்டனத்திற்கும் இந்தியா பதிலடி தந்துள்ளது. இது குறித்து அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘‘சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறிப்பிட்ட நபர்களால் தெரிவிக்கப்பட்டவையே தவிர அவை எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை. அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகும் தேவையற்ற மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை இந்தியா நிராகரிக்கிறது’’ என தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தால் வளைகுடா நாடுகளுடனான இந்திய உறவு பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், பாஜ தலைவர்களின் பொறுப்பற்ற கருத்தால் நாடே தலைகுனிய வேண்டிய நிலைக்கு ஆளாகி இருப்பதாக எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 1.35 கோடி பேர். இதில் வளைகுடா நாடுகளில் மட்டும் 87 லட்சம் பேர் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

* கைது செய்ய வேண்டும்
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், ‘‘பாஜ தலைவர்களின் கருத்துக்களுக்காக தேசம் மன்னிப்பு கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. நமது பிரதமருக்கு கத்தார் மற்றும் குவைத் போன்ற நாடுகள் ‘ராஜ தர்மத்தை’ நினைவூட்டுகின்றன. இதை விட வெட்கக்கேடானது எதுவும் இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் இந்தியா மன்னிப்பு கேட்கக்கூடாது, இது நாட்டின் தவறு அல்ல. பாஜ தான் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். இதே போல காங்கிரஸ் கட்சி நேற்று விடுத்த அறிக்கையில், ‘பாஜவின் இத்தகைய சமூக விரோதிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்’ என கூறி உள்ளது.

* இந்திய பொருட்கள் புறக்கணிப்பு
மத உணர்வை புண்படுத்தியதால், இந்திய தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென்ற பிரச்சாரம் வளைகுடா நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. குவைத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நேற்று இந்திய நிறுவனங்களின் அரிசி, மிளகாய், மசாலா பொடி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்ட ரேக்குகள் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டிருந்தன. அதன் மீது, ‘நாங்கள் இந்திய தயாரிப்புகளை அகற்றிவிட்டோம்’ என்றும் எழுதப்பட்டுள்ளது. அந்த சூப்பர்மார்க்கெட் உரிமையாளர், ஒட்டுமொத்தமாக இந்திய தயாரிப்புகளை விற்பதை நிறுத்தப் போவதாகவும் கூறி உள்ளார். பல இடங்களிலும் இந்திய பொருட்கள் விற்பனை பாதிக்கும் நிலை உள்ளது.

* கொலை மிரட்டல் குறித்து வழக்கு
இந்த விவகாரத்தில் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜ தலைவர் நுபுர் சர்மா அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்