SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இது நியாயமில்லை

2022-06-05@ 00:32:53

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎப் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் வட்டியை மேலும் குறைத்துள்ளது ஒன்றிய அரசு. 2021-22ம் நிதியாண்டுக்கான வட்டி 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த வட்டியாகும். தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்களின் எதிர்கால பாதுகாப்புக்காக ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டம்தான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி. இந்த இபிஎப் திட்டம் கடந்த 1952ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இபிஎப் நிதி சார்பில் ஓய்வு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

ஊழியர்களின் அடிப்படை சம்பளம், அகவிலைப்படியில் 12% தொழிலாளர் சேமநல நிதியாகப் பிடித்தம் செய்யப்படும். பணியாளரிடமிருந்து பிடிக்கப்படும் அதே அளவு தொகையை நிறுவனமும் வழங்கும். தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33% அல்லது அதிகபட்சமாக ரூ.1250 மாதந்தோறும் தொழிலாளரின் ஓய்வூதியத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும். நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் நிறுவனங்களில் பணியாற்றும் 6.42 கோடி பணியாளர்களை சந்தாதாரர்களாக கொண்ட பி.எப் திட்டத்தில், தற்போது 14 லட்சம் கோடி ரூபாய் வைப்பு நிதியாக சேர்ந்துள்ளது. அந்த தொழிலாளர்களின் வருங்கால சேமிப்பு மீதான வட்டி விகிதம், 8.10% ஆக குறைக்கப்பட்டிருப்பது சந்தாதாரர்களை  அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி ஒரே நேரத்தில் 0.40% குறைக்கப்பட்டிருப்பது அநீதியானது.

இந்த வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கு எந்த நியாயமும் இல்லை. கொரோனா பரவலால் நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்த 2020-21ம் ஆண்டில் கூட, வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.5% ஆகவே நீடித்தது. அப்போதுள்ள நிலையோடு ஒப்பிடும் போது 2021-22ம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, வருங்கால வைப்பு நிதி வாரியம் பங்கு சந்தையிலும், கடன் சந்தையிலும் செய்துள்ள முதலீடுகள் கணிசமான லாபம் ஈட்டியுள்ளது. ஆனாலும் சந்தாதாரர்களுக்கு 8.5% வட்டி கூட வழங்க மறுப்பது பெரும் அநீதி ஆகும்.

அடுத்தடுத்த வட்டி குறைப்புகள் தொழிலாளர்களின் ஓய்வுக்குப் பிந்தைய காலத்தை  பாதுகாப்பற்றதாக மாற்றிவிட்டது. தொழிலாளர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தான் உழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் ஓய்வுக்குப் பிந்தைய காலத்தை, வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியை குறைத்து, நிச்சயமற்றதாக்கிவிட்டது ஒன்றிய அரசு. பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி  செய்யும்  சிறப்பு மிக்க வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் பெரிய அளவில் மாற்றமின்றி நிலையானதாக இருப்பது நல்லது. அதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு, வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியை குறைப்பது தொழிலாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். தொழிலாளர்களுக்கு எதிர்காலம் பாதுகாப்பானதாக அமைவதை உறுதி செய்ய, அவர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி குறைப்பை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்